செய்திகள் :

StartUp சாகசம் 52: `மறுசுழற்சியில் ஒரு புரட்சி' - ஆஸி.,யில் அசத்தும் தமிழரின் `Circular Seed' கதை!

post image

சுழற்சி பொருளாதாரம் (Circular Economy) என்பது, நவீன காலத்தில் வளங்களை வீணாக்காமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு புரட்சிகரமான பொருளாதார முறையாகும். இந்தியாவின் பெருகி வரும் மக்கள் தொகைக்கு இது மிகச்சிறந்த தீர்வாகவும், மிகப்பெரிய சந்தை வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

சுழற்சி பொருளாதாரம் என்றால் என்ன?

வழக்கமான பொருளாதார முறை (Linear Economy) என்பது "எடுத்தல் - தயாரித்தல் - அழித்தல்" (Take-Make-Dispose) என்ற அடிப்படையில் இயங்குகிறது. ஆனால், சுழற்சி பொருளாதாரம் என்பது கழிவுகளைக் குறைத்து, பொருட்களை முடிந்தவரை நீண்ட காலம் பயன்பாட்டில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது.

சுழற்சி பொருளாதாரத்தின் முக்கிய நிலைகள்:

மறுவடிவமைப்பு (Redesign): பொருட்கள் எளிதில் பழுதடையாதபடி மற்றும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயாரித்தல்.

மறுசுழற்சி (Recycle): உபயோகித்த பொருட்களை மூலப்பொருட்களாக மாற்றி புதிய பொருட்களை உருவாக்குதல்.

மறுபயன்பாடு (Reuse): பொருட்களைத் தூக்கி எறியாமல் மற்றவர்களுக்கு வழங்குதல் அல்லது வேறு தேவைக்குப் பயன்படுத்துதல்.

இந்தியாவின் மக்கள் தொகை 2050-ல் 1.6 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்குத் தேவையான வளங்களை (Resource) இயற்கை முறையில் மட்டும் பெறுவது கடினம்.

கழிவு மேலாண்மை (Waste Management): இந்தியாவில் நகர்ப்புற கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு பெரிய சவாலாக உள்ளன. இவற்றைச் சுழற்சி முறையில் கையாள்வது சுற்றுச்சூழலைக் காக்கும்.

வேலைவாய்ப்பு: மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுத் துறைகளில் புதிய "Green Jobs” உருவாகும்.

செலவு குறைப்பு: மூலப்பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு பெரும் லாபம் கிடைக்கும்.

இந்தியா சுழற்சி பொருளாதாரத்தைப் பின்பற்றுவதன் மூலம், 2050-க்குள் ஆண்டுக்கு சுமார் ₹40 லட்சம் கோடி (624 பில்லியன் டாலர்) அளவுக்குப் பொருளாதாரப் பயன்களைப் பெற முடியும். ஆனால், தற்போதைய சூழலில் கழிவு மேலாண்மை என்பது வெறும் 'ஒரு இடத்தில் இருக்கும் கழிவைச் சேகரித்து மற்றொரு இடத்தில் குவிப்பது' என்பதாகவே சுருங்கிவிட்டது.

இந்தப் போக்கை மாற்றி, கழிவுகளைக் காசாக்கும் நவீனத் தொழில்நுட்பத்துடன் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஒரு தமிழ் குரல் இன்று உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அவர்தான் நரேன் சுப்ரமணியம், 'Circular Seed' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர். கழிவுகளைப் புதிய வளங்களாக மாற்றும் இவரது முயற்சி, அவரிடம் ஆஸ்திரேலியாவில் அவரின் Circular Seed நிறுவனம் வளர்ந்து வரும் சாகசக்கதையை கேட்போம்...

 நரேன் சுப்ரமணியம்
நரேன் சுப்ரமணியம்
கழிவு மேலாண்மை எனத் தனியாக ஒரு ஸ்டார்அப் ஆரம்பிக்க உங்களை தூண்டியது எது?

'சர்க்குலர் சீட்' (Circular Seed) நிறுவனம் ஒரு வணிக யோசனையாகத் தொடங்கவில்லை—அது ஒரு பொறுப்புணர்வாகவே தொடங்கப்பட்டது.

