சென்னையில் பறவைக் காய்ச்சல்: `சிக்கன் பிரியர்களே உஷார்' - எது பாதுகாப்பு? மருத்த...
நள்ளிரவு கைது: `என் உயிருக்கு ஆபத்து' - 30 வருட பழைய வழக்கில் பீகார் எம்.பி மீது அதிரடி நடவடிக்கை
பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி சுயேட்சை எம்.பி பப்பு யாதவ். இவர் 1995-ம் ஆண்டு வீடு வாடகைக்கு எடுத்து அதில் எம்.பி அலுவலகம் அமைத்ததால், வீட்டு உரிமையாளர் மோசடி வழக்கை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வழக்கில் பாட்னா காவல்துறை நள்ளிரவில் அவரது இல்லத்தில் அதிரடியாகக் கைது நடவடிக்கை மேற்கொண்டது.
டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டு, நேற்று இரவுதான் பப்பு யாதவ் பாட்னா திரும்பினார். அவர் வீடு திரும்பிய ஒரு மணிநேரத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை அரசியல் அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல்துறை எம்.பி பப்பு யாதவை சூழ்ந்ததும், அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ``இது சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கு. நாளை நான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. அப்படி இருக்கும்போது, இப்போது ஏன் இந்த அவசரக் கைது? தேவைப்பட்டால் என்னை வீட்டுக் காவலிலேயே வைத்திருக்கலாம். நான் காவல் நிலையத்திற்கு வரமாட்டேன், நேரடியாக நீதிமன்றத்திற்கே வருவேன்.
எனது உடல்நிலை சரியில்லை. போலீஸார் என்னை எங்கே அழைத்துச் செல்கிறார்கள், எனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அவர்கள் சாதாரண உடையில் வந்ததைப் பார்த்தபோது, என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். இது ஒரு கிரிமினல் வீடா? அவர்கள் கையில் வைத்திருந்தது 'சொத்துக்களை முடக்கும்' (Attachment of Property) வாரண்ட் மட்டுமே. கைது செய்வதற்கான வாரண்ட் அவர்களிடம் இல்லை." என வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சமீபகாலமாக, நீட் தேர்வு எழுதும் மாணவியின் மரணம் போன்ற சம்பவங்களைக் கையாளுவதில் அரசின் திறமையின்மையை நான் சுட்டிக்காட்டி வருகிறேன். இது பாட்னா விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாகத் என்னிடம் தொலைபேசியில் முறையிட்டார்கள். அது குறித்து நான் சமீபத்தில் குரல் கொடுத்தேன். இதற்காகவே என் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது." என்றார்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து பாட்னா எஸ்.பி பானு பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது 1995-ம் ஆண்டு கார்டனிபாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. ஆவண மோசடி (பிரிவு 467) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் அவர் முறையாக ஆஜராகாததால், எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் பிணையில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

பப்பு யாதவ் கைதைத் தொடர்ந்து கைதின் போது ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக பப்பு யாதவ் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக IGIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, இன்று (சனிக்கிழமை) மதியம் பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


















