ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணம்... காதலனுடன் சேர்ந்து திட்டம்; மருத்துவமனையில் வைத்து ...
"G7 நாடுகள் இனி உலகை ஆள முடியாது" - சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து கனடா பிரதமர்
உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க G7 அமைப்பு நாட்டின் தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர்.
இந்த அமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் சனாயே தகாச்சி, பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.
இவர்களுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விடுத்த சிறப்பழைப்பை ஏற்று, G7 அல்லாத நாடுகளின் தலைவர்களான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மற்றும் கென்ய அதிபர் வில்லியம் ருட்டோ ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ஐரோப்பாவிற்கு ஆறு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ``முன்பொரு காலத்தில் உலகை G7 நாடுகள் வழிநடத்தியதாகக் கருதப்பட்டிருந்தாலும், இனி அது சாத்தியமில்லை. தாங்கள் மட்டுமே உலகை ஆள்வதாக இனி அந்த நாடுகள் பாசாங்கு கூட செய்ய முடியாமல் தற்போதைய சூழல் உணர்த்தியுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள பரந்த அளவிலான சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதை இந்தியா போன்ற நாடுகளின் பங்கேற்பு உணர்த்துகிறது.
தற்போது நடைபெறும் இந்த மாநாட்டில் G7 உறுப்பு நாடுகள் மட்டுமின்றி இந்தியா, பிரேசில், எகிப்து, கென்யா மற்றும் பல வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நட்பு நாடுகளும் பங்கேற்கின்றனர். உலகளாவிய பிரச்னைகளுக்கான தீர்வுகளில் இந்த நாடுகள் தங்களின் பரந்த தொலைநோக்குப் பார்வையையும், வலுவான பங்களிப்பையும் வழங்கும்.
இந்த மாநாடு ஒரு புதிய உலக ஒழுங்கமைப்பிற்குப் புத்துயிர் ஊட்ட உதவும். உலகப் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் நடுத்தர நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் நான் பேசியிருந்தேன்" என்றார்.















