செய்திகள் :

Doctor Vikatan: பரவும் ஹன்டா வைரஸ்... கோவிட் தொற்றைவிட ஆபத்தானது என்கிறார்களே, உண்மையா?

post image

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் ஹன்டாவைரஸ் தொற்று பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இது கோவிட் வைரஸைவிட வீரியமானது என்றும், கொரோனா தொற்றையே மிஞ்சும் அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஆளாளுக்கு எச்சரிக்கிறார்களே, அது உண்மையா? ஹன்டா வைரஸ் குறித்து நாமும் பயப்பட வேண்டுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி   

டாக்டர் குமாரசாமி

ஹன்டாவைரஸ் (Hantavirus) என்பது ஒன்றல்ல, குழுவாக உள்ள வைரஸ் தொகுப்பு. இவை ரோடன்ட்ஸ் (Rodents) எனப்படும் எலி, பெருச்சாளி இனங்களில் இருக்கக்கூடியவை. அவற்றின் உமிழ்நீர், சிறுநீர், மலம் உள்ளிட்ட கழிவுகளில் காணப்படுவது.

இப்படி எலிகளின் கழிவுகளும் உமிழ்நீரும் நம் உடலிலோ, உணவிலோ பட்டு நம் மூக்கு அல்லது வாய்க்குள் சென்றால், அந்தத் தொற்றானது, மனிதர்களையும் பாதிக்கலாம். இந்த ஹண்டா வைரஸானது மனிதர்களிடமிருந்து இன்னொரு மனிதருக்குப் பரவுவது மிகவும் அரிது. ஹன்டா வைரஸில் நிறைய வகைகள் உள்ளன. வட அமெரிக்கா, தென் அமெரிக்காவில் ஒருவித ஹண்டா வைரஸ் இருக்கிறது. இது எலிகள் மூலம் பரவக்கூடியது.  அதை ஆண்டஸ் வைரஸ் (Andes Virus) என்று சொல்வார்கள்.  அது அர்ஜென்டினா நாட்டில் மிகவும் பரவலாகக் காணப்படுவது.

காய்ச்சல் என்கிற அறிகுறியைத்தான் முதலில் வெளிப்படுத்தும்.

காய்ச்சல் என்கிற அறிகுறியைத்தான் முதலில் வெளிப்படுத்தும். தீவிரமான உடல்வலி, தலைவலி, கழுத்துவலி போன்றவை இருக்கும். இவற்றைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படலாம். இதை 'ஹன்டாவைரஸ் கார்டியோ பல்மனரி சிண்ட்ரோம்' (Hantavirus Cardiopulmonary Syndrome) என்று  சொல்வோம். இப்படி சுவாசம் தொடர்பான பிரச்னை வந்தால், அதன் விளைவாக இறப்பு ஏற்பட 30 முதல் 50 சதவிகிதம் வாய்ப்பு உண்டு.

ஆரம்பத்திலேயே கவனித்து சத்தான உணவுகள், சிகிச்சைகள் கொடுத்தால், நுரையீரல் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். இதே ஹன்டாவைரஸ் ஆசியாவில், குறிப்பாக கொரியாவிலும், ஐரோப்பாவின் சில இடங்களிலும் ஏற்கெனவே பரவியிருக்கிறது.  இதில் காய்ச்சலும், கூடவே மூக்கு, காது, வாய் வழியே ப்ளீடிங்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இதை ரீனல் சிண்ட்ரோம் (Renal Syndrome) என்கிறோம். வட மற்றும் தென் அமெரிக்காவில் பரவும் ஹன்டா வைரஸானது, நுரையீரல் மற்றும் இதயத்தை பாதிக்கக்கூடியது. மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு இது பரவுவது அரிதினும் அரிது என்று பார்த்தோம். அதுவும் மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் இருவரிடம்தான் இது பரவும். அவர்களது உடலிலிருந்து வெளியேறும் கசிவின் மூலம் பிரதானமாகப் பரவும். 

