Neeya Naana: "குழந்தைகள் அதைப் பார்த்துட்டு டாக்டர் ஆகணும்னு சொல்றாங்க!" - நெகிழ...
Neeya Naana: "குழந்தைகள் அதைப் பார்த்துட்டு டாக்டர் ஆகணும்னு சொல்றாங்க!" - நெகிழும் டாக்டர் குமரேசன்
'தர்மதுரை டாக்டர்ஸ் & பொதுமக்கள்' என்கிற தலைப்பில் கடந்த வாரம் 'நீயா நானா' நிகழ்ச்சி நடந்திருந்தது.
இந்த எபிசோடில் பேசிய மருத்துவர் குமரேசனின் காணொளி, இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் வைரலாகி இருக்கிறது.

தாயின் மறைவு அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய விஷயம், அதனால் இவர் தொடங்கிய அறக்கட்டளை என இவர் பேசியவை பலருக்கும் நெகிழ்ச்சியூட்டியிருந்தது.
இவர் தொடங்கியிருக்கும் அறக்கட்டளை மூலமாக பலருக்கு குறைந்த விலையிலும், விலையில்லாமலும் மருத்துவம் பார்த்து வருகிறார். அவரின் கதையையும், கனவுகளையும் தெரிந்துகொள்ள அவரிடமே பேசினோம்.
நம்மிடையே பேசிய மருத்துவர் குமரேசன், " 'நீயா நானா' நிகழ்ச்சியில நான் பேசின விஷயத்தை வச்சு நிறைய பேர் பல நேர்மறையான பதிவுகளை போட்டு வர்றாங்க.
படிக்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகள், அந்தக் காணொளியைப் பார்த்து உத்வேகமான குழந்தைகள் டாக்டர் குமரேசன் மாதிரி ஆகணும்னு சொல்றாங்கனு பதிவுகள்ல குறிப்பிடுறாங்க.
என்னைப் பார்த்து குழந்தைகள் ஊக்கமடைந்து கல்வியை நோக்கி நகர்கிறாங்க என்பதே எனக்கு நிறைவான உணர்வைக் கொடுக்குது. 'நீயா நானா' எபிசோட் வெளிவந்ததுக்குப் பிறகு பல மருத்துவர்களும் என்னை தொடர்புகொண்டு பேசுறாங்க.

அவங்க நிறைய நல்ல ஃபீட்பேக்ஸ் தர்றாங்க. அவங்களும் இனி வரும் நாட்கள்ல குறைந்த விலையில் மருத்துவம் கொடுப்பதாகவும், அடுத்தடுத்து மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் சொல்றாங்க.
நான் பேசிய சின்ன விஷயம், இத்தனை பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பது ரொம்பவே மனநிறைவான உணர்வைத் தந்திருக்கு." என்றவர், "எங்க அம்மா பெயர்ல நான் டிரஸ்ட் தொடங்கும்போது ஒரேயொரு விஷயத்துலதான் முழு கவனமாக இருந்தேன்.
என்றைக்கும் மருத்துவம் பார்க்க வர்றவங்களுக்கு, அது ஏற்படுத்தும் செலவுகளை பத்தின கவலைகளை உண்டாக்கிடகூடாது என்பதுதான் அது.
அப்படியான உணர்வை என்கிட்ட வர்றவங்களுக்கு என்னைக்கும் நான் ஏற்படுத்திடமாட்டேன். நகரத்தில் மட்டுமில்ல, கிராமத்திலும் பெரிய பெரிய சிகிச்சைகளையும் சாத்தியப்படுத்திக் காட்டணும்ங்கிறதுதான் என்னுடைய கனவாக இருக்கு.
பணத்தினால என்றைக்கும் ஒரு சிகிச்சை தடைப்படவே கூடாது! சிகிச்சை முடிச்சிட்டு மருத்துவமனைகள்ல இருந்து மக்கள் போறப்போ, அவங்க முகத்துல ஒரு புன்னகையைப் பார்க்க முடியும். அந்த புன்னகை எனக்கு முழு திருப்தியையும் பேரானந்தத்தையும் கொடுக்கும்." என்றார் உற்சாகத்துடன்.

