"மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும்" - சி.டி.ஆர். நிர்...
Doctor Vikatan: சட்டென்று மாறும் வானிலை... உடனே உடல்நலம் பாதிக்கப்படுவது ஏன்?
Doctor Vikatan: இப்போதெல்லாம் கோடையில் மழை பெய்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இப்படி திடீர், திடீரென வானிலை மாறும்போது, சிலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது ஏன்...
உண்மையிலேயே, வானிலைக்கும் உடல்நலத்துக்கும் தொடர்பு உண்டா... முன் எச்சரிக்கையாக இதைத் தடுக்க ஏதேனும் சுய மருத்துவம் செய்ய முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

வெப்பம் அதிகரிக்கும் போது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மாறாக, குளிர்ச்சியான சூழல், வைரஸ்கள் நீண்ட நேரம் உயிர்வாழவும், காற்றில் எளிதாகப் பரவி நோய்களை உருவாக்கவும் சாதகமாக அமைகிறது.
மழைக்காலமாக இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து குளிர்ச்சியாகவோ அல்லது மழை பெய்வது போன்ற தட்பவெப்பநிலை இருந்தாலோ, காற்றில் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி அவை நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நோய்களை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, கோடை விடுமுறை நாள்களில் பெற்றோர் சந்திக்கும் ஸ்ட்ரெஸ்ஸைச் சொல்லலாம்.
கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் தாமதமாகத் தூங்கி, தாமதமாக எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பெற்றோர்கள் அல்லது முதியவர்களுக்கு அப்படியோர் ஓய்வு கிடைப்பதில்லை.
விடுமுறை நாள்களில் பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்துவது, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்காகத் திட்டமிடுதல், டிக்கெட் முன்பதிவு செய்தல் என அவர்களுக்கு வழக்கத்தைவிட வேலைகள் அதிகரிக்கின்றன. அதனால் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த மன அழுத்தமும் நோய்கள் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்து மற்றவர்களுக்கும் பரவுகிறது என்றால், குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் (Mask) அணிந்துகொள்வது மற்றும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.
ஒவ்வோர் ஆண்டும் வைரஸ் கிருமிகளுக்கான இன்ஃப்ளூயன்ஸா (Flu vaccine) தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது.
வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும்.
காய்ச்சல் அல்லது வைரஸ் பாதிப்பு இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி மிதமான சுடுநீர் குடிப்பது அவசியம்.
உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 7-8 மணிநேர ஆழ்ந்த உறக்கம் தேவை. நோயற்ற வாழ்க்கைக்கு அதுவும் முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.









.jpeg)








