வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சம்; மொத்தமாக ராணுவத்துக்கு உயில் எழுதி நெகிழும் மதுர...
TNPL 2026: ஒரே நாள்... இரு அதிரடி சேஸ்! திண்டுக்கல்லில் தெறிக்கவிட்ட சேப்பாக் –திருப்பூர் அணிகள்!
TNPL 2026-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளும் பேட்டிங் அதிரடியால் ரசிகர்களை கட்டிப் போட்டன. பிற்பகலில் நடந்த 9-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அதன்பிறகு இரவில் நடந்த 10-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ்.
முதலில் நடந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 126/8 என்ற அளவுக்கு அந்த அணி கட்டுப்படுத்தப்பட்டது. இலக்கு 127 என்ற நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்குக்கு வந்தது.
126 ரன்கள்... பெரிய இலக்கு இல்லை என்றாலும், டி20-யில் அதை எட்டுவதற்குள் சில திருப்பங்கள் வரலாம். ஆனால் சேப்பாக் பேட்ஸ்மேன்கள் அந்த வேலையை நீண்ட நேரம் இழுத்துச் செல்லவில்லை. கேப்டன் நாராயண் ஜெகதீசன் முன்னின்று பேட்டை சுழற்றினார். 58 பந்துகளை எதிர்கொண்ட அவர், ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். அவரது அதிரடி சேப்பாக் அணியின் சேஸிங்கை எளிதாக்கியது.

ஜெகதீசனின் அதிரடியுடன் சீரான ஆட்டத்தைத் தொடர்ந்த சேப்பாக், 16.2 ஓவர்களில் 131/3 எடுத்து இலக்கை எட்டியது. 22 பந்துகள் மீதமிருக்கும்போதே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அந்தப் போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே அதே மைதானத்தில் அடுத்த அதிரடி தொடங்கியது.
இந்த முறை நெல்லை ராயல் கிங்ஸ் பேட்டிங். ஆரம்பத்திலேயே வேகம் எடுத்த நெல்லை, சந்தோஷ் குமார் 19 பந்துகளில் 43 ரன்கள், அஜிதேஷ் குருசாமி 35 ரன்கள் என நல்ல தொடக்கம் பெற்றது. தொடர்ந்து முகிலேஷ் 26 பந்துகளில் 46 ரன்கள் விளாச, கடைசி கட்ட அதிரடியுடன் நெல்லை 20 ஓவர்களில் 206/8 என்ற பிரமாண்ட ஸ்கோரைப் பதிவு செய்தது.
206 ரன்கள்... திருப்பூருக்கு எளிதான இலக்கு இல்லை. ஆனால் சேஸிங்கைத் தொடங்கியதும் அந்த எண்ணிக்கை பெரிய தடையாகவே தெரியவில்லை.
அமித் சத்விக் களத்தில் இறங்கியதிலிருந்தே ஆட்டத்தின் வேகம் மாறியது. நெல்லை பந்துவீச்சாளர்களை குறிவைத்து தாக்கிய அவர், வெறும் 31 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். அதில் 8 சிக்ஸர்கள்! ஒவ்வொரு சிக்ஸரும் நெல்லையின் இலக்கை கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாக்கிக் கொண்டே சென்றது.
சத்விக் 76 ரன்களில் ஆட்டமிழந்தபோது, திருப்பூர் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பாலும் 2 ரன்களில் வெளியேறினார். அந்த நேரத்தில் நெல்லைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது போலத் தெரிந்தது.

ஆனால் அங்கேயும் திருப்பூர் கதை முடியவில்லை. ஒருபுறம் துஷார் ரஹேஜா தனது ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மறுபுறம் கேப்டன் சாய் கிஷோர் களமிறங்கினார். இருவரும் சேர்ந்து மீதமிருந்த இலக்கை வேகமாகக் குறைத்தனர்.
துஷார் ரஹேஜாவின் பேட் தொடர்ந்து மேஜிக் செய்ய, 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார். சாய் கிஷோரும் 23 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் 18.1 ஓவர்களில் 207/2. 206 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை 11 பந்துகள் மீதமிருக்கும்போதே சேஸ் செய்து, திருப்பூர் தமிழன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
ஒரே மைதானம்... ஒரே நாள்... இரண்டு அதிரடி சேஸ்கள். முதல் போட்டியில் ஜெகதீசனின் 90 ரன்கள் சேப்பாக்கை வெற்றிக்கு அழைத்துச் சென்றது என்றால், இரண்டாவது போட்டியில் சத்விக்கின் 76 ரன்களும் துஷாரின் ஆட்டமிழக்காத 90 ரன்களும் திருப்பூரின் சேஸிங்கை எளிதாக்கியது.!




















