Iran War: Nuclear Weapons வைத்திருக்கிறதா Israel | US | Decode | Vikatan
Doctor Vikatan: தூக்கமின்மையால் சருமம் அதிக வறட்சியாக மாறுமா?
Doctor Vikatan: எனக்கு மாதத்தில் அதிகபட்சமாக பத்து நாள்கள்தான் சருமம் நன்றாக இருக்கிறது. மற்ற நாள்களில் அதிக வறட்சி அல்லது பருக்கள் அல்லது பொலிவே இல்லாதது என எனக்கே என் சருமத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை. சருமம் இப்படி மாறிக்கொண்டே இருக்குமா... சரியாகத் தூங்காவிட்டால் சருமம் வறட்சியாக மாறும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சீதோஷ்ண நிலைக்க்கேற்ப நம் சருமம் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது வெயில் காலத்தில் சருமம் ஒரு மாதிரியும், பனிக்காலத்தில் ஒரு மாதிரியும் இருப்பதை உணர்ந்திருப்போம். அது மட்டுமல்ல, முந்தைய நாள் இரவு என்ன சாப்பிட்டோம், எவ்வளவு தண்ணீர் குடித்தோம், எத்தனை மணி நேரம் தூங்கினோம் என்பதெல்லாம்கூட சரும ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.
ஸ்ட்ரெஸ்ஸில் இருந்தாலும் அது உங்கள் சருமத்தை பயங்கரமாக பாதிக்கும். மணப்பெண்ணாக இருப்பார்... விடிந்தால் திருமணம் என்ற நிலையில், காலையில் அவரது கன்னத்திலோ, நெற்றியிலோ திடீரென ஒரு பரு கிளம்பியிருக்கும். காரணம், ஸ்ட்ரெஸ். இன்டர்வியூவுக்கு செல்லும் நாள் அல்லது தேர்வெழுதப் போகும் நாளில், வாயெல்லாம் வறண்டு, உதடுகள் வெடித்துக் காணப்பட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும். அதுவும் ஸ்ட்ரெஸ்ஸின் அறிகுறியே...
உணவுக்கும் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கும்கூட தொடர்புண்டு. முதல்நாள் இரவு உங்களுக்கு மிகவும் பிடித்த சைனீஸ் உணவு சாப்பிட்டிருப்பீர்கள்... அதிலுள்ள அதிகபட்ச சோடியம் காரணமாக, மறுநாள் உங்களுக்கு உடல் எடையும் ஒன்றிரண்டு கிலோ அதிகரித்திருக்கும். சருமத்தின் தன்மையிலும் மாற்றத்தைப் பார்ப்பீர்கள்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, தூக்கத்துக்கும் சரும அழகுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. 'பியூட்டி ஸ்லீப்' ( Beauty sleep) என்றே ஒரு வார்த்தை உண்டு. இரவில் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் இருந்தால், அது சரும ஆரோக்கியத்தில் வெளிப்படும். 8 மணி நேரம்தானே கணக்கு என நள்ளிரவு 2 மணிக்குத் தூங்கி, மறுநாள் முற்பகலில் கண் விழிப்பதெல்லாம் தூக்க ஆரோக்கியத்தில் வராது. இரவு 9 மணிக்குத் தூங்கி, காலை 4 மணிக்கு எழுந்திருப்பதுதான் சரியானது. அந்த நேரத்தில் உங்கள் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக் கொள்ளும். புதிய செல்கள் உருவாகும். இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, காலையில் எழுந்திருக்கும்போது சருமம் அதீத வறட்சியோடு இருப்பதை உணர்வீர்கள்.
செல்போன் பார்த்துக்கொண்டே விழித்திருக்கும்போது, அந்த வெளிச்சத்தை மூளையானது பகல் எனப் புரிந்துகொண்டு, பகலில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யக் கட்டளையிடும். உடலுக்கு ஓய்வு கிடைக்காது. செல்கள் பழுதுபார்ப்பது நடக்காது. நீங்கள் ஆசைப்படுகிற பளபள சருமமோ, முதுமையே தெரியாத அழகோ சாத்தியமே ஆகாது. மேற்குறிப்பிட்டவற்றில் உங்களுக்கு எது பிரச்னையாக இருக்கிறது என்பதைப் பார்த்து அதைத் தவிரத்தாலே, மாதத்தின் எல்லா நாள்களிலும் உங்கள் சருமம் மின்னும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.





















