திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி....
Doctor Vikatan: தினமும் பூண்டை பச்சையாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது உண்மையா?
Doctor Vikatan: என் உறவினர் ஒருவர், தினமும் இரவில் நான்கைந்து பற்கள் பூண்டை, பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் வைத்திருக்கிறார். அப்படிச் சாப்பிட்டால் எந்த உடல்நலப் பிரச்னையும் வராது என்கிறார். நிறைய வீடியோக்களிலும் இதைப் பார்க்க முடிகிறது. பச்சைப் பூண்டு சாப்பிடுவது உண்மையிலேயே ஆரோக்கியமானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.

பூண்டு காரத்தன்மை கொண்டது. எனவே, பூண்டை வெறும் வயிற்றில் பச்சையாகச் சாப்பிடுவது சரியானதல்ல. ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சாப்பிடலாமே தவிர, தொடர்ந்து அப்படிச் சாப்பிடக்கூடாது.
சமூக வலைத்தளங்களில் இப்படி தினமும் பச்சையாக பூண்டு சாப்பிடும்படி வரும் வீடியோக்கள், தகவல்களை அப்படியே நம்பி பின்பற்ற வேண்டாம்.
பூண்டை தொடர்ந்து பச்சையாகச் சாப்பிட்டால், இரைப்பை எரிச்சலை ( gastric irritation) ஏற்படுத்தும். உணவுக்குழாயிலும், வயிற்றிலும் எரிச்சலை உண்டாக்கும்.
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பலவித வைரஸ் தொற்றுகள் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை நீக்கவும் உதவும். தவிர, இது ஒரு நல்ல ஆன்டிபயாடிக் போல் வேலை செய்யக்கூடியது, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கவசமாக இதை அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்களுக்கும் பூண்டு மிக நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்றில் சேரும் வாயுவை வெளியேற்ற உதவும்.
பொதுவாக குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பூண்டு நல்லது. மூட்டுகளில் ஏற்படும் வலிகள், வீக்கம் ஆகியவற்றைக் குறைப்பதற்கும் கூட பூண்டு நல்ல மருந்தாகச் செயல்படும்.

இத்தனை நல்ல பலன்கள் உள்ள பூண்டை நாம் முழுமையாகச் சமைக்க வேண்டியதில்லை. அதில் உள்ள சத்துகள் ஆவியாகிவிடும் என்பதால், அதிகமாகச் சமைப்பதும் தவறு. அதற்காக, அதைப் பச்சையாகச் சாப்பிடுவதும் தவறு. பூண்டை எப்போதும் லேசாக வதக்கிப் பயன்படுத்தலாம். தாளிக்கும்போது இரண்டு பல் பூண்டைத் தட்டிப் போடலாம். ரசத்தில் தட்டிப் போடலாம். சூடான பாலில் பூண்டை தட்டிப்போட்டு, 5 நிமிடங்கள் அந்தச் சூட்டிலேயே விட்டுவிட்டு, வடிகட்டி அந்தப் பாலைக் குடிக்கலாம். இட்லி மிளகாய்ப் பொடி போல பொடி வகைகளில் பூண்டை வதக்கிச் சேர்த்துச் சாப்பிடலாம். இப்படியெல்லாம் சாப்பிட்டால்தான் பூண்டை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ள முடியும். பச்சையாகச் சாப்பிட்டால், ஒரு கட்டத்தில் பூண்டைப் பார்த்தாலே ஓடி ஒளியும் அளவுக்கு அதன் மேல் வெறுப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல என்பதால் பச்சைப் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்ப்பதே சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

















