LGBTQIA: ``பாலின அடையாளக் கோளாறு'' -விமர்சித்த மருத்துவ ஆணையம்; கண்டனம் தெரிவித்த உயர்நீதி மன்றம்!
LGBTQIA+ சமூகத்தினரை 'பாலின அடையாளக் கோளாறு' உள்ளவர்கள் என்று தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட, அது தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. தன்பாலின ஈர்ப்பு சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடந்தது. அப்போது, 'LGBTQIA+ மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரிக்கவும், அவர்கள் தொடர்பான மருத்துவக் கல்வி பாடத்திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும்' என்பது தொடர்பான விவகாரத்தில், LGBTQIA+ சமூகத்தினரை 'பாலின அடையாளக் கோளாறு' உள்ளவர்கள் என தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம், 'பாலின அடையாளக் கோளாறு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியிருப்பது உங்கள் மனநிலையை காட்டுகிறது. கோளாறு என்று சொன்னால் அனைத்தும் கோளாறுதான். LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கோளாறு இருப்பதாக கூற இயலாது. இயற்கை அவர்களை அப்படி உருவாக்கியுள்ளது' என குறிப்பிட்டுள்ளது.
'ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் தொடர்பான பாடங்கள் பள்ளிகளிலே கற்பிக்கப்படுவதால், மருத்துவப் பாடத்திட்டத்தில் அவை ஒரு பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை' என தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது. இக்கூற்றால் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், 'தேசிய மருத்துவ ஆணையமே கற்பிக்கத் தயங்கினால், இதைவிட அறிவியல் மனப்பான்மையில் மிகவும் பின்தங்கிய பள்ளிகள் இவற்றை சிறப்பாக எதிர்கொள்ளும் என எவ்வாறு எதிர்பார்க்க இயலும்' என கேள்வி எழுப்பியது. தவிர, திருநங்கைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நலனுக்காக இரண்டு கொள்கைகளை முன்மொழிந்துள்ள தமிழக அரசிடம், ஒரே மாதிரியான கொள்கையை அமல்படுத்துவதில் ஏதேனும் சவால்கள் இருந்தால் அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரியது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் சாந்தகுமாரி, "நீதிமன்றம் சரியாகவே விமர்சித்திருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில், பிறவியிலேயே உடலில் நடைபெறும் மாற்றங்களை 'கோளாறு' என குறிப்பிடுவது பிறவியே குறைபாடு என குறிப்பிடுவதாகும். LGBTQIA+ சமூகத்தினருக்கும் பிற மனிதர்களைப் போல் சம அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அனைவரும் போராடி வரும் நிலையில், பாடமாக எடுக்க வேண்டியவற்றை குறைபாடு போல சுட்டிக்காட்டும் தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டை தவறென சொல்லாமல் எவ்வாறு சொல்வது? திருநங்கை, திருநம்பி என செந்தமிழில் சிறப்புப்பெயர்களால் குறிப்பிட்டு வருகிறோம். இத்தகைய மக்கள் பல வருடங்களாக நம்மோடு வாழ்ந்து வந்துள்ளனர் என நம் வரலாறே சொல்கிறது. ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது அவரவர் விருப்பம். பாலின உணர்வுகள் இயற்கையானவையே... அதை பிறழ்வு அல்லது குறைபாடு என குறிப்பிட இயலாது.
மாணவ மாணவியர் தங்களது உறுப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்வது அடிப்படை. அத்தகைய அடிப்படை பாலுணர்வு குறித்த கல்வியே வழங்கப்படாத நிலையில், LBGTQIA+ சமூகத்தினரின் பாலுணர்வு குறித்து பேச எவரும் முன்வரமாட்டார்கள். இதை குறைபாடு, தவறு என தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டதுபோல் தான் கூறுவர்" எனவும் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb