வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்...
Iran: பற்றி எரியும் ஈரான்; போராட்ட பூமியில் 2,000-ஐ தொட்ட உயிர் பலி! - தற்போதைய நிலவரம் என்ன?
மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் ஈரான் நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டம் நடந்துவருகிறது. தெஹ்ரான் நகரின் மையப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் நகரம் ஒருவித அச்ச உணர்வுடனேயே காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4 நாள்களாக ஈரானின் தகவல் தொடர்பு முடக்கப்பட்டிருந்தது.
இணையச் சேவைகள் இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை. இந்த நிலையில், ஈரானியர்கள் இன்றுதான் வெளிநாடுகளுக்கு அலைபேசி மூலம் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும், வெளிநாட்டு சமூக ஊடகத் தளங்களுக்கான தடை நீடிக்கும் நிலையில், உள்நாட்டு வலைதளங்களை மட்டுமே மக்கள் அணுக முடிகிறது.
நடைபெற்று வரும் தீவிரப் போராட்டங்களில், பொதுமக்கள், காவல்துறை என இரு தரப்பிலும் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசு அதிகாரி ஒருவர் இன்று (ஜனவரி 13, 2026) தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ``ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைத் தொடரும் நாட்டின் மீது 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்" என எச்சரித்துள்ளார். ஈரானைத் தனிமைப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சர்வதேச வர்த்தகப் பாதைகளில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக வேளாண் ஏற்றுமதித் துறைக்கு மறைமுகமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பாஸ்மதி அரிசியின் முக்கிய இறக்குமதியாளராக இருக்கும் நாடு ஈரான். தற்போது அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பணப் பரிமாற்றச் சிக்கல்கள், காப்பீட்டு அபாயங்கள் மற்றும் வர்த்தகர்களின் தயக்கம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.