தொடர்ந்து பேசியவர், "மருத்துவர், மருத்துவம் பார்க்க வர்றவங்களை தொட்டு பார்க்கணும். ஏன்னா, அந்த தொடுதல்ல அவங்களுக்குள்ள ஒரு நம்பிக்கை பிறக்கும்.
மருத்துவத்துல நம்பிக்கை என்பதும் 50 சதவீதம் முக்கியமானது. அந்த தொடுதல், நோய்கள் அத்தனையும் குணமாகிடும்ங்கிற எண்ணமும் அவங்களுக்குப் பிறக்கும். இன்னைக்கு அந்த தொடுதல் குறைவாகி இருப்பதற்கு நவீனமயமாக்கல் ஒரு காரணமாகச் சொல்லலாம்.
கொரோனாவுக்குப் பிறகு யாருக்காவது எதாவது தொற்று இருக்குமோனு, அதை நெறிமுறையாகவும் மாத்திட்டாங்க. பலரும் என்கிட்ட 'குறைவான பணம் வாங்கி மருத்துவம் பார்க்கிறீங்க, இன்னும் கொஞ்சம் அதிகமாக பணம் வாங்கிக்கோங்க'னு சொல்லுவாங்க.
ஆனா, அவங்களுக்கு எப்போதும் தெளிவான ரிப்ளை கொடுத்திடுவேன். 'இந்த விஷயத்துல நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கேன். என்னுடைய தாயாரின் மறைவு என்னை பாதிச்சது. நான் டிரஸ்ட் தொடங்கின நோக்கமும் வேற.
அதுக்காக என்னுடைய நோக்கத்திலிருந்து நான் சமரசம் பண்ணிக்கவே மாட்டேன்'னு அவங்ககிட்ட தெளிவான பதில்களைக் கொடுத்திடுவேன். எனக்கு இது கஷ்டத்தையும் கொடுக்கல. பணம் இருக்கிறவங்ககிட்ட வாங்குறேன்.
இல்லாதவங்ககிட்ட குறைவான கட்டணத்தை வாங்கிக்கிறேன். சிலர் இதை மிஸ்யூஸ் செய்திடுவாங்கனு முழுமையாக செக் பண்ணிடுவோம்." என்றவர், "30 வருஷத்துக்கு முன்னாடி நீரழிவு நோய், புற்றுநோய் பெரியளவுல கிடையாது.
இப்போ மருத்துவத்திலும் பெரிய நவீனமயமாக்கல் நிகழ்ந்திருக்கு. நம்ம உணவுப் பழக்கங்கள்தான் இன்னைக்கு நோய்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணமாக மக்கள் உணவு பழக்கம்தான்னு நினைக்கிறாங்க. ஆனா, அது மட்டுமே காரணம் கிடையாது.

ஒழுக்கமற்ற வாழ்க்கை முறை அதற்கொரு காரணம். நம்ம உடம்புல சிகர்டியன் ரிதம் (Circadian Rhythm) இருக்கும். நேரத்திற்கு சாப்பிட்டு, உறங்குவது மூலமாக நம் உடம்பில் இது சீராக இருக்கும்.
இன்னைக்கு அப்படி கிடையாது. குழந்தைகளே தாமதமாகதான் சாப்பிட்டு தூங்குறாங்க. அது ஒழுக்கமற்றதாக மாறியதுனாலதான் இன்னைக்கு இத்தனை பிரச்னைகள் வருது.
அதுபோல, பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனை தரமற்றதுங்கிற எண்ணம் இருக்கு. அது உண்மை கிடையாது. நிறைய சிகிச்சைகள் அங்கு கொடுக்கப்படுது. மிகப்பெரிய மருத்துவமனை கட்டமைப்பு அரசு மருத்துவமனைகள்ல இருக்கு. அதை மக்கள் பயன்படுத்திக்கணும்." என்றார்.





















