சிக்ஸர்களால் சிதறிய UAE பந்துவீச்சு... 52 பந்துகளில் இரட்டைச் சதம்; சூர்யவன்ஷியி...
Kallakurichi TVK MLA: விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி; யார் இந்த சிருஷ்டி சிங் IPS?
தமிழ்நாட்டு அரசியலையும் தாண்டி இந்திய அளவில் அரசு நிர்வாக அதிகாரிகளின் மத்தியிலும் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது ஆபாசக் குறுஞ்செய்தி தொடர்பான கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கு.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெண் ஆட்சியர் அளித்த எழுத்துப்பூர்வ புகார் அடிப்படையில் வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் திருப்பூர் மாவட்ட எஸ்.பி ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ். காவல் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பார்வையும் கவனமும் இந்த இளம் பெண் அதிகாரி மீது தற்போது திரும்பியிருக்கிறது. யார் இந்த ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ்?

உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ருஷ்டி சிங், 1993-ம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சிறு வயது முதலே சமூகப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகி வந்திருக்கிறார். மத்திய பொதுச்சேவை ஆணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் கடின உழைப்பைச் செலுத்தி, அகில இந்திய அளவில் 180-வது ரேங்க் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
2022 ஆகஸ்ட் 29 அன்று அதிகாரப்பூர்வமாக காவல் பணியில் இணைந்த இவர், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் தனது சர்வீஸைத் தொடங்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் களமிறங்கிய ஸ்ருஷ்டி சிங், தனது துடிப்பான செயல்பாடுகளால் மிகக் குறுகிய காலத்திலேயே முக்கியப் பதவிகளைப் பெற்றிருக்கிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்-டிவிஷனில் உதவி காவல் கண்காணிப்பாளராகத் தனது களப்பணியைத் தொடங்கிய இவர், அங்கு சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், குற்றச் செயல்களை ஒடுக்குவதிலும் சிறப்பாகச் செயல்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகர தெற்கு பகுதி காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 ஜூன் மாதம் தமிழக அரசு மேற்கொண்ட அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின்போது, திருப்பூர் மாவட்டத்தின் 14-வது காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பூரை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில், சமீபத்தில் ஒரே நாளில் 92 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி, போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய பலரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். காங்கேயம் போன்ற மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து நேரடியாக நடை ரோந்து மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறார்.

தற்போது கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீதான புகாரை விசாரிக்கும் மிக உயரிய பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை எவ்வித பாரபட்சமுமின்றி, நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, காவல்துறைத் தலைவர் காமினி ஐபிஎஸ் இந்த விசாரணையை முழுமையாகக் கண்காணிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளம் மற்றும் நேர்மையான பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ருஷ்டி சிங் நியாயமான விசாரணையின் மூலம் நீதி பெற்றுத் தருவார் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.



















