அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த...
`விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்'- அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா?
"கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர் செல் செத்துப் போயிடும். வருஷத்துக்கு ஒருக்கா ஏழு நாள் விரதம் இருங்க. மொத்த கேன்சர் செல்லும் இறந்துடும்" என பாஜக-வின் முக்கிய நிர்வாகி அண்ணாமலை பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு ஆதரவாககவும் எதிராகவும் பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

விரதம் இருப்பதற்கும் கேன்சர் செல்கள் அழிவதற்கும் தொடர்பிருக்கிறதா என்று விளக்குகிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட்.
"விரதம் இருப்பதற்கும் புற்றுநோய்க்கும் நேரடி தொடர்பிருக்கிறா என்று மனிதர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வுகள் எதும் இதுவரை இல்லை. ஆனால், சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள், விலங்குகள் மீதான ஆய்வுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு இது ஓரளவு பயனளிக்கலாம் என்றும் இது தொடர்பான கூடுதல் ஆய்வுகள் தேவைப்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புற்றுநோய் சிகிச்சைக்கான மாற்றாக இதைக் கருத முடியாது. மேலும் விரதம் இருப்பது மட்டுமே புற்றுநோய்க்கான தனி சிகிச்சையாகவும் கருத முடியாது.
ஒவ்வொரு நபரின் உடலுக்குமான ஊட்டச்சத்து தேவைகள் வேறு வேறாக இருக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக எடை இழப்பு, ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்படும். எனவே, புற்றுநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையோ கீமோதெரபி சிகிச்சையோ கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் உடலில் குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ள முடியும்.

சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடுமா?
புற்றுநோய் செல்கள் வேகமாக பல்கிப் பெருகக்கூடிவை. குளுக்கோஸ் (சர்க்கரை) மட்டும் சார்ந்து பெருகக்கூடிய கேன்சர் செல்களுக்கு இது பயனளிக்கலாம். ஆனால், அனைத்து கேன்சர் செல்களும் குளுக்கோஸை மட்டும் எடுத்துக்கொண்டு பெருகக்கூடியவை கிடையாது. காரணம், புற்றுநோய் என்பது ரத்தத்திலும் வரலாம், எலும்புகளுக்குள்ளும் வரலாம், உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். எனவே, சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடும் என்பதைப் பொதுவான கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மேலும் கேன்சர் என்பது நாம் சாப்பிடும் உணவோடு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. மரபணு மாற்றங்களும் காரணம். ஒருவர் விரதம் இருக்கும்போது உடலில் இருக்கும் கொழுப்பு, தசை உள்ளிட்டவற்றில் இருந்தும் செல்கள் ஆற்றலை எடுத்துக்கொள்ளும். ஒருநபர் விரதம் இருந்தாலும் கேன்சர் செல்கள் உடலில் இருக்கிற ஆற்றலை வைத்தே உயிர் வாழக்கூடியவை. புற்றுநோய் சிகிச்சையைப் பொறுத்தவரை முழுமையான, சம நிலையான சிகிச்சை முறைகளைத் தான் பின்பற்ற வேண்டும்.

புற்றுநோய் வராமல் தடுக்குமா?
விரதம் இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என்பதற்கும் இன்னும் பெரிய அளவில் ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும், உடலில் கூடுதல் கலோரி சேர்வதைத் தடுப்பதற்கு விரதம் உதவக்கூடும். ஆனால், இதுவும் எல்லாருக்கும் பொருந்தாது. காரணம், ஒவ்வொருவரின் உடல்வாகு ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
அறிவியல் என்பது நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சைக்கு பயனளிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டால், மருத்துவர்கள் அதைப் பரிந்துரைப்பார்கள். ஆனால், அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லாமல் அதை முயற்சிப்பது சரியல்ல.

புற்றுநோயாளிகளுக்கு விரதம் இருப்பது தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் அவரவர் சிகிச்சை பெறும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. சுயமாக எதையும் முயற்சிக்க வேண்டாம்" என்கிறார் மருத்துவர் ஜெ. கென்னி ராபர்ட்.


















