Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?
Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?
Doctor Vikatan: என்னுடைய தோழி தினமும் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறாள். வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் அவள், காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக எடையைக் குறைக்க முடியும் என்றும் சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

காலை உணவைத் தவிர்ப்பது எடை குறைக்க உதவும் என்பது தவறான கருத்து. கண்டிப்பாக அனைவரும் காலை உணவு சாப்பிட வேண்டும்.
இரவு உணவை முடித்துவிட்டு, தூங்கும் நேரம், மறுநாள் காலை விழித்த பிறகு இயல்பான வேலைகளைச் செய்வது என நாம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறோம்.
அன்றைய நாள், மற்ற வேலைகளுக்குத் தேவையான சக்தியைப் பெற, காலையில் கட்டாயமாகச் சாப்பிட வேண்டும். காலை உணவைத் தவிர்த்து, நீண்ட நேரம் கழித்து மதிய உணவு (Lunch) சாப்பிடும்போது, 'இத்தனை மணி நேரத்துக்குப் பிறகு உணவு கிடைத்திருக்கிறது. அடுத்த உணவு எப்போது கிடைக்குமோ' என்ற எண்ணத்தில் கிடைக்கும் உணவில் உள்ள சக்தியை எல்லாம் உடல் உடனே உறிஞ்சிக் கொள்ளும். அது கொழுப்பாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, காலையில் பட்டினி இருப்பதால் எடை குறைய வாய்ப்பில்லை. ஆனால், இப்போது பலரும் 'இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) என்ற டயட் முறையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது, இரவு 7 மணிக்கு டின்னர் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில் 9 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது போல, 12 மணி நேரம்,14 மணிநேரம், 16 மணி நேரம் என விருப்பப்படி அந்த இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய உணவுமுறை எடைக்குறைப்புக்கும் ஓரளவுக்கு உதவுகிறது. மருத்துவ ஆலோசனையுடன் அதைப் பின்பற்றலாம்.
மற்றபடி, காலையில் வெறும் வயிற்றுடன் இருந்துவிட்டு, ஒரேயடியாக மதிய உணவைச் சாப்பிடுவதும், அதனால் வெயிட்லாஸ் ஆகும் என நம்புவதும் மிகவும் தவறு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















