`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விள...
மும்பையின் முதல் பாஜக மேயராகும் ரிது தாவ்டே; சிவசேனாவிற்கு துணை மேயர் பதவி; முடிவுக்கு வந்த இழுபறி
மும்பை மாநகராட்சிக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 65 இடங்களில் வெற்றி பெற்றது.
பா.ஜ.க தனித்து மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கவில்லை. எனவே அக்கட்சி சிவசேனாவின் ஆதரவோடு மேயர் பதவிக்குப் போட்டியிட இருக்கிறது. எனவே மேயர் பதவிக்கு பா.ஜ.க ரிது தாவ்டே என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
சிவசேனா சார்பாக துணை மேயர் பதவிக்கு சஞ்சய் சங்கர் காதி என்பவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவிற்கு மேயர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி கோரி வந்த நிலையில் இப்போது மேயர் மற்றும் துணை மேயருக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சியாகக் கருதப்படும் மும்பையைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் கனவாக இருந்தது. அந்தக் கனவு இப்போது நிறைவேற இருக்கிறது. அதேசமயம் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிவசேனா அல்லாத ஒருவர் மும்பையில் மேயராகப் பதவியேற்க இருக்கிறார்.

மும்பை மேயர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரிது தாவ்டே முதல் முறையாக 2017ம் ஆண்டு காட்கோபர் பகுதியிலிருந்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதோடு அவர் மும்பை மாநகராட்சியில் கல்விக் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சய், தகிசர் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேயர் தேர்தல் வரும் 11ம் தேதி மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் சிவசேனா(உத்தவ்)வும் வேட்பாளரை நிறுத்த இருக்கிறது.
தங்களது வேட்பாளருக்கு 25 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ள காங்கிரஸ், ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மும்பை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக மேயர் இல்லாமல் மாநகராட்சி செயல்பட்டு வந்தது.

















