திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன்; விரைவில் திருமணம் அருளும் குடைக...
Doctor Vikatan: சங்குப்பூ சேர்த்துத் தயாரிக்கப்படும் அழகு சாதனங்கள்; உண்மையிலேயே பலன் தருமா?
Doctor Vikatan: சங்குப்பூவை வைத்து சமீப காலமாக நிறைய அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதைக் கேள்விப்படுகிறோம். சங்குப்பூ என்பது சருமத்துக்கு உண்மையிலேயே நல்லதா? அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவத்தில் சங்குப்பூ உள்மருந்தாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிற முக்கிய மூலிகைகளில் ஒன்றாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பல கஷாயங்களில் சங்குப்பூ சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சங்குப்பூவின் மலர்களை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டீயாகப் பருகும் வயலட் டீ (Violet Tea) இப்போது மிகவும் பரவலாகப் பழக்கத்தில் உள்ளது. சங்குப்பூவில் தயாரிக்கப்படும் தேநீர், கபம் தொடர்பான பிரச்னைகளைக் குறைப்பதற்குப் பெரிதும் உதவுகிறது.
சங்குப்பூவை இஞ்சிச் சாற்றுடன் சேர்த்து (அரை டீஸ்பூன் அளவு) எடுத்துக் கொள்ளும்போது, சளி மற்றும் இருமல் குறையும். இது சிறந்த சிறுநீர் பெருக்கியாகச் (Diuretic) செயல்படுகிறது. இதனால் உடலில் தேவையற்ற நீர் கோப்பதால் ஏற்படும் வீக்கம் குறையும்.

சங்குப்பூச் செடியின் வேருக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, சங்குப்பூவின் வேர்கள் கழிச்சலை உண்டாக்கக் கூடிய (பேதி தூண்டும்) மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.
கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் (Liver Detoxification) செயல்முறைகளுக்காகத் தயாரிக்கப்படும் மருந்துகளிலும் இதன் வேர் முக்கியப் பங்கு வகிக்கிறது. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுவதற்கான மருந்தாகவும் இதன் வேர்கள் பயன்படுகின்றன.
வேர் மருத்துவத் தன்மை அதிகம் கொண்டது என்பதால், அதை மருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சித்த மருத்துவர்களின் பரிந்துரையோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கிராமப்புறங்களில், சங்குப்பூ இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து, கட்டிகள் மீது தடவும் வழக்கம் இன்றும் உள்ளது. சங்குப்பூவின் இதழ்களைப் பிற மூலிகைகளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் (Face Pack) அல்லது ஸ்க்ரப்பர் (Scrubber) போல இன்று பயன்படுத்துகிறார்கள்.
சங்குப்பூ சருமத்திற்கு மென்மையைத் தருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சங்குப்பூவின் மலர்கள் பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதால், அவற்றை உணவு மற்றும் அழகுப் பராமரிப்பு என உள்மருந்தாகவும் வெளிமருந்தாகவும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

ஆனாலும், சங்குப் பூக்களில் இயற்கையான நிறமிச் சத்துகள் (Pigments/Flavonoids) அதிகம் உள்ளன. அழகுப் பராமரிப்பில் இவற்றை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், எதில் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்து உபயோகிப்பது பாதுகாப்பானது.
தற்போது அழகு சார்ந்த தயாரிப்புகளில் இது குறித்து, பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகள் வெளியான பிறகு இது குறித்து முழுமையான தெளிவு கிடைக்கும் என நம்புவோம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