நான் தமிழ்நாட்டில் வளர்ந்தவன். நம்வீட்டில் உள்ள  பொருட்களை மறுபயன்பாடு செய்வது (Reuse), பழுது நீக்கிப் பயன்படுத்துவது (Repair) மற்றும் அது எவ்வளவு பழையதாக இருந்தா லும் அந்த வளங்களை மதிப்பது என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்தது. பின்னாளில் நான் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று மெக்கானிக்கல் இன்ஜினியராகப் பணியாற்றியபோது, ஒரு முரண்பாட்டைக் கண்டேன்: அங்கு நவீன உள்கட்டமைப்புகள் இருந்தபோதிலும், பெருமளவிலான சிக்கலான கழிவுகள்—குறிப்பாகக் கலப்பு பிளாஸ்டிக்குகள்—நிலப்பரப்புகளில் (Landfill) கொட்டப்பட்டன அல்லது மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

உள்ளூர் நகராட்சிகள் மற்றும் கழிவு மேலாண்மை நிலையங்களுடன் நான் பணியாற்றியபோது ஒரு அடிப்படை உண்மையை உணர்ந்தேன்:

கழிவு என்பது ஒரு பிரச்சினை அல்ல; அதை கையாளும் முறையில்தான் (System) பிரச்சினை இருந்தது.

மற்றவர்கள் எதை "மறுசுழற்சி செய்ய முடியாதது" என்று ஒதுக்கினார்களோ, அதை நான் "தவறான இடத்தில் இருக்கும் ஒரு பொருள்" என்றுதான் பார்த்தேன். "கழிவு என்பது தவறான இடத்தில் இருக்கும் ஒரு வளம்" என்ற புரிதலே Circular Seed-ன் அடித்தளமானது. சமூகத்திற்கு எதையாவது திரும்பச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ஆனால் அதை ஒரு தர்மமாகச் செய்யாமல், கழிவு உருவாகும் இடத்திலேயே அதை மதிப்பாக மாற்றும் ஒரு நடைமுறைத் தீர்வை உருவாக்க விரும்பினேன்.

"எப்படிச் சிறப்பாக மறுசுழற்சி செய்வது?" என்று யோசிப்பதை நிறுத்திவிட்டு, "கழிவு உருவாகும் இடத்திலேயே செயல்படக்கூடிய சிறிய, மலிவான தொழில்நுட்பங்களை எப்படி வடிவமைப்பது?" என்று யோசித்தபோதுதான் எங்களுக்குப் பெரிய மாற்றம் கிடைத்தது.

அந்தச் சிந்தனைதான் எங்களை 'மாடுலர்' (Modular) மற்றும் எங்கும் கொண்டு செல்லக்கூடிய சிறிய ஆலைகளை (Micro-factories) உருவாக்கத் தூண்டியது. இப்படித்தான் இதுவரை 8-க்கும் மேற்பட்ட சிறிய சுத்திகரிப்பு ஆலைகளை உருவாக்கி எந்த இடத்தில் கழிவுகளை சுத்திகரிக்க முடியுமோ அவற்றை சுத்திகரித்து தந்துவருகிறோம். இவை கிராமங்கள், தீவுகள் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே இயங்கக்கூடியவை. இந்த செயல்பாடுகளால் கடலில் வீணாக்கும் மீன் பிடி வலைகளை மொத்தமாக எடுத்து அவற்றை மறுசுழற்சி செய்ய கேட்டிருக்கிறார்கள்.


இன்று, Circular Seed இவற்றையெல்லாம் மாற்றுகிறது:

* குறைந்த மதிப்புள்ள பிளாஸ்டிக்குகளை கட்டுமானக் கற்களாக மாற்றுகிறோம்.

* கலப்பு பிளாஸ்டிக்குகளை எரிசக்தியாகவும் எரிபொருளாகவும் மாற்றுகிறோம்.

* மட்கும் கழிவுகளை உரமாக மாற்றுகிறோம்.

ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக, நாங்கள் மக்களின் சிந்தனையை மாற்றுகிறோம்:

* "கழிவு ஒரு பிரச்சினை" என்பதிலிருந்து "கழிவு ஒரு வாய்ப்பு" என்பதற்கு மாற்றுகிறோம்.

