வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்...
வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்கிறார்" - சத்யராஜ்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ், நடிகை க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ்,``
கார்த்தி உனக்கு முதல் படம் பருத்திவீரன் ரொம்ப சேலஞ்சான படம். அதைவிட உனக்கு ரொம்ப கஷ்டமான படம் வா வாத்தியார்தான். தலைவர் பெயரில் வரும் படத்தில் நடித்து பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம். ஆனால், நீ இதில் பிரமாதமாக நடித்திருக்கிறாய். இந்தப் படம் பெரும் வெற்றி பெறும். நலன் இந்தப் படத்தை, இப்போது இருக்கும் தலைமுறைக்கும் பிடித்ததுபோல எடுத்திருக்கிறார்.
நான் சினிமாவுக்கு வந்தபோது என் பல் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அப்போது, கார்த்தி அப்பா சிவக்குமாரிடம், அதுபற்றி கூறினேன். அதற்கு அவர், ஒரு பல் மருத்துவரைக் கூறி, பல்லை பாதியாக வெட்டச் செய்தார். அதன்பிறகு 250 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். இப்போது கார்த்தி படம். இந்தப் படத்தில் நான் வில்லன். அதனால் ஒரு டிஃபரென்ட்டான கெட்டப் பண்ணலாம் எனக் கூறி, என் பல்லைப் பெரிதாக்கி வைத்திருக்கிறார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார்.














