செய்திகள் :

FIFA 2026: பீர் தீர்ந்தது, நகரம் அதிர்ந்தது - 28 வருட ஏக்கத்தைக் கொண்டாடிய ஸ்காட்லாந்து ரசிகர்கள்!

post image

2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழாவின்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுதான் இது.

கால்பந்து என்றாலே கொண்டாட்டம்தான், ஆனால் இந்த நிகழ்வு இரண்டு வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையே அன்பையும், நட்பையும் விதைத்து அழகான விஷயமாக மாறியுள்ளது.

FIFA 2026 ஸ்காட்லாந்து
FIFA 2026 ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து நாட்டின் தேசிய கால்பந்து அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று சுமார் 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருட காத்திருப்புக்குப் பிறகு, 2026 உலகக் கோப்பையில் தங்களது அணி களமிறங்குவதைக் காண சுமார் 30,000 ஸ்காட்லாந்து ரசிகர்கள் (இவர்களை 'Tartan Army' என்று அன்போடு அழைப்பார்கள்) அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் குவிந்தனர்.

மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஜில்லெட் மைதானத்தில் ஸ்காட்லாந்து அணி, ஹைட்டி (Haiti) மற்றும் மொராக்கோ (Morocco) அணிகளுடன் மோதியது. ஒரு போட்டிக்காக வந்தவர்கள், ஒரு நகரத்தின் இதயத்தையே வென்றுள்ளார்கள்.

பாஸ்டனின் ஒரு அமைதியான பகுதியில் உள்ள Airbnb விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஸ்காட்லாந்து ரசிகர்கள், அதிகாலை 6.30 மணிக்குத் தங்களது பாரம்பர்ய இசைக்கருவியான பேக்பைப்பை வாசிக்கத் தொடங்கினர்.

சாதாரணமாக இதை ஒரு தொந்தரவாக நினைத்து அக்கம் பக்கத்தினர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மைக் மோரிசன் என்ற உள்ளூர்வாசி, அந்த இசையையும் அவர்களின் உற்சாகத்தையும் ரசித்து, அவர்களுக்கு காலை உணவாக சாசேஜ் சமைத்துக் கொடுத்து அவர்களுடன் இணைந்து கொண்டார்.

ஸ்காட்லாந்து ரசிகர்கள் மைக்கை தங்கள் குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு சான்றிதழ் வழங்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து அணியின் அடுத்த போட்டியை நேரில் காண, மைக் மோரிசனை மியாமி நகருக்கு Airbnb நிறுவனம் தனது சொந்தச் செலவில் அனுப்பி வைத்தது!

FIFA 2026 ஸ்காட்லாந்து
FIFA 2026 ஸ்காட்லாந்து

`ஸ்காட்லாந்து இல்லை என்றால் பார்ட்டி இல்லை’ (No Scotland – No party) என்பது அவர்களின் முழக்கமாக இருந்தது. பாஸ்டன் நகரமே இவர்களின் மது அருந்தும் வேகத்தைப் பார்த்து மிரண்டு போனது. டவுன்டவுனில் உள்ள 'சாமுவேல் ஆடம்ஸ்' என்ற பிரபலமான மதுபான விடுதியில், வெறும் 4 நாள்களில் சுமார் 4,000 பைண்ட் (Pints) பீர் குடித்துத் தீர்த்தனர்.

இது அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4 கொண்டாட்டத்தில் விற்பனையாவதை விட 4 மடங்கு அதிகம்! பீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அந்த விடுதிக்கு 4 முறை 'அவசரகால சப்ளை' செய்யப்பட்டது. "பாஸ்டனில் பீர் தீர்ந்துவிட்டது" என்பது சமூக வலைத்தளங்களில் வைரல் மீம் ஆக மாறியது.