* "பெரிய முதலீடு தேவை" என்பதிலிருந்து "சிறியதாகத் தொடங்குங்கள், உள்ளூரிலேயே தொடங்குங்கள், இப்பொழுதே தொடங்குங்கள்" என்று வழிகாட்டுகிறோம்.

நாங்கள் சரியான முதலீட்டிற்காகவோ அல்லது ஆபத்துகள் இல்லாத ஒரு நேரத்திற்காகவோ காத்திருக்கவில்லை. முன்மாதிரிகள் (Prototypes), சோதனைகள், தோல்விகள் மற்றும் விடாமுயற்சியுடன் இதைத் தொடங்கினோம். பலரிடம் அறிவு இருக்கிறது, ஆனால் முதலீடு மற்றும் ரிஸ்க் குறித்த பயத்தால் தயங்குகிறார்கள். அத்தகையவர்களுக்கு இந்த 'ஸ்டார்ட்அப் சாகசம்' (Startup Sagasam) தொடர் ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு முக்கியமான விசயம், குப்பை என்பதால் அது மதிப்பு இல்லை என்றாகிவிடாது, அதை பணத்தால் மட்டும் எண்ணக்கூடாது. அது சமூகத்தில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற சமூக மதிப்பை  நாம் கணக்கில் கொள்ளவேண்டும். நாம் எல்லாவற்றையும் பணத்தால் மட்டுமே கணக்கிடுகிறோம்."

இந்தத் தொழில்நுட்பத்தின் தேவையையும், சந்தை வாய்ப்பையும் எப்படி உறுதி செய்தீர்கள்?

``தொழில்நுட்பத்தின் தேவையை நாங்கள் காகிதங்களில் கணக்கிடவில்லை, நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்தோம்.

* கள ஆய்வு: நகராட்சிகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து, தற்போதுள்ள முறைகளால் கையாள முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை (Soft plastics, contaminated materials) அடையாளம் கண்டோம்.

* சோதனை முயற்சிகள் (Pilot Trials): தரம் குறைந்த கழிவுகளையும் எங்கள் தொழில்நுட்பம் கையாண்டு, நிலையான ஒரு பொருளை உற்பத்தி செய்ய முடியும் என்பதைச் சிறிய அளவிலான சோதனைகள் மூலம் நிரூபித்தோம்.

* பயன்பாட்டு உறுதி: மீட்கப்பட்ட பொருட்களுக்கு (கட்டுமானப் பொருட்கள், எரிசக்தி போன்றவை) சந்தையில் உண்மையான தேவை இருப்பதை உறுதி செய்தோம்.

எங்கள் நிறுவனத்தை ஆரம்பித்தப்பிறகு வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் எங்களை அணுகியபோதும், பணிகளை விரிவுபடுத்தக் கேட்டபோதும் இதன் சந்தை தேவை எங்களுக்கு உறுதியானது."

``ஏன் ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்? அங்கு நிலவிய சூழல் உங்களுக்கு எப்படிச் சாதகமாக இருந்தது?"

``ஆஸ்திரேலியாவில் கழிவுப் பிரச்சினை மிகவும் வெளிப்படையாகவும் அவசரமாகவும் இருந்தது:

* நிலப்பரப்புகளில் கழிவுகளைக் கொட்ட இடமில்லாத நிலை.

* அதிகப்படியான போக்குவரத்துச் செலவுகள்.

* கழிவுகளை ஏற்றுமதி செய்வதில் உள்ள கடுமையான விதிகள்.

அதே சமயம், ஆஸ்திரேலியாவின் புத்தாக்கச் சூழல் (Innovation ecosystem)—அதாவது பல்கலைக்கழகங்கள், அரசு மானியங்கள் மற்றும் கடுமையான தரக்கட்டுப்பாடுகள், எங்களுக்குப் பேருதவியாக இருந்தன. இந்த மாதிரியை இந்தியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கு முன், ஆஸ்திரேலியா ஒரு சிறந்த களமாக அமைந்தது.

``ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே உள்ள கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக நீங்கள் சந்தித்த சவால்கள் மற்றும் இடைவெளிகள் என்ன?"

