நோட்டுகளின் `மார்ஜின்' எலிகளுக்காக உருவாக்கப்பட்டதா? - இது தெரியாமப் போச்சே?! - ...
LSG vs DC: "ஒரே ஒரு பார்ட்னர்ஷிப்தான் எங்களுக்குத் தேவைப்பட்டது" - அக்சர் படேல் பெருமிதம்
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 1) விறுவிறுப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இதில் லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 17.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
6 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்தச் சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், ``ஆட்டம் சீக்கிரம் முடிந்தாலும், நடுப்பகுதியில் போட்டி மிகவும் நெருக்கமாக மாறியது. அந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது, அதைப்பற்றித்தான் இடைவேளையின்போது பேசினோம்.
எங்களது பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருப்பதை உணர்ந்தோம். அதைப்பற்றி பந்துவீச வந்த ஒவ்வொரு வீரரிடமும் தெளிவாகத் தெரிவித்தோம்.
மைதானத்தின் ஒரு பக்கம் பவுண்டரி எல்லை பெரிதாகவும், ஒரு பக்கம் சிறியதாகவும் இருந்தது. அதற்கேற்ப யாரைப் பந்துவீச வைக்கலாம் என்று யோசித்தேன். எங்களுடைய திட்டத்தில் சமீர் ரிஸ்வி மற்றும் அசுதோஷ் சர்மா ஆகிய இருவரையும் களமிறக்கும் வாய்ப்புகள் இருந்தன. கடந்த ஆண்டு அசுதோஷ் முதல் போட்டியிலேயே சிறப்பாகச் செயல்பட்டார்.
இந்த முறை ரிஸ்வி அதைச் செய்திருக்கிறார். அவர் அடித்த சில ஷாட்கள் உண்மையிலேயே வியக்க வைத்தன. ரிஸ்வி தனது விளையாட்டில் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். தன்னை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வார். அவரது அந்த உழைப்பிற்கு இன்று பலன் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நாங்கள் காட்டிய உறுதி எங்களுக்கு இந்த வெற்றியினைப் பெற்றுத் தந்தது. இந்தச் சீசனை வெற்றியுடன் தொடங்கியிருப்பது அணிக்கு ஒரு நல்ல உத்வேகத்தைத் தந்துள்ளது.
இன்னும் சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது, அதை அடுத்தடுத்த போட்டிகளில் சரிசெய்து கொண்டு இதே வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்" என்று பேசியிருக்கிறார்.



















