அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி
"100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா?" - கனிமொழி கேள்வி!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, "இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என அமைச்சர் மூர்த்தி சொன்னார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதை செய்து காட்டியது திராவிட மாடல் அரசு, இன்று அதிகமான பெண்களுக்கு வேலை வாய்பு கிடைக்கிறது. ஒரு காலத்தில் பெண் குழந்தை வேண்டாம் என நினைத்தார்கள், பின்பு பெண்கள் படித்தால் என்ன ஆகப்போகிறது என வீட்டிலேயே வைத்திருந்தார்கள். 10 ஆம் வகுப்பு படித்தால் உதவித்தொகை என கலைஞர் அறிவித்தார். அதன் பின்பு பெண்கள் படித்தார்கள், கூடுதலாக 12 ஆம் வகுப்புக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டது.

இன்று கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், பேருந்திலும் இலவசப் பயணம் என திட்டங்களை கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி என்பது பெருமை.
நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது அன்றைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது 100 நாள் வேலை திட்டம். பாஜக ஆட்சிக்கு வந்த பின் பெண்களுக்கும் வேலை கொடுப்பதில்லை. இன்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் பெயரை எடுத்து விட்டார்கள். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வந்த திட்டத்தை இன்று அழிக்க நினைக்கிறார்கள்.
நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என கேட்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை அழிக்க கொண்டு வரப்பட்ட மசோதாவைப் பற்றி தெரிவாக பதில் சொல்லத் தெரியுமா? எல்லாவற்றையும் மாற்றிடுவவேன் என்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களும் சொல்கிறார்கள். ஆனால், கிராமப்புற சகோதரிகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தை நிறுத்தும் மசோதாவை பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை.
இன்று மதக் கலவரத்தை தூண்டி வருகிறார்கள், 100 நாள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு வேலை இல்லாமல் போவதில் அதிகமாக இந்துக்கள்தான் பாதிக்கப்பட போகிறார்கள்.
இந்த ஆட்சி தொடர வேண்டும், அப்போதுதான் இனத்தின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 2026-ல் வெற்றியை நிலை நாட்டுவீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.















