Vadivelu: "இருக்கிறவுங்கட்ட வரிய போட்டு தள்ளுங்க; ஏழைகளுக்குப் பார்த்து வரி போடுங்க" - வடிவேலு கலாய்
"மாமன்னன் கேரக்டர்தான் உண்மையான வடிவேலு. மாமன்னன் படத்தில் வருவது போலக் கஷ்டத்தை அனுபவித்தவன். அதனால்தான் நகைச்சுவை நடிகனாக மாறினேன்" என்று மதுரையில் நடந்த விழாவில் நடிகர் வடிவேலு பேசினார்.
மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் வருமான வரித்துறை தலைமை ஆணையர் சஞ்சய்ராய், முதன்மை ஆணையர் வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வடிவேலு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் வருமானவரித்துறை அதிகாரிகள், ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களுக்கு நடிகர் வடிவேலு பரிசுகளை வழங்கினார்.
பின்பு விழாவில் பேசிய வடிவேலு, "எனக்கு நாராயணன் என்ற பெயரை என் மாமா வைத்த நிலையில் இரண்டு நாட்கள் உடம்பு சரியில்லாமல் போனதால், என் அம்மா முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் நேர்ந்து எனக்கு வடிவேலு என்று பெயர் வைத்தார். அதனால் நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருக்கிறவங்க கிட்ட வரியைப் போட்டு தள்ளுங்க. ஏழை எளியவங்களுக்குக் கொஞ்சம் பார்த்து போடுங்க" என வருமானவரித்துறை அதிகாரிகளைப் பார்த்து வேண்டுகோள் வைக்க, ஒரே கலகலப்புதான்.
பின்னர் வந்திருந்தவர்கள், உங்கள் விருப்பமான பாடல்களைப் பாடுங்கள் எனக் கேட்டபோது, மாமன்னன் படத்தில் வரும் 'தந்தானத்தானா....' பாடலையும், 'எட்டணா இருந்தா எட்டு ஊரு என் பாட்டை கேட்கும்' என்ற பாடலையும் பாடியதோடு, கூடுதலாக எம்.ஜி.ஆர் பாடலையும் பாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.
அப்போது ரசிகை ஒருவர், "காமெடியாகவும் நடிக்கிறீர்கள், மாமன்னன் போன்ற படத்திலும் நடித்திருக்கிறீர்கள், உங்களுடைய உண்மையான கேரக்டர்தான் என்ன சார்?" எனக் கேள்வி எழுப்ப, "நான் மாமன்னன் படத்தில் வரும் வடிவேல் போல அதிக அளவு கஷ்டப்பட்டிருக்கிறேன். அதனால் காமெடி நடிகராக உயர்ந்திருக்கிறேன். ஆனால், என்னுடைய உண்மையான கேரக்டர் மாமன்னன் வடிவேலுதான்" என்றார்.
தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் ஜாலியாக பதில் அளித்தும் பாட்டுப்பாடியும் வருமான வரி அலுவலகத்தையே கொண்டாட்டமாக்கினார்.
விகடன் ஆடியோ புக்ஸ்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...