சிறுமி பாலியல் வன்கொடுமை: ``எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு..." - எம்.பி க...
திருமணம் மீறிய உறவு; வீட்டுக்குள் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (60). சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்தார். இவர் மனைவி அமுதா (50). இவர்களது மகன் சிவராஜ், மகள் சிவரஞ்சனி. இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. சிவராஜ் தனது மனைவியுடன் திருப்பூரில் வசிக்கிறார். சிவரஞ்சனி கணவர் வீட்டில் வசிக்கிறார்.

அமுதாவின் உடன் பிறந்த சகோதரி கண்ணம்மா (60). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கண்ணம்மாவுக்கும், சிதம்பரத்திற்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் வீட்டில்தான் கண்ணமாவும் வசித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணம்மாவும், சிதம்பரமும் சேர்ந்து, அமுதாவை கண்டபடி பேசி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனராம். இதனால் அமுதா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
கணவரும் தனது சகோதரியும் திருமணம் மீறிய உறவில் இருப்பது அமுதாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் சிதம்பரத்திடம் சண்டை போட்டு வந்துள்ளார். அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை நடக்குமாம். அப்போது சிதம்பரம், கண்ணம்மா இருவரும் அமுதாவை கொடுமைப்படுத்துவார்களாம். 2-ம் தேதி மாலையும் இதுபோல் சண்டை நடந்ததாகச் சொல்கிறார்கள்.

இதனால் இருவர் மீதும் அமுதா கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். அப்போது கணவர் சிதம்பரம், சகோதரி கண்ணம்மா இருவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்து திட்டம் போட்டுள்ளார் அமுதா. இதையடுத்து இரவானதும் சிதம்பரம், கண்ணம்மா இருவரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி பெட்ரோல் வாங்கி வைத்திருந்துள்ளார் அமுதா. மேலும் இருவரும் தூங்கும் அறையின் வெளிப்பக்கத்தில் மூடியவர், வீட்டின் வெளிக் கதவையும் பூட்டி விட்டதாகச் சொல்கிறார்கள்.
இதையடுத்து ஜன்னல் வழியாக அறைக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். மள மளவென அறை முழுக்கத் தீ பரவியது. தீ உள்ளுக்குள் இருந்த இருவர் மீதும் பற்றிக்கொள்ள... தாங்க முடியாமல் அலறியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். பலத்த தீ காயமடைந்த சிதம்பரம், கண்ணம்மா ஆகிய இருவரையும் மீட்டு, சிகிசைக்காக சேர்த்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து பேராவூரணி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், அமுதா இந்த படுபயங்கர காரியத்தை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அமுதாவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். அப்போது, ``கடந்த 20 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவில் இருந்து என்னை டார்ச்சர் செய்த இருவரையும் தீர்த்துக் கட்டிட்டேன். இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்று அமுதா கூற, அதைக் கேட்டபோலீஸார் அதிர்ந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.
















