நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! - ...
IPL: "டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஆடிய விதம் இருக்கே.!" - கேப்டன் இஷான் கிஷன் நெகிழ்ச்சி
ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் 16 ஓவர்களிலேயே 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி தனது புள்ளிப்பட்டியலில் கணக்கைத் தொடங்கியுள்ளது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் இஷான் கிஷன் ``தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்தை விட, ஒரு அணியாக நாங்கள் காட்டிய ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். போட்டிக்கு முன்பாக வீரர்களிடம் நான் எதை எதிர்பார்த்தேனோ, அந்த உழைப்பையும் ஆற்றலையும் அவர்கள் மைதானத்தில் வெளிப்படுத்தினார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய அவ்வளவு எளிதாக இல்லை.
ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆடிய விதம் ஆட்டத்தை எங்களுக்குச் சாதகமாக மாற்றியது. பவர்பிளேயிலேயே அவர்கள் சுமார் 80 ரன்கள் சேர்த்ததால், மற்ற பேட்டர்களுக்கு ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு விளையாட போதிய நேரம் கிடைத்தது. ஹர்ஷ் துபே வீசிய அந்தப் பந்தில் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு விக்கெட் கிடைத்தது. ஹர்ஷ் தனது உள்நாட்டுப் போட்டிகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஷிவாங் குமார் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். ஈடன் கார்டன் போன்ற சிறிய மைதானத்தில், ரின்கு சிங் போன்ற அதிரடி வீரர்களுக்கு எதிராக மிகுந்த மன உறுதியுடன் பந்துவீசினார்.

இருப்பினும், பீல்டிங் துறையில் நாங்கள் ஒரு அணியாக இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 20 ரன்கள் வரை பீல்டிங்கில் விட்டுக்கொடுப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. டி20 கிரிக்கெட்டில் 10 அல்லது 20 ரன்கள் என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, அந்தத் தவறுகளைச் சரிசெய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் வலிமையாகத் திரும்புவோம்," என்று பேசியிருக்கிறார்.















