கேரளாவை உலுக்கும் மாணவர் நிதின் ராஜ் தற்கொலை: கவனம் ஈர்க்கும் 'ஹர்த்தால்' போராட்...
Prachi Nigam: உருவக்கேலிகளை உடைத்தெறிந்து மீண்டும் வெற்றி வாகை சூடிய மாணவி பிராச்சி நிகம்!
வெற்றி என்பது வெறும் மதிப்பெண்களில் மட்டுமல்ல, சமூகத்தின் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு, தளராத மனதுடன் தொடர்ந்து முன்னேறுவதிலும் உள்ளது.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம். உருவக்கேலிகளைத் தாண்டி கல்வியில் மாபெரும் சாதனை படைத்து, அனைவரின் நெஞ்சங்களிலும் நிறைந்துள்ளார்.
2024-ம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநில 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பிராச்சி நிகம் 600-க்கு 591 மதிப்பெண்கள் (98.50%) பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இந்தச் செய்தி வெளியாகி அவரது புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, பலர் அவரைப் பாராட்டினாலும், இணையவாசிகளில் ஒரு பகுதியினர் அவரது முகத்தில் இருந்த முடிகளை வைத்து மிகவும் கீழ்த்தரமாக உருவக்கேலி செய்தனர்.
ஒரு மாபெரும் வெற்றியைக் கொண்டாட வேண்டிய அந்தத் தருணத்தில், சமூக வலைத்தளங்கள் அவரைத் தேவையில்லாமல் விமர்சித்தன.

விமர்சனங்களுக்கு பதிலடி
அந்தச் சிறு வயதிலேயே பிராச்சி நிகம் காட்டிய முதிர்ச்சியும் தைரியமும் பலரையும் வியக்க வைத்தது. விமர்சனங்களால் சோர்வடையாத அவர், "என் முகம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல, என் மதிப்பெண்கள்தான் முக்கியம். என்னை இறைவன் எப்படிப் படைத்துள்ளானோ அப்படியே நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்.
சாணக்கியர் கூட அவரது தோற்றத்திற்காக விமர்சிக்கப்பட்டார், ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரைப் போலவே நானும் என் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன்" என்று அழகாகப் பதிலளித்தார்.
அவரது இந்தத் தன்னம்பிக்கை பேச்சு, விமர்சித்தவர்களை வெட்கித் தலைகுனிய வைத்ததுடன், சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுத் தந்தது.
தொடரும் சாதனைப் பயணம்
இரண்டு ஆண்டுகள் கடந்தன. விமர்சனங்களைத் தனது உழைப்பால் வென்ற பிராச்சி, தற்போது 2026-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 91.20% மதிப்பெண்கள் பெற்று தனது கல்வித் திறனை மீண்டும் நிரூபித்துள்ளார். கணிதத்தில் 99%, இந்தியில் 96%, வேதியியலில் 95%, இயற்பியலில் 93% எனப் பல பாடங்களில் அசத்தியுள்ளார் பிராச்சி.
ஆங்கிலத்தில் அவர் 73 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அதற்கும் ஒரு வலுவான காரணம் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான IIT-யில் சேர்ந்து ஒரு சிறந்த பொறியியலாளர் ஆக வேண்டும் என்பதே பிராச்சியின் கனவு.
அதற்காக JEE நுழைவுத்தேர்வுக்கான தயாரிப்புகளில் தீவிர கவனம் செலுத்தியதாலேயே, ஆங்கிலப் பாடத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னுதாரண மாணவி
சமூக வலைத்தளங்களில் வரும் கேலிகள், மனச்சோர்வை ஏற்படுத்தும் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, தனது கனவை நோக்கி ஓடும் பிராச்சி நிகம் உண்மையிலேயே இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம்.
ஒருவரின் உண்மையான அழகு அவரது அறிவிலும், விடாமுயற்சியிலும், தன்னம்பிக்கையிலும்தான் இருக்கிறது என்பதை இந்தச் சமூகம் பிராச்சியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
உருவ அமைப்பை வைத்து ஒருவரை மதிப்பிடும் இந்த உலகிற்கு, பிராச்சி நிகமின் வெற்றிப் பயணம் ஒரு சவுக்கடி. அவரது ஐ.ஐ.டி கனவு மெய்ப்படவும், அவர் வாழ்க்கையில் மென்மேலும் பல வெற்றிகளைச் குவிக்கவும் அவரை மனதார வாழ்த்துவோம்!




