``ஆஸ்திரேலியாவில் பெரிய நிறுவனங்கள் தூய்மையான மற்றும் அதிக அளவுள்ள கழிவுகளைக் கையாள்வதில் வல்லவர்களாக உள்ளனர். ஆனால், தரம் குறைந்த, கலப்பு கழிவுகளைக் கையாள்வதில் ஒரு பெரிய இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியை கண்டறிந்ததுதான் எங்களது முதல் சாதனை

ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக நாங்கள் சந்தித்த சவால்கள்:

* வெவ்வேறு தரத்தில் வரும் கழிவுகளைக் கையாளுதல்.

* உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரம் மாறாமல் இருப்பதை உறுதி செய்தல்.

* முன் அனுபவம் இல்லாத நிலையில் நம்பகத்தன்மையை உருவாக்குதல்.

* கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுதல்.

இவற்றைச் சமாளிக்க, கழிவு வரும் இடத்திற்கே கொண்டு செல்லக்கூடிய நெகிழ்வான (Modular) இயந்திரங்களை வடிவமைத்தோம். இப்படித்தான் சவாலுக்கான சரியான தீர்வை கண்டறிந்தோம். எனவே வாய்ப்புகளை கண்டறிவது ஒன்று என்றாலும், ஏற்கனவே உள்ளவ தொழிலிலும் உள்ள இடைவெளிகளிலும் வாய்ப்புகளை கண்டறியலாம் என்பதையும் நாங்கள் கற்றுக்கொண்டோம்."

ஆரம்பக்காலச் செயல்பாடுகளில், குறிப்பாகப் போக்குவரத்து மற்றும் விதிமுறைகளில் (Logistics and Regulation) நீங்கள் சந்தித்த முக்கியச் சவால்கள் என்ன?

``தொடக்ககாலச் சவால்கள் மிகவும் கடினமானவை, நாங்கள் ஆரம்பித்து சிந்தனையாக செயலாக மாற்றும்போது கொரோனா வந்தது. ஆனாலும் சமாளித்து நின்றோம்.

* போக்குவரத்து: எடை குறைந்த பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து எடுத்துச் செல்வது அதிகச் செலவு பிடித்தது.

* விதிமுறைகள்: கழிவு மேலாண்மைக்கான அனுமதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் (EPA) சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பெறுவதற்கு மிகத் துல்லியமான ஆவணங்கள் தேவைப்பட்டன.

* மாசுபாடுகள்: கழிவுகளில் இருக்கும் ஈரப்பதம், உணவு மிச்சங்கள், மணல் போன்றவை சவாலாக இருந்தன.

இந்தச் சவால்கள்தான், கழிவு உருவாகும் இடத்திலேயே (On-site) அதைச் சுத்திகரிக்கும் முறையை மேம்படுத்த எங்களைத் தூண்டின."

காலப்போக்கில் உங்கள் வணிக மாதிரியில் செய்த முக்கியமான மாற்றங்கள் (Pivots) என்ன?

``நாங்கள் பல முக்கியமான மாற்றங்களைச் செய்தோம்:

* பெரிய அளவிலான ஒரே ஒரு மைய ஆலை என்பதற்குப் பதிலாக, பரவலாக்கப்பட்ட சிறிய நடமாடும் ஆலைகளுக்கு (Modular micro-factories) மாறினோம்.

* மறுசுழற்சியை மட்டும் செய்யாமல், உற்பத்தி மற்றும் சேவைகளையும் (Resource recovery + Products + Service) இணைத்தோம்.

* ஒரே வகை பிளாஸ்டிக் என்பதற்குப் பதிலாக, கலப்பு கழிவுகளைக் (Mixed waste) கையாளுவதற்கு முன்னுரிமை கொடுத்தோம்."

உங்கள் நிறுவனத்திற்கு எப்படி நிதி கிடைத்தது? அரசு மானியங்கள் அல்லது முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைத்ததா?

``Circular Seed இதுவரை நிறுவனர்களின் சொந்த முதலீடு மற்றும் வாடிக்கையாளர் வருவாயைக் கொண்டே (Self-funded) இயங்கி வருகிறது. அதே சமயம் 

நாங்கள் திட்டமிட்டே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம்:

* வாடிக்கையாளர் திட்டங்கள் மூலம் நிதானமாக வளர்வது.

