"சீட்டு வாங்கி தரேன்னுதான் திமுகவுக்கு கூட்டிட்டு போனாரு..." - ஓபிஎஸ் மீது உச்ச ...
ஓராண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாயை பணமாகச் செலுத்தலாம்? - RBI சொல்வது என்ன?
டிஜிட்டல் இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது.
அந்த வங்கிக் கணக்கில் சிலர் லட்சக் கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள்... சிலரோ சில நூறுகளை மட்டும் வைத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் சரி... ஒரு ஆண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாய் வரை பணமாகச் செலுத்தலாம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?
அப்படி யோசித்திருந்தால் உங்களுக்கான பதிலைத் தருகிறார் வங்கியாளர் மணியன் கலியமூர்த்தி.

"வங்கிக் கணக்கில் பணமாகப் போடுவது 'செலுத்துதல்'. அந்தப் பணம் நமது சேமிப்புக் கணக்கிலேயே இருந்தால், அது 'இருப்பு'. இந்தப் பணத்தை வாடிக்கையாளர் எடுத்துவிட்டால் 'வெளியெடுத்தல்'.
இதுதான் சேமிப்பு வங்கிக் கணக்கின் நடைமுறைகள்.
ஒரு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கென எந்த வரம்பும் இல்லை.
ஆனால், ஒரு ஆண்டிற்கு ஒரு வங்கிக் கணக்கில் எத்தனை ரூபாய் பணமாகச் செலுத்துகிறோம் என்பதற்கு வரம்பு உண்டு.
இந்த வரம்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
வங்கிக் கணக்கை ஆதார் மற்றும் பான் எண்ணுடன் இணைத்திருக்கும் ஒருவர், ஒரு ஆண்டுக்கு ரூ.20 - 25 லட்சம் வரை பணமாகச் செலுத்த முடியும். இது வருமான வரிச் செலுத்தாதவர்களுக்கான வரம்பு.
இதுவே வருமான வரி செலுத்துபவர் என்றால், (ஆதார், பான் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைத்திருப்பவர்) அவர் ஒரு ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை கூட வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தலாம்.

ஆனால், இந்த இருவரும் மேலே குறிப்பிட்டுள்ள வரம்பைத் தாண்டி வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தினால், 2 - 5 சதவிகிதம் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
மூன்றாவது வகை - 'நோ ஃபிரில் கணக்கு'. இந்தக் கணக்கை வைத்திருப்பவர்கள் ஏழை மக்கள். இந்தக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் செய்ய வேண்டுமென்பதில்லை... பான் கார்டும் தேவை இல்லை.
அதனால், இந்தக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே பணமாகச் செலுத்த முடியும்.
மேலே சொன்னாவற்றில், இரண்டு விஷயங்களை நன்றாகக் கவனிக்க வேண்டும்.
ஒன்று, ஒரு ஆண்டு என்பது காலாண்டர் ஆண்டு அல்ல. இது நிதியாண்டைக் குறிக்கிறது. அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை.
இன்னொன்று, இந்த வரம்புகள் முழுக்க முழுக்க வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்துபவர்களுக்கு மட்டுமே. NEFT, RTGS, UPI மூலம் வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணத்திற்கு எந்த வரம்பும் கிடையாது.
இவை அனைத்து இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாகும்".
















