சென்னையில் பறவைக் காய்ச்சல்: `சிக்கன் பிரியர்களே உஷார்' - எது பாதுகாப்பு? மருத்த...
'தண்ணீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக்'- உணவுப் பாதுகாப்பு ஆணையம் தகவல்; நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
சமீபகாலமாக மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக விவாதங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. நேற்று மத்திய அரசு தரப்பில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அளித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், ``இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில், குடிநீர் பாட்டில்களின் மாதிரிகள், ஆய்வு செய்யப்பட்டன. இதில், மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பொதித்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் பொதித்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையை உண்ணுவதால், உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வுகள் விரைவில் முடிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வறிக்கையைப் பார்வையிட்ட நீதிபதிகள், ``குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய, குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்தனர்.




















