நோட்டுகளின் `மார்ஜின்' எலிகளுக்காக உருவாக்கப்பட்டதா? - இது தெரியாமப் போச்சே?! - ...
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி: அவசியம் தரிசிக்க வேண்டிய ஆழ்வார்கள் கொண்டாடிய வேங்கடகிருஷ்ணன்!
தசாவதாரங்களில் கிருஷ்ணாவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த அவதாரத்தில்தான் அவர் பக்தனுக்கு சாரதியானதோடு பகவத் கீதையும் உபதேசம் செய்தார். அப்படிப் பார்த்த சாரதியாகப் பெருமாள் அருளும் திருத்தலம்தான் திருவல்லிக்கேணி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் திருக்கோயில். தேரோட்டிய திருக்கோலத்திலேயே கருவறையில், நின்ற திருக்கோலத்தில் மீசையுடன் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் பெருமாள்.
திருமாலின் பக்தரான சுமதிராஜன், தேரோட்டியாக இருந்த கண்ணனாக பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன், பெருமாளை வேண்ட, அவரும் இங்கு தேரோட்டியாகக் காட்சி தந்தார். அதே கோலத்தில் இங்கேயே கோயிலும் கொண்டார் என்கிறது தலவரலாறு.
பாரதப் போரில் சாரதியாக இருந்த பெருமாள், `ஆயுதம் எதையும் எடுப்பதில்லை' என்று செய்த சபதத்திற்கு ஏற்ப இங்கே ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார். உற்சவ மூர்த்தி கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
இங்குள்ள மூலவரை வியாச முனிவர் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல புராணம். அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாகவும் ஒரு கருத்து உண்டு.

எப்போதும் மீசையுடன் பெருமாள் காட்சிகொடுக்கும் அழகு மனம் நிறைப்பது. எனவே இவரை `மீசைப் பெருமாள்’ என்றும் அழைப்பர்கள். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது, பகல் பத்து, ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையிலும் ஐந்து நாள்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம்.
இங்குள்ள ரங்கநாதர் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரைத் திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும் வராகரும் உடன் வந்தனர் என்பதால் இப்படி உள்ளதாம். இந்த ரங்கநாதரை, தாயார் `ஸ்ரீமந்நாதா' என்றழைத்தார். எனவே இவருக்கு `ஸ்ரீமந்நாதர்’ என்ற பெயரும் உண்டு.
பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோயிலில் அமைந்திருக்கும் சந்நிதிகள் ஒவ்வொன்றும் பழைமையும் மகிமையும் வாய்ந்தவை. இங்கே உற்சவரின் திருநாமமே பார்த்தசாரதி என்பது.
கருவறையில் ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் என்கிற திருநாமத்தோடு பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். வலப்புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரத முத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகிய அனைவரோடும் இணைந்து, கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் பெருமாள்.
எனவே இவரைக் 'குலம் காக்கும் பெருமாள்' என்று போற்றுகிறார்கள். உற்சவரான பார்த்தசாரதி பெருமாளைச் சரணடைந்தால் நம் வாழ்க்கைத் தேரை நலமுடன் செலுத்தி அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் அருளும் பெருமாளின் ஐந்து திருவடிவங்களையும் தரிசனம் செய்வது விசேஷம். நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர், கிருஷ்ணர் என எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஒவ்வொருவருக்கும் விசேஷ உற்சவங்கள் இங்கே நடத்தப்படுகின்றன. நின்ற திருக்கோலத்துக்கு ஸ்ரீவேங்கடகிருஷ்ணர், அமர்ந்த கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர், கிடந்த கோலத்துக்கு ஸ்ரீமந்நாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர் என மூன்று திருக்கோலத்தில் பெருமாள் இங்கே அருளுகிறார்.
இந்த மூன்று கோலங்களும் வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருளும் திருவடிவம். எனவே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றால், திருவரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய மூன்று திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்குமாம். குறிப்பாக நரசிம்மப் பெருமானுக்குத் தனிக் கொடிமரம் அமைக்கப் பட்டுள்ளது.
மூலவரின் சந்நிதிக்கு வலப்புறத்தில் வேதவல்லித் தாயாரின் சந்நிதி உள்ளது. அதன் பின்புறத்தில் கிழக்கு நோக்கியபடி கஜேந்திர வரதரின் சந்நிதி அமைந்துள்ளது.
தன்னைச் சரணாகதி புகுந்த யானைக்கே அருளிய வரதராஜப் பெருமாள் நம்மையும் கைவிடாது காத்தருள்வார் என்பது நிச்சயம்.

இத்தலத்தில் பெருமாளை திருமகள், பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் ரிஷி, அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் ஆகியோர் வழிபட்டு அருள்பெற்றனர் என்கிறது தலபுராணம்.
இந்தக் கோயிலின் தீர்த்தம் கைரவினி, இதில் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. இக்குளத்தில் அல்லிப் பூக்கள் அதிகம் காணப்பட்டதால் ஊருக்கே அல்லிக்கேணி என்ற பெயரும் உண்டானது.
திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி, இங்கு தவமிருந்தார். அப்போது இங்கிருந்த புஷ்கரணியில் அல்லி மலரில், தாயார் வேதவல்லியாகத் தோன்றினார். திருமணப் பருவம் அடைந்தபோது திருமால், ரங்கநாதராக இங்கு வந்து அவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருக்கல்யாண வைபவம் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது. வேதவல்லித் தாயார், உற்சவத்தின்போதும் கோயிலை விட்டு வெளியேறுவதில்லை என்பது விசேஷம்.

இங்குள்ள யோக நரசிம்மர், யோக பீடத்தில் தனிச்சந்நிதியில் இருக்கிறார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்குக் காட்சி தந்த நரசிம்மர் இவர். நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும் கேட்கக்கூடாது என்பதால் சந்நிதி கதவில் இருக்கும் மணிகள்கூட நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன.
பக்தர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டு உப்பு, மிளகைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இதனால் தீராத வினைகளும் நோய்களும் நீங்குவதாக நம்பிக்கை.
ஸ்ரீவைணவ ஆச்சார்யரான ஸ்ரீராமாநுஜரின் பெற்றோர், இந்தப் பார்த்தசாரதிப் பெருமாளை வேண்டியே, குழந்தை வரம் பெற்றார்கள் என்று கூறப்படுகிறது. இங்கு நடைபெறும் வைகுந்த ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழா விசேஷமானது. வைகுந்த ஏகாதசியின் போது ஒருநாள் பெருமாளுக்கு திருப்பதி வேங்கடாசலபதியைப் போல அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று மட்டும் விசேஷமான திருப்பதி லட்டும் இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கீதை உரைத்த நாயகனே இங்கு மூலவராக இருப்பதால், இவரைத் தரிசித்தால், குழப்பங்கள் விலகி வாழ்வில் சகல விஷயங்களிலும் தெளிவும் துணிச்சலும் உண்டாகும்.
இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். விரும்பிய வேலை வாய்ப்பு உருவாகும். இங்குள்ள ரங்கநாதரை வணங்க கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் கிட்டுமாம். குடும்ப சமேதராக எழுந்தருளி குடும்பத்தின் மேன்மையை உணர்த்தும் இந்தப் பெருமாளை ஒருமுறை குடும்பமாகச் சென்று தரிசித்து வாருங்கள்.




















