Q2 Result | SBI, Bajaj Finserv | சந்தை ஏற்றம் தொடருமா? | IPS Finance - 646
Era Murugan: `அரசூர் வம்சம், மிளகு' நாவல்களின் ஆசிரியர், எழுத்தாளர் இரா.முருகன் காலமானார்!
தமிழ் நவீன இலக்கிய உலகில் தனது தனித்துவமான எழுத்து நடை, சுவாரஸ்யமான கதை சொல்லும் உத்தி, சிறப்பான மொழி ஆளுமை ஆகியவற்றால் வாசகர்களைக் கவர்ந்த முக்கியப் படைப்பாளியான எழுத்தாளர் இரா.முருகன் (73) அவர்கள் இன்று காலமானார்.
சிவகங்கையில் பிறந்த இரா.முருகன், புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தனது உயர் கல்வியை முடித்தார். தனது பணியை வங்கி அதிகாரியாகத் தொடங்கி, வங்கி கணினித் துறையில் மென்பொருள் வடிவமைக்கும் தொழில்நுட்ப வல்லுநராக உயர்ந்தார். பின்னர் பன்னாட்டு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாறி இந்தியா, பிரிட்டன், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
சென்னையில் வசித்து வந்த இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், இந்தியக் கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் முருகன் என்ற மகனும் உள்ளனர். இவரது இலக்கியப் பயணம் 1977-78 காலக்கட்டத்தில் கணையாழி இதழில் வெளியான புதுக்கவிதையின் மூலம் தொடங்கியது. எழுத்தாளர் சுஜாதாவினால் பாராட்டப்பட்ட அந்தக் கவிதையின் மூலம் கவனம் பெற்றார். தகவல் தொழில்நுட்பத் துறையைப் பின்னணியாகக் கொண்டு இவர் எழுதிய 'மூன்று விரல்' நாவல், தமிழ் இலக்கியத்தில் மென்பொருள் துறை சார்ந்த முன்னோடிப் படைப்பாகக் கருதப்படுகிறது.
தொழில்நுட்பக் களங்களை இயல்பாகவும் நகைச்சுவையுடனும் கையாண்டதால், வாசகர்கள் இவரைச் செல்லமாக 'சின்ன வாத்தியார்' என்று அழைத்தனர். இவரது சுவாரஸ்யமான கதை சொல்லும் பாணியை எழுத்தாளர் சுஜாதா பல்வேறு சூழல்களில் பாராட்டியிருக்கிறார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கிய இவர் 39-க்கும் மேற்பட்ட நூல்களையும், 15-க்கும் மேற்பட்ட தனி மின் நூல்களையும் எழுதியுள்ளார்.
‘சைக்கிள் முனி’, ‘தகவல்காரர்’, ‘தேர்’, ‘ஆதம்பூர்க்காரர்கள்’, ‘சிலிக்கன் வாசல்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகளாகும். 'திண்ணை' இணைய இதழில் தொடராக வெளிவந்த 'அரசூர் வம்சம்' என்ற மாந்திரீக யதார்த்த நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் ஆங்கிலப் பதிப்பான 'The Ghosts of Arasur', புகழ்பெற்ற க்ராஸ்வேர்ட் (Crossword) விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றுச் சாதனை படைத்தது. மேலும் இந்நாவலின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம்’ என்ற நாவலையும் அவர் எழுதினார்.
ஆனந்த விகடனில் இவர் எழுதிய 'உலகே உலகே உடனே வா' தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் விட்டல் ராவ் தொகுத்த 'இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள்' தொகுப்பில் இவரது 'உத்தராயணம்' சிறுகதை சேர்க்கப்பட்டது. தன் நண்பர்களுடன் இணைந்து இவர் நடத்திய 'ராயர் காபி கிளப்' என்ற யாஹூ குழுமம், பா.ராகவன், ஆர். வெங்கடேஷ், என். சொக்கன், நாகூர் ரூமி போன்ற பல எழுத்தாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் களமாக அமைந்தது. 'நம்பர் 40 ரெட்டைத் தெரு', 'குட்டப்பன் கார்னர் ஷாப்' போன்ற படைப்புகளும் இவரது பன்முக எழுத்து அனுபவத்திற்குச் சான்றுகளாகும்.
இலக்கியத் துறை மட்டுமன்றித் திரைத்துறையிலும் தடம் பதித்த இவர், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ மற்றும் ‘பில்லா-2’ திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் ‘ரெட்டைத் தெரு’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் இருந்து பல சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள இவர், அருண் கொலாட்கரின் அனைத்து மராட்டியக் கவிதைகளையும் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
``கிட்டத்தட்ட 1200 பக்கங்கள் கொண்ட மிளகு நாவலை மூன்று நாளில் வாசித்தேன் என்று ஒரு வாசகி கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புதுமைப் பித்தன் சொல்கிற புரிந்து கொள்ளக் கடினமான இரும்புக் கடலைகள் இல்லை என் எழுத்துகள். படிக்க முடியாத ஒரு வரியைக் கூட எழுதக்கூடாதுன்னு தீர்மானம் செய்து எழுதுவது அது. வேகமாக வாசிப்பதைத் தவிரப் படித்துவிட்டு உள்வாங்கி அதைப்பற்றிக் கருத்து மோதலாகச் சண்டை போடவோ இல்லை மனம் திறந்து பாராட்டவோ முடிந்தது என்றால் எனக்கு இன்னும் சந்தோஷமாக இருக்கும்." - இரா.முருகன் | நன்றி: வாசகசாலை
இவரது சிறந்த படைப்பாற்றலுக்காக இலக்கியச் சிந்தனை விருது, கதா விருது, பாரதியார் பல்கலைக்கழக விருது, என்.சி.சி.ஆர்.டி (N.C.C.R.T) விருது மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 2024-ம் ஆண்டுக்கான 'விஷ்ணுபுரம் இலக்கிய விருது' இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழ் நவீன இலக்கியத்தைப் புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்ற முன்னோடி எழுத்தாளர் இரா. முருகன் அவர்களின் மறைவு தமிழ் எழுத்து உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.



















