கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்...
ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணம்... காதலனுடன் சேர்ந்து திட்டம்; மருத்துவமனையில் வைத்து கணவரைக் கொன்ற மனைவி
கர்நாடகா மாநிலம், பெலகாவி என்ற இடத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தீப், கடந்த மார்ச் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லேசான விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அவர் சிகிச்சைக்காக முதலில் ஹுக்கேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவர் மனைவி சுமா மஞ்சர்கியால் கட்டபிரபாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது கணவரை மாற்றினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாள்களில் சந்தீப் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனையில் உடலில் எந்த வித விஷமும் கலந்திருந்ததற்காக அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால் சந்தீப்பிற்கு விபத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருக்கவில்லை. அதோடு விபத்துக்கு முன்பு எந்த வித மருத்துவ பிரச்னைகளும் இல்லை. எனவே அவரது மரணத்தில் தொடர்ந்து போலீஸாருக்கு சந்தேகம் இருந்து வந்தது.
காட்டிக்கொடுத்த சோசியல் மீடியா பதிவு
இறந்துபோன சந்தீப் மனைவி சுமாவின் காதலன் புண்டலிக் டோம்பர், `விபத்தில் சிக்கிய ஒருவர் திடீரென எப்படி இறந்தார்?' என்று கேள்வி எழுப்பி சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் இந்த வழக்கு பற்றிய தகவல் தனக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அந்தப் பதிவு இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் புண்டலிக் உண்மையை தெரிவித்தார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``புண்டலிக் டோம்பரும் சந்தீப் மஞ்சர்கியும் ஒரு வணிக சங்கம் மூலம் அறிமுகமாகியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து கூட்டாக ஒரு ஹோட்டல் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் சுமாவும், புண்டலிக்கும் அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் இருவருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டது. சந்தீப் பெயரில் மூன்று வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் ஏறக்குறைய ரூ.2 கோடி மதிப்புள்ள காப்பீட்டு பாலிசிகள் எடுக்கப்பட்டிருப்பது, விசாரணையில் தெரியவந்தது.
இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக திட்டமிட்டு கொலை நடந்திருக்கலாம் எனக் கருதுகிறோம். விசாரணையின் போது, சந்தீப் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, மருத்துவமனை ஊழியர்கள் கொலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாறிச் செயல்பட்டுள்ளனர். சிகிச்சையின் போது, சுமாவும், புண்டலிக்கும் சலைன் பாட்டிலில் விஷம் கலந்து அவருக்கு தூக்க மாத்திரையும் கொடுத்துள்ளனர். கொலையை மறைக்க மருத்துவ மற்றும் தடயவியல் பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் மருத்துவமனை ஊழியர்கள், ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட பல நபர்கள் கொலையை இயற்கையாக நடந்த மரணமாக காட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் ஆய்வு அறிக்கையை மாற்ற ரூ.3 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இக்கொலை தொடர்பாக சுமா மஞ்சர்க், புண்டலிக் டோம்பார், டாக்டர் பசவராஜ் பாஸ்மே, தடயவியல் அதிகாரி அசோக் குஜனால், எழுத்தர் அப்பா சாஹேப் நாயக், ஆய்வக உதவியாளர் சன்னய்யா ஆதிவிஸ்வாமிமத், மூத்த அறிவியல் அதிகாரி பி.என் நாகராஜ் மற்றும் டோம்பாரின் கூட்டாளிகள் சச்சின் செலர் மற்றும் ராகுல் ஜோகி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் இதே போன்ற ஒரு கொலை வழக்கு சாலை விபத்தாக அரங்கேற்றப்பட்டது. ராஜையா என்பவரை அவர் மனைவி கஞ்சர்லா ரேணுகா மற்றும் அவரது காதலன் கஞ்சர்லா கங்கசேகர் ஆகியோர் சேர்ந்து இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலைசெய்தது விசாரணையில் தெரிய வந்தது. ராஜையாவும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.



















