80-ல் நுழைந்த ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரி...
Sreenivasan: "ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்!" - மோகன்லால் உருக்கம்!
mமலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு வயது 69.
நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் மோகன்லாலும் நடிகர் ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "ஸ்ரீனி திரும்பிச் சென்றுவிட்டார். ஸ்ரீனியுடனான ஆத்மார்த்தமான பிணைப்பை வார்த்தைகளில் அடக்க முடியாது. சினிமாவில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதைவிட மேலானது எங்கள் பிணைப்பு.
ஒவ்வொரு மலையாளிக்கும் ஸ்ரீனியுடன் இருந்த ஆத்மார்த்தமான தொடர்பும் அப்படித்தான் இருந்திருக்கும். மலையாளிகள் தங்களை ஸ்ரீனி உருவாக்கிய கதாபாத்திரங்களில் கண்டிருக்கிறார்கள்.
தங்களின் வலிகளையும் மகிழ்ச்சிகளையும் ஸ்ரீனி மூலமாக மக்கள் திரையில் கண்டார்கள். நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை வெளிப்படுத்த ஸ்ரீனியைப் போல வேறு யாரால் முடியும்?

நாங்கள் ஒன்றாக உருவாக்கிய கதாபாத்திரங்கள் என்றைக்கும் நிலைத்திருக்கும். ஸ்ரீனியின் எழுத்தில் மாயாஜாலம் இருக்கும். சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது அவரது படைப்புகள்.
வலியை சிரிப்பில் பதித்த பிரியமானவர். திரையிலும் வாழ்க்கையிலும் நாங்கள் தாசனையும் விஜயனையும் ('நாடோடிக்காற்று' என்ற மலையாளப் படத்தில் மோகன்லால் மற்றும் ஸ்ரீனிவாசனின் கதாபாத்திரங்களின் பெயர்கள்) போல சிரித்தும், ரசித்தும், சண்டையிட்டும், ஒற்றுமையாகவும் எப்போதும் பயணித்தோம்.
பிரியமான ஸ்ரீனியின் ஆத்மாவுக்கு சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
