பிசிஆர் டெஸ்ட் மூலம்தான் உறுதி செய்ய முடியும்.

காய்ச்சல், தலைவலி, தாங்க முடியாத உடல்வலி, வயிற்றுவலி, வாந்தி, குமட்டல் போன்றவைதான் பொதுவான அறிகுறிகள். ஒருவகை ஹன்டாவைரஸ் தொற்று நுரையீரலை பாதிக்கும். முறையான சப்போர்ட்டிவ் சிகிச்சைகள் கொடுக்காதபட்சத்தில் நுரையீரல் பழுதாகி, இறக்க நேரிடலாம். ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பரவும் ஹன்டா வைரஸ், ப்ளீடிங்கை ஏற்படுத்தும். லோ பிபி மற்றும் கிட்னி செயலிழப்பை ஏற்படுத்தும்.


ஹன்டா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைகளோ, தடுப்பூசியோ கிடையாது. சப்போர்ட்டிவ் சிகிச்சைகள் மட்டும்தான் பலனளிக்கும்.  கவனிக்காதபட்சத்தில் மரணம்தான் முடிவாகும். ஹன்டா வைரஸ் தொற்றானது கோவிட் தொற்று போன்றதல்ல, அதையும்விட தீவிரமானது. ஹன்டா வைரஸ் தொற்று பாதிப்பை, சம்பந்தப்பட்டவரின் ரத்தத்தை எடுத்துதான் டெஸ்ட் செய்து உறுதிபடுத்த முடியும். ஹன்டா வைரஸானது ஆர்.என்.ஏ வகை வைரஸ் என்பதால், இதை ஆர்டி பிசிஆர்  சோதனையின் மூலம்தான் உறுதிசெய்ய வேண்டும். இதைத் தவிர ஆன்டிபாடி டெஸ்ட்டுகளும் உள்ளன. ஆனால், அவற்றின் முடிவுகள் வர சற்று தாமதமாகும்.

எலிகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வசிப்பதைத் தவிர்ப்பதே முதல் தடுப்பு முறை. வீட்டுப் பணியாளர்கள், சுத்தம் செய்பவர்கள் போன்றோருக்கு இந்தத் தொற்று பாதிக்கும் ரிஸ்க் அதிகம் என்பதால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கிளவுஸ் அணிந்து வேலை செய்ய வேண்டும்.  சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 


அர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட ஒரு சொகுசுக் கப்பலில் இந்த வைரஸ் பரவியதாகச் சொல்கிறார்கள். அந்தக் கப்பலில் அர்ஜென்டினாவின் ஒரு நகரத்துக்குப் போயிருக்கிறார்கள். அங்கே நிறைய எலிகள் இருந்தனவாம். அங்கே மூன்று பேருக்கு முதலில் இந்தத் தொற்று பாதித்திருக்கிறது. அவர்களில் முதல் நபர் இறந்திருக்கிறார். அவரின் மனைவியை கப்பலில் இருந்து இறக்கி, ஊருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அப்படி அனுப்பிய ஃபிளைட்டில் இருந்த ஏர் ஹோஸ்டஸுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சீனாவின் வுஹான் நகரிலிருந்து இந்தியாவுக்கு வந்த கோவிட் தொற்று மாதிரி, இந்த வைரஸும் இடம்பெயர்தல் மூலம் பரவலாம்.  அந்த ஊரில் உள்ள எலிகள் இங்கு வந்தால் இங்கும் பரவும் என அர்த்தமில்லை. இந்தியாவிலும்கூட இந்த வைரஸ் தொற்று இருக்கலாம். 

நம்மூரில் பரவலாகக் காணப்படும் எலிக்காய்ச்சலும், ஹன்டா வைரஸ் தொற்றும் ஒன்றல்ல.

