கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? - விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்...
SIR: ``வாக்காளர் திருத்தப் பணியில் ‘மத’ அரசியல்?"- கடிதம் எழுதிய ஐ.நா; விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!
கடந்த ஆண்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக SIR பணிகள் நடைபெற்றன.
தற்போது மூன்றாம் கட்ட திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த’ நடவடிக்கையின்போது, பெருமளவிலான முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக, ஐ.நா சபையின் மூன்று சிறப்புப் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இது தொடர்பாக இந்திய அரசுக்குத் தங்கள் கடுமையான கவலைகளைடும் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா-வின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி நிக்கோலஸ் லெவ்ராட் (Nicolas Levrat), கருத்துச் சுதந்திரத்திற்கான சிறப்புப் பிரதிநிதி ஐரீன் கான் (Irene Khan), மதச் சுதந்திரத்திற்கான சிறப்புப் பிரதிநிதி சிலா கானியா (Nazila Ghanea) ஆகிய மூவரும் இணைந்து அனுப்பியிருக்கும் அந்தக் கடிதத்தில், ``தேர்தல் ஆணையத்தின் இந்தச் சிறப்புத் திருத்த நடவடிக்கை மூலம் லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவில் நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறிப்பாகச் சிறுபான்மையினப் பிரிவினரைப் பாதித்துள்ளது. இதை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
வாக்காளர் தரவுகளில் உள்ள முறைகேடுகளைக் கண்டறிய வெளிப்படைத்தன்மையற்ற, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த அமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது தரவுகளின் வெளிப்படைத்தன்மை, பிழைகள் மற்றும் சாத்தியமான பாகுபாடுகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. மேலும், பெயர்களில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளைக் காரணம் காட்டி வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவது, வாக்காளர்கள் தங்களின் ஆவணங்களைச் சரியாகச் சமர்ப்பித்த போதிய கால அவகாசம் வழங்கப்படாதது, பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு வழிமுறைகள் முறையாக இல்லாமை, அல்லது புறக்கணிக்கப்படுதல் மற்றும் சிறுபான்மையினரை ஒதுக்கும் நோக்கிலான அரசியல் பிரசாரங்கள் போன்றவை நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 5.2 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக மேற்கு வங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் மொத்தம் 91 லட்சம் பெயர்கள் வாக்காளர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இந்த நடவடிக்கையின் தாக்கத்தை, நந்திகிராம் தொகுதியில் நடந்த பெயர் நீக்கத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். நந்திகிராம் தொகுதியில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் முஸ்லிம்கள் 25% மட்டுமே உள்ள நிலையில், அங்கு நீக்கப்பட்ட வாக்காளர்களில் 95% பேர் முஸ்லிம்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
அத்துடன், இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில், 'கண்டறி, நீக்கு, மற்றும் நாடு கடத்து' ('Detect, Delete and Deport') போன்ற அரசியல் சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார். மூத்த அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவதை 'சட்டவிரோத வங்காளதேச குடியேறிகளை' இலக்கு வைக்கும் நடவடிக்கையாக பொதுவெளியில் சித்திரித்துள்ளனர். இந்த வகையான பேச்சுகள், சட்டபூர்வமான இந்திய முஸ்லிம் குடிமக்களை அந்நிய நாட்டு குடிமக்களோடு ஒப்பிட்டுக் குழப்பத்தை விளைவிப்பதாக உள்ளது. இத்தகைய வெறுப்புப் பேச்சுகள், இந்தியா ஒப்புதல் அளித்துள்ள ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின்’ (ICCPR) பிரிவு 20(2)-ன் படி பாகுபாட்டைத் தூண்டும் செயலாக அமையக்கூடும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதை அறிந்த வாக்காளர்கள், முதலில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். அங்கு தீர்வு கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். ஆனால், ஏப்ரல் 6 அன்று இந்த வாக்காளர் நீக்க நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பிறகு, ஏப்ரல் 16 அன்று உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில், "நீக்கப்பட்ட வாக்காளர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அணுகி, தங்களுடையவை சரியான ஆவணங்கள் தான் என்று நிரூபித்து அனுமதி வாங்கி வர வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
அப்படி அனுமதி வாங்குவதற்கு ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 27 என மிகக் குறுகிய இரண்டு காலக்கெடு நாள்களை நீதிமன்றம் விதித்தது. ஆனால், குறிப்பிட்ட அந்தத் தேதிக்குள் விசாரணை முடியாமல், வழக்கு நிலுவையில் இருந்தால் அவர்கள் வாக்களிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது. பெயர்கள் நீக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த 34 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். வெறும் 5 முதல் 10 நாள்களுக்குள் 34 லட்சம் வழக்குகளை விசாரித்து முடிக்க வேண்டிய கட்டாயம் மேல்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு ஏற்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான வழக்குகளை விசாரிப்பது அதிகாரிகளுக்கு சாத்தியமில்லாமல் போனது. இதனால் லட்சக்கணக்கான வழக்குகள், தேர்தல் நாளுக்குள் விசாரணைக்கே வரவில்லை. அதனால் தகுதியுள்ள லட்சக்கணக்கான இந்தியக் குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையே இழந்துவிட்டார்கள்.

