படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்; வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்; ஆச்சரியத...
TVK: "மாநில முன்னேற்றத்திற்காக..." - தவெக வெற்றிக்கு ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ரியாக்ஷன் என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்-க்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ``தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொண்டர்களுக்கும் அவர்கள் அயராத தேர்தல் பணிக்கும் என் நன்றி! தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை ஏற்போம், நல்லாட்சி அமையட்டும்" எனக் பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ச்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அவர் தன் எக்ஸ் பதிவில், ``தமிழ்நாடு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தி அவர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் தொகுதியில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழ்நாடு முழுவதும் நமது கூட்டணி வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்த அனைத்து தோழமைக்கட்சிகளுக்கும், மேலும் தமிழ்நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட காங்கிரஸ் உறவுகளுக்கும் என் நன்றிகள்.
மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பாதையில், சமூக நீதி மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பை உறுதியாக நிலைநிறுத்த தொடர்ந்து செயல்படுவோம். மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி; மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