நம்மூரில் பரவலாகக் காணப்படும் எலிக்காய்ச்சலும், ஹன்டா வைரஸ் தொற்றும் ஒன்றல்ல. ஹன்டாவைரஸ் தொற்று நம்மூருக்கு வந்தால் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் அதிகம். காரணம், நம்மூரில் எலிகள் மிக அதிகம். அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தத் தொற்றைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் நிறைய முயற்சிகளை எடுக்கிறார்கள்.  காய்ச்சல், உடல் வலியோடு மருத்துவரை ஒருவர் அணுகும்போது அதை ஹன்டாவைரஸ் தொற்றாக யாருக்கும் பார்க்கத் தோன்றாது. கோவிட் தொற்றின் ஆரம்பத்திலும் அப்படித்தான் நடந்தது. பிறகு பரவல் அதிகரித்ததும் தொண்டை வலியோடு வருபவர்களை எல்லாம் சந்தேகத்தின் பேரில் டெஸ்ட் செய்ததும் நடந்தது.  நிறைய பேர் பாசிட்டிவ் ஆனார்கள். அதே போலவே இதையும் அணுக வேண்டும்.

இப்போதைக்குத் தடுப்பு நடவடிக்கைகள் முக்கியம்.  சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  டிராவல் செய்துவிட்டு வருபவர்களைக் கண்காணிக்க வேண்டும். 


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
  

Doctor Vikatan: டீன் ஏஜிலேயே எட்டிப் பார்க்கும் நரைமுடிகள்... ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: இந்தக் காலத்தில் டீன் ஏஜிலேயே பல பிள்ளைகளுக்கும் நரை முடிகள் அதிகரிப்பதைப் பார்க்கிறோம். இது இளநரை என்றும் ரிவர்ஸ் செய்துவிடலாம் என்றும் சொல்கிறார்களே.... டீன் ஏஜில் ஏற்படுகிற நரை முடி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சம்மர்: நீரிழிவு பாதித்தவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?

Doctor Vikatan: கோடைக்காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்கும் என் கணவருக்கும் நீரிழிவு இருக்கிறது. நாங்களும் ஆசைப்பட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விடுகிறோம். நீரிழிவு உள்ளவர்கள் இப... மேலும் பார்க்க

Doctor Vikatan: குதிகால் வலிக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 49. எனக்கு ஆறு மாதங்களுக்கு முன் இடது குதிகாலில் வலி வந்தது. அதற்கு நிறைய ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொண்டேன். ஆனால், சரியாகவில்லை. இப்போது இன்னொரு குதிகாலிலும் வலி ஆரம்பித்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடைக்காலத்தில் கர்ப்பம் கூடாதா, ஐவிஎஃப் சிகிச்சை செய்யக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை. உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு இப்போதுதான் ஐவிஎஃப் சிகிச்சைக்கு சம்மதம் சொல்லியிருக்கிறாள். இந்நிலையில் கோடைக்காலத்தில் ஐ... மேலும் பார்க்க

நெருங்கிய தொடர்பால் பரவும் புது ஆபத்து: உலகின் ஆபத்தான 'ஹான்டா வைரஸ்' குறித்து WHO எச்சரிப்பது என்ன?

அர்ஜென்டினாவிலிருந்து ஏப்ரல் 1-ம் தேதி 149 பயணிகளுடன் புறப்பட்ட ‘எம்.வி ஹோண்டியஸ்’ சுற்றுலா கப்பலில், அதிபயங்கர ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவியுள்ளது. அர்ஜென்டினாவில் பறவைக் கழிவுகளின் தூசியைச் சுவாசித்ததே ... மேலும் பார்க்க

அட்லாண்டிக்: சொகுசு கப்பலில் 'ஹண்டாவைரஸ்' தாக்குதல் - சிக்கிய 2 இந்தியர்கள்! - என்ன நடந்தது?

'ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்... மேலும் பார்க்க