1992-ம் ஆண்டின் தேசிய அல்லது இன, மத மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்குச் சொந்தமான நபர்களின் உரிமைகள் பிரகடனம் மற்றும் 1979-ம் ஆண்டின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை உள்ளிட்ட பல சர்வதேச உடன்படிக்கைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த நிலையில், பாகுபாடற்ற தன்மை, வாக்குரிமை மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான ICCPR விதிகளின் மீறல்களை இந்த SIR நடவடிக்கைகள் நிகழ்த்தியிருப்பது அதிருப்தியளிக்கிறது." எனக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் ``நீக்கப்பட்ட வாக்காளர்களின் மதம் மற்றும் இனம் சார்ந்த பிரிக்கப்பட்ட தரவுகள் (Disaggregated data), மேல்முறையீட்டு செயல்முறையின் விவரங்கள் மற்றும் தவறுதலாகப் பெயர்கள் நீக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் குறித்த தரவுகள் உள்ளிட்ட 7 கேள்விகளுக்கான பதில்களை இந்திய அரசிடம் கேட்டிருக்கின்றன.
ஐநா சிறப்பு அறிக்கையாளர்களின் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ``இந்த SIR முறை முற்றிலும் சட்டப்பூர்வமானது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் வாக்காளர்கள் பதிவு விதிகளின் கீழ், முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே இத்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு நீதித்துறையின் முழு ஆதரவு உள்ளது. மேலும், தகுதியான குடிமக்கள் எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், போலிப் பதிவுகள், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதே இதன் நோக்கம்." எனத் தெரிவித்திருக்கிறது.
வெளிப்படைத்தன்மையற்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் இந்தத் திருத்தப் பணியில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தச் செயல்முறையானது தேர்தல் அதிகாரிகளின் கள அளவிலான நேரடிச் சரிபார்ப்பை உள்ளடக்கிய ஒரு வெளிப்படையான நிர்வாக முறைப்படிதான் நடைபெறுகிறது என்று ஆணையம் கூறியுள்ளது. அத்துடன், வாக்காளர்கள் தங்களது விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளவும், விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்கக் கோரவும், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான சட்டப்பூர்வ அவகாசம் வழங்கப்படுவதால், எந்தவொரு தகுதியான வாக்காளரின் பெயரும் தன்னிச்சையாக நீக்கப்படுவதில்லை என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. தேர்தல் விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், எழுத்துப் பிழைகள் அல்லது ஆவண முரண்பாடுகள் காரணமாக யாரும் அநியாயமாக நீக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான சார்புநிலை மற்றும் பாகுபாடு குறித்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் அடிப்படையற்றவை என்று தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தச் சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையானது மதம், சமூகம் என எவ்வித பாகுபாடும் இல்லாத ஒரு நடுநிலையான நடவடிக்கை ஆகும். துல்லியமான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதே இதன் ஒரே நோக்கம் என்றும், இந்த நடவடிக்கை எந்தவொரு குறிப்பிட்ட வாக்காளர் பிரிவையும் இலக்கு வைக்கவோ அல்லது அவர்களுக்கு எதிராகப் பாரபட்சமாகச் செயல்படவோ இல்லை என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதேபோன்ற ஒரு எச்சரிக்கை அறிவிப்பை, அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட போதும் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதிகள் அனுப்பியிருந்தனர். அஸ்ஸாமில் “சட்டவிரோத குடியேறிகளை” கண்டறிவதாகக் கூறி, மக்களின் பூர்வீகக் குடும்ப ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்து, 2019-ல் என்.ஆர்.சி. பட்டியல் புதுப்பிக்கப்பட்டது. இதில் 19 லட்சம் மாநிலக் குடிமக்கள் விடுபட்டனர். அப்போதும், சர்ச்சைக்குரிய அந்த NRC நடவடிக்கையின் மூலம் இனம், மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினர் நீக்கப்பட்டதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து ஐ.நா. அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதேநேரம் அஸ்ஸாமில் புதுப்பிக்கப்பட்ட NRC பட்டியல் ஆறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













