EB ஹார்ட் டிஸ்க் விவகாரம்: ``யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது" - அமைச்சர் நிர்...
EB ஹார்ட் டிஸ்க் விவகாரம்: ``யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது" - அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தற்போது விஜிலன்ஸ் குழுவினர் அனைத்துத் தளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆவணங்கள் எதுவும் திருடு போகாதபடி பாதுகாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதோடு, பழுதடைந்த சிசிடிவி கேமராக்களும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் தி.மு.க -வை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும், ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். யார் யாரையும் காப்பாற்றவில்லை. கண்டிப்பாக யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டனை பெற்றுத்தரப்படும். யாரும் எதையும் மறைக்க முடியாது.
மொத்தம் 18 ஹார்ட் டிஸ்க்குகள் ரேண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெண்டர் தொடர்பான மிக முக்கியமான தரவுகளைக் கொண்டவை. இந்தத் தரவுகளின் கூடுதல் பிரதிகள் வேறு இடங்களில் இருப்பதால் அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் பெங்களூருக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உள்ளே இருக்கும் சிலரின் உதவியோடு இது நடந்திருக்கலாம் என்பதால் காவல்துறை விசாரணை முடிந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும்.
7 முதல் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்மாற்றிகளை செந்தில் பாலாஜி காலத்தில் 13 லட்சம் ரூபாய்க்கு கொட்டேஷன் கொடுத்து ஒப்புதல் பெற்றுள்ளனர். இந்த எஸ்டிமேஷன் முறைகேட்டால்தான் வழக்கு சிபிஐ வரை சென்றுள்ளது. கடந்த 5 வருடங்களாக சோலார் மின்சாரம் மற்றும் Ash விற்பனையில் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், புரோக்கர்களுக்கு ஒரு மெகாவாட்டுக்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை கமிஷன் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் அவலநிலை இருந்தது.
இனி பழைய கொள்முதல் முறையை மட்டும் பார்க்காமல், மார்க்கெட் ரேட் மற்றும் மேனுஃபேக்சர் ரேட் ஆகியவற்றை அசெஸ் செய்து புதிய டெண்டர் பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது. சோலார் மின் உற்பத்தியில் புரோக்கர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க, லோட் ஃப்ளோ ஸ்டடி மற்றும் ஒதுக்கீடுகளை வெளிப்படையாக மேற்கொள்ள புதிய இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல துறைகளில் கடந்த காலங்களில் நடந்த விதிமீறல்கள் அனைத்தும் வேலிடேட் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சில வாரங்களில், மின்சாரத் துறையில் என்னென்ன சீரமைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த அறிக்கை பப்ளிஷ் செய்யப்படும்.
மேகதாது அணை விவகாரத்தில் 'தமிழக முதலமைச்சரின் அனுமதி தேவையில்லை, மத்திய அரசுதான் அனுமதி தர வேண்டும்' என்று சிவகுமார் பேசுவது கண்டனத்திற்குரியது. இரு மாநில மக்களிடையே வெறுப்பைத் தூண்டி, பொது அமைதியைக் கெடுத்து அரசியல் செய்ய சிவகுமார் முயற்சிக்கிறார். நாம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், இந்த விவகாரத்தில் தற்காலிகமான 'அரசியல் தீர்வு' நமக்குத் தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியம் மூலம் 'சட்டப்பூர்வமான நிரந்தரத் தீர்வை' நோக்கியே தமிழக அரசு உறுதியாக நகர்கிறது.

இறுதியாக மின்வெட்டு மற்றும் மின்கட்டண விவகாரங்கள் குறித்து பொதுமக்களுக்கு உண்மை நிலவரத்தைக் கூறும் வகையில், நாளை முதல் எந்தெந்தப் பகுதிகளில் பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது, அதற்கான காரணம் என்ன, எவ்வளவு நேரத்தில் சரி செய்யப்படும் என்ற விவரங்கள் வெளிப்படையாகப் பிரசுரிக்கப்படும். மேலும், லோட் ஃப்ளோ ஸ்டடி சரியாக உள்ள ஜென்யூன் வெண்டர்ஸிற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கும் பணிகள் வேலிடேஷன் செய்யப்பட்டு, நாளை முதலே தொடங்கப்படும். இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்தால் சொல்கிறோம்." என்றார்.












