'இப்போ சந்தையில் எதற்கு நல்ல வாய்ப்பு?'- தங்கம், வெள்ளிக்கே அடுத்த இடம்; முதல் 2...
Doctor Vikatan: கோடையிலும் விடாமல் வாட்டும் இருமல்... தேன் சாப்பிட்டால் சரியாகுமா?
Doctor Vikatan: என் வயது 50. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கோடைக்காலம் ஆரம்பித்தது முதல் எனக்கு இருமல் விடாமல் தொடர்கிறது. வைரஸ் காயச்சல் வந்து சரியாகிவிட்டது. ஆனால், இருமல் மட்டும் நின்றபாடில்லை. மருத்துவரிடம் கேட்டால் இருமல் மருந்து குடிக்க வேண்டாம் என்கிறார். இருமலுடன் இன்னும் எத்தனை நாள்கள் அவதிப்படுவது... இதற்கு என்னதான் தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

உங்களைப் போலவே நிறைய பேருக்கு இந்த வருடம் இருமல் மிக அதிகமாக இருப்பதையும் பல நாள்கள் தொடர்வதையும் பார்க்கிறோம். அதற்கு முக்கியக் காரணம் காற்று மாசுபாடுதான். ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (Air Quality Index) எனப்படும் காற்றின் மாசு அளவுக் குறியீடு இந்த வருடம் மிக அதிகமாக இருக்கிறது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, அதன் தொடர்ச்சியாக இருமல் பல நாள்களுக்குத் தொடர்கிறது. எல்லா இருமலுக்கும் இருமல் சிரப் குடிக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கும். மருந்து வேண்டாம் என்றால் இருமலுக்கு என்னதான் தீர்வு என்ற கேள்வி, காலங்காலமாக பலருக்கும் இருக்கிறது.
மருத்துவத் துறையில் மிகவும் நம்பகமான ஒன்றாகக் கருதப்படும் காக்ரேன் ரெவ்யூவில் 5 ஆயிரம் நபர்களைக் கொண்ட ஆய்வு ஆதாரங்களை வைத்து இது குறித்து தகவல்கள் திரட்டினார்கள். அதன்படி அதில் எந்தத் தீர்வும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு சிறிய டிரையலில் குழந்தைகளுக்கு இருமல் வரும்போது தேன் பலன் தரலாம் என்று சொல்லப்பட்டது. அதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அந்த வகையில் இருமலுக்கு மேஜிக் தீர்வு என எதுவும் கிடையாது. மருத்துவர்கள் இருமலை இருவகையாகப் பிரிப்போம். சுவாசப்பாதையின் மேல் பகுதியில் பாதிப்பிருந்தால் அலர்ஜியின் காரணமாக ஏற்பட்ட இருமலாக இருக்கும். அலர்ஜிக்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

கீழ்ப் பகுதியில் பாதிப்பு என்றால், உங்கள் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய் தசைகள் திடீரென தன்னிச்சையாகச் சுருங்குவதைக் குறிக்கும் பிராங்கோஸ்பாசம் (Bronchospasm) பிரச்னைக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார். இருமல் விடாமல் தொடரும் பட்சத்தில், அளவுக்கதிக சூடான அல்லது அளவுக்கதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடக்கூடாது. ஏசி செய்யப்பட்ட சூழலில் இருந்து சட்டென, கொளுத்தும் வெயில் உள்ள இடத்துக்குப் போகக்கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் இருந்துவிட்டுதான் நகர வேண்டும். வெதுவெதுப்பான நீர், மிதமான சூட்டில் சூப் போன்றவற்றைக் குடிக்கலாம்.
இருமலைக் கட்டுப்படுத்தும் மிட்டாய்கள் ஓரளவு உதவலாம். வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய்க்கொப்பளிப்பதும் தொண்டைக்கு இதமாக இருக்கும். தேன், மஞ்சள் வைத்தியங்கள் எல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இருமல் என்பது மெள்ள மெள்ளத்தான் குறையும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வதுடன், வாழ்க்கைமுறையிலும் சில மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















