``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
Vinesh Phogat: ``என்னுள் இருக்கும் நெருப்பு'' - மீண்டும் ஒலிம்பிக்குக்கு தயாராகும் வினேஷ் போகத்
மல்யுத்தத்தில் ஒலிம்பிக், காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டிப்போட்டிகள் என அனைத்திலும் வெற்றி பெற்று பதக்கங்களைக் குவித்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெற்று மீண்டும் களத்துக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார்.
வினேஷ் போகத் பதிவு
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "பாரீஸ் ஒலிம்பிக்தான் முடிவா என்று மக்கள் பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

நீண்ட நாள்களாகவே என்னிடம் அதற்கு பதில் எதுவும் இல்லை. நான் மீண்டு வருவதற்காக நான் போட்டிக் களத்தில் இருந்து மட்டுமல்ல, மன அழுத்தம், எதிர்பார்ப்புகள், சுய விருப்பங்களில் இருந்து கூட விலகி இருக்க வேண்டிய சூழல் இருந்தது.
உலகம் இதுவரை கண்டிராத எனது பயணத்தின் உயரத்தையும், தோல்விகளையும், தியாங்களையும் புரிந்துகொள்வதற்கு நீண்ட காலம் ஆகியுள்ளது. அதில், என்னைப் பற்றி தெரிந்துகொண்டேன்.
நான் இன்னும் இந்த விளையாட்டை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் களத்துக்கு திரும்பி போட்டியிட விரும்புகிறேன்.
என்னுள் இருக்கும் நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். நான் எவ்வளவு தூரம் சென்றாலும் என்னில் ஒரு பாதி களத்திலேயே தான் இருக்கிறது.
மீண்டும் 2028 ஒலிம்பிக் களத்தை நோக்கி பயமின்றி முன்னேறுகிறேன். இந்த முறை நான் தனியாகச் செல்லபோவதில்லை. எனது அணியில் எனது மகனும் சியர் லீடராக இணைந்துள்ளான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வினேஷ் போகத் கடந்துவந்த பாதை
மல்யுத்த சம்மேளனத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராடிய வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கி ஹரியாணா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி கௌரவித்தார்.
போட்டியில் இருந்து வெளியேறிய மன வேதனையில், மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெற்ற அவர், பின்னர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பிறகு ஹரியாணா தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவுள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கடந்த ஜூலை மாதத்தில் வினேஷ் போகத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில்தான், 31 வயதான வினேஷ் போகத், தான் மீண்டும் களத்துக்குத் திரும்பவிருப்பதாகவும், தன்னை உற்சாகப்படுத்த தன்னுடன் குட்டி சியர் லீடர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

.jpg)


