பாஸ்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபேனுவில் ஹால் அருகே ஒரு அற்புதமான கலாசார இணைவு நடந்தது. ஸ்காட்லாந்து பேக்பைப் கலைஞர் ஒருவரும், அங்கிருந்த உள்ளூர் தெருவோர டிரம்மர் ஒருவரும் எந்தவித ஒத்திகையும் இன்றி இணைந்து இசைக்கத் தொடங்கினர். இரு வேறு தேசத்து இசைகள் ஒன்றாகச் சங்கமித்த அந்தத் தருணம் அங்கு கூடியிருந்த பெரிய கூட்டத்தை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

ரசிகர்களின் இந்த அன்பான அட்டகாசங்களில் பாஸ்டன் காவல்துறையினரும் தங்களை இணைத்துக் கொண்டனர். சார்ஜென்ட் கானர் ஹார்டி என்ற அதிகாரி, தனது முழு காவல் சீருடையுடன், துப்பாக்கிகளைச் சுமந்தபடியே ரசிகர்களுடன் சேர்ந்து கால்பந்தை காலில் வைத்து வித்தைக் காட்டிய வீடியோ பலரைக் கவர்ந்தது. இதற்காக அவரது கேப்டன் அவருக்கு ஸ்காட்லாந்தின் பாரம்பரிய ஆடையான 'கில்ட்' ஒன்றை பரிசளித்தார்.

FIFA 2026 ஸ்காட்லாந்து
FIFA 2026 ஸ்காட்லாந்து

அருகில் உள்ள ரோட் தீவின் காவல் துறை அதிகாரி ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இவர்கள் எங்கள் ஊரை விட்டுச் செல்வது எங்களுக்குச் சிறிதும் விருப்பமில்லை!" என்றார். ஸ்காட்லாந்து அணியின் போட்டிகள் முடிந்து அவர்கள் ஊர் திரும்பும் நேரம் வந்தபோது ஒட்டுமொத்த பாஸ்டன் நகரமும் சோகத்தில் ஆழ்ந்தது.

பாஸ்டன் நகரின் புகழ்பெற்ற நாளிதழான 'The Boston Globe', ஸ்காட்லாந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு முழுப்பக்க விடைபெறும் செய்தியை வெளியிட்டது. இந்த அன்பின் அடையாளமாக, பாஸ்டன் நகர மேயர் மிச்செல் வூ, பாஸ்டன் மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரங்களை 'சகோதர நகரங்களாக' இணைப்பதற்கான திட்டத்தை அறிவித்தார்.

டேவிட் லா என்ற உள்ளூர் இசைக்கலைஞர், ஸ்காட்லாந்து மக்களைப் பெருமைப்படுத்தி "When the Tartan Came to Boston" என்ற ஒரு நாட்டுப்புறப் பாடலை எழுதி வெளியிட்டார். "30,000 அறிமுகமில்லாத மனிதர்கள் வந்து, நாம் அனைவரும் அண்டை வீட்டுக்காரர்கள்தான் என்பதை எங்களுக்கு நினைவூட்டினார்கள்" என்ற அந்தப் பாடலின் வரிகள் காண்போரை ஆனந்தக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது.

FIFA 2026 ஸ்காட்லாந்து
FIFA 2026 ஸ்காட்லாந்து

சுருக்கமாகச் சொன்னால், இது வெறும் கால்பந்து குறித்த செய்தி அல்ல. மொழி, நாடு, எல்லைகள் என அனைத்தையும் தாண்டி, விளையாட்டு எப்படி மனிதர்களை அன்பால் இணைக்கிறது என்பதற்கான சாட்சியாக இந்த 30,000 ஸ்காட்லாந்து ரசிகர்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு நல்ல விளையாட்டுக்கு அழகு இத்தகைய கொண்டாட்டாங்களின் இதயமாக இருப்பதுதான்.

மும்பை டு ராஜஸ்தான் : அணி மாறும் ஹர்திக்? - டிரேடிங்கில் மும்பை கேட்கும் வீரர் யார்?

ஐபிஎல் தொடர் முடிந்தாலும், அணிகளுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த பரபரப்புக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப் பெரிய புயல் வீசத் தொடங்கி... மேலும் பார்க்க

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !

விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூ... மேலும் பார்க்க

FIFA: ஃபிஃபாவின் புதிய மரபு; இரண்டு அரிய அடையாளங்களுடன் களமிறங்கிய லூகா மோட்ரிச்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 'Group L' பிரிவின் ஆரம்பச் சுற்று ஆட்டத்தில், உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங... மேலும் பார்க்க

தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி!

இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை திருவிழா. குரூப் A, குரூப் B என மொத்தம் 12 அணிகள் களம் காணும் இந்தத் தொடரில், ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கையோடு இருபது ... மேலும் பார்க்க

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க