* கிடைக்கும் வருவாயைத் தொழில்நுட்ப வளர்ச்சியில் மீண்டும் முதலீடு செய்வது.

* முதலீட்டாளர்களிடம் முன்கூட்டியே நிதிக்காகக் கையேந்தி நிற்காமல் இருப்பது.

இருப்பினும், மேற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து (Western Australian Government) சில குறிப்பிட்ட பணிகளுக்காக மானியங்களைப் பெற்றோம். அவை:

* எங்கள் அறிவுசார் சொத்துக்களை (Intellectual Property) பாதுகாக்க.

* காப்புரிமை (Patent) பெறுவதற்கான ஆவணங்களை வலுப்படுத்த.

RISE - Rapid Innovation and Start-up Expansion இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.  சுழற்சி பொருளாதாரம் (Circular Economy) தொடர்பான தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் தங்கள் வணிகத்தை சர்வதேச அளவில் (குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே) விரிவுபடுத்த இது உதவுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி உதவி, நிபுணர்களின் ஆலோசனை மற்றும் சந்தை வாய்ப்புகளை CSIRO வழங்குகிறது. இதிலும் நாங்கள் தேர்வு செய்யப்ப்ட்டுள்ளோம். சுமார் 300 நிறுவனனங்கள் விண்ணப்பித்ததில் 8 நிறுவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த 8 நிறுவனங்களில் நாங்களும் ஒரு நிறுவனம் என்பதிலயே எங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்."

இதுவரை ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் Circular Seed நிறுவனம் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?

``எங்களது தாக்கம் அளவிடக்கூடியது மற்றும் பல அடுக்குகளைக் கொண்டது. ஏற்கனவே சொன்னதுதான் பணத்தை மட்டுமே எங்கள் துறையில் மதிப்பிடக்கூடாது. அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பதில்தான் இருக்கிறது.

சுற்றுச்சூழல் தாக்கம்:

* இதுவரை 3500+ டன்னுக்கும் அதிகமான சிக்கலான பிளாஸ்டிக் கழிவுகள் நிலப்பரப்புகளுக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளன.

* கார்பன் வெளியேற்றம் சுமார் 40% முதல் 60% வரை குறைக்கப்பட்டுள்ளது.

* கழிவுப் போக்குவரத்து குறைந்ததால் எரிபொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் இணைந்த செலவுகளும் குறைந்துள்ளன.

* ஒவ்வொரு சிறிய ஆலையும் 5 முதல் 6 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

* சேகரிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் கூடுதலாக 8 முதல் 10 மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

* கழிவு என்பது ஒரு செலவு என்ற நிலை மாறி, அது உள்ளூர் மூலப்பொருள் என்ற நிலையை அடைந்துள்ளது.

* நகராட்சிகள் மற்றும் நிறுவனங்களுக்குக் கழிவு மேலாண்மைச் செலவு குறைந்துள்ளது.

இவை அனைத்தையும் விட முக்கியமாக, "கழிவை நிர்வகித்தல்" என்ற நிலையிலிருந்து "வளங்களுக்கு உரிமையாளராதல்" என்ற கலாச்சார மாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறோம்.

நீங்கள் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே நேரத்தில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறிய முறையையோ, ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு பழக்கத்தையோ மாற்றினால் கூட, நீங்கள் மாற்றத்தைத் தொடங்கிவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்." என்று முடித்தார்.

(சாகசங்கள் தொடரும்)

சித்த மருத்துவத்தில் உற்பத்தி, விநியோகம்; 13 கிளை - `நல்வழி' மருந்தகத்தின் கதை | StartUp சாகசம் 52

`நல்வழி மருந்தகம்'StartUp சாகசம் 52இந்தியாவின் 'ஆயுஷ்' (AYUSH) சந்தை மிகவேகமாக வளர்ந்து வருகிறது. 2024-25 நிதியாண்டில், இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 416 மில்லியன் டா... மேலும் பார்க்க

StartUp சாகசம் 51: லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களின் வரவேற்பை பெற்ற 'Truckrr' செயலியின் சாகச கதை!

TruckrrStartUp சாகசம் 51இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது அதன் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறை (Logistics Sector) ஆகும். உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சரியான நேரத்தில் நுகர்வோரைச்... மேலும் பார்க்க