கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக...
அணுவைப்பிளந்த அறிவுச்சுடர்: பாகுபாடுகளை வென்ற லீஸ் மெயிட்னரின் சாதனைப் பயணம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பெண்களுக்குக் கல்வி வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்த காலகட்டத்தில், நவம்பர் 1878-ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் ஒரு யூதக் குடும்பத்தில் லீஸ் மெயிட்னர் பிறந்தார். ஆஸ்திரியப் பள்ளி இறுதித் தகுதித் தேர்வான 'மத்துரா'வை (Matura) எழுத அனுமதிக்கப்படாத அந்த காலகட்டத்தில் பெண்கள், பள்ளிக்கல்வி தகுதியின்றி பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புகளில் சேர இயலவில்லை. 1896-ஆம் ஆண்டு பெண்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டபோது, எட்டு ஆண்டுகாலம் தவறவிட்டிருந்த பள்ளிப் படிப்பை மெயிட்னர் தனிப்பயிற்சி வகுப்புகள் மூலம் இரண்டே ஆண்டுகளில் நிறைவு செய்தார். 1901-ஆம் ஆண்டு அவர் 'மத்துரா' தேர்வில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றார்.
வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது தனது உயர்கல்வியை தொடங்கிய போது தான் கலந்து கொண்ட கணிதம் மற்றும் இயற்பியல் வகுப்புகளில் 300 மாணவர்களுக்கு மத்தியில் 3 மாணவிகள் மட்டுமே படித்ததாக லீஸ் மெயிட்னர் கூறியுள்ளார். ஏராளமான சவால்கள் இருந்தபோதிலும், 1906-ஆம் ஆண்டில், ஆஸ்திரியாவில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டாவது பெண் என்ற சிறப்புடன் தனது பட்டத்தைப் பெற்றார்.

பெர்லினில் உள்ள ஃபிரெட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக்கழகத்தில் லீஸ் மெயிட்னர் புகழ்பெற்ற இயற்பியலாளர் மாக்ஸ் பிளாங்கின் வழிகாட்டுதலில் தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கினார். லீஸ் மெயிட்னரை சந்திப்பதற்கு முன், பல்கலைக்கழகங்களில் பெண்களைச் சேர்ப்பதை எதிர்த்த பிளாங்க், மெயிட்னரின் ஆர்வத்தை உணர்ந்து தனது விரிவுரைகளில் கலந்துகொள்ள மெயிட்னரை அனுமதித்தார்.
ஆராய்ச்சி அனுபவத்தைத் தேடிய மெய்ட்னருக்கு கதிரியக்கத்தை ஆராய்ந்து கொண்டிருந்த இளம் வேதியியலாளரான ஓட்டோ ஹான் அறிமுகமானார். அதன்பின், அவ்விருவரும் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். சட்டரீதியாக கல்வி நிறுவனங்களில் பெண்களைச் சேர்த்துக்கொள்வது முறைப்படுத்தப்படாத அக்காலத்தில், மாணவர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த ஹானின் வேதியியல் ஆய்வகத்தில் மெய்ட்னர் ஆய்வுப் பணிகளில் பங்கேற்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை.

பிரதான வசதிகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் பிரதானக் கட்டிடத்தின் அடியில் அமைந்திருந்த ஒரு பழைய மரவேலைப்பட்டறையை தற்காலிக ஆய்வகமாகப் பயன்படுத்த மெய்ட்னர் நிர்பந்திக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின் வெளிப்புற நுழைவாயிலையும், நுழைவாயில் அருகே உள்ள தெருவில் சற்று தொலைவில் அமைந்திருந்த ஒரு உணவகத்தின் கழிப்பறைகளையும் லீஸ் மெயிட்னர் தனது ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்திக்கொண்டார்.
பல்கலைக்கழகத்துக்குள் மட்டுமல்லாமல் பெண்களை தங்களுடன் சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டிய அறிவியல் சமூகத்திடம் இருந்தும் பல்வேறு தடைகளை மெய்ட்னர் எதிர்கொண்டார். கதிரியக்கம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கான விமர்சனங்களை குடும்பப் பெயரை மட்டுமே பயன்படுத்தி தொடர்ந்து எழுதி வந்த லீஸ் மெயிட்னரிடம் ஒரு கட்டுரையை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார் அந்தக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இதழின் பதிப்பாசிரியர்.
கட்டுரையின் கீழ் உள்ள முகவரியில் முழு பெயரையும் கண்ட பதிப்பாசிரியர், கட்டுரையாளர் ஒரு பெண் என்பதை உணர்ந்து ஒரு பெண்ணால் எழுதப்பட்ட கட்டுரை தனக்குத் தேவையில்லை என்று லீஸ் மெயிட்னருக்கு பதில் அளித்து அந்த கட்டுரையையும் நிராகரித்துள்ளார்.

1912-ஆம் ஆண்டில், ஹான் மற்றும் மெய்ட்னர் ஆகியோர் பெர்லினில் புதிதாக நிறுவப்பட்ட 'கைசர் வில்ஹெல்ம் வேதியியல் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்காக சென்றனர். பல ஆண்டுகள் ஊதியமற்ற சேவையாற்றிய பிறகு, மெய்ட்னர் இறுதியாக ஹானின் உதவியாளராகத் ஊதியத்துடன் கூடிய தனது முதல் பணியைப் பெற்றார்.
இந்தச் காலகட்டத்தில், மெய்ட்னர் அணுக்கரு இயற்பியல், கதிரியக்க வேதியியல் ஆகிய துறைகளில் தனது பெரும் பங்களிப்பை வழங்கினார். 'புரோட்டாக்டினியம்' தனிமத்தைக் கண்டறிந்தார். அத்துடன், கைசர் வில்ஹெல்ம் வேதியியல் நிறுவனத்தில் தனக்கென ஒரு தனி கதிரியக்க இயற்பியல் துறையையும் நிறுவினார். எதிர்கொண்ட பாகுபாடுகள் அனைத்தையும் கடந்து அறிவுக்கூர்மை மற்றும் விடாமுயற்சியுடன், மெய்ட்னர் ஜெர்மனியின் முதல் பெண் இயற்பியல் பேராசிரியரானார்.

1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது, தனது யூதப் பின்னணியின் காரணமாக மைட்னரின் வாழ்க்கை மீளமுடியாத மாற்றத்திற்கு உள்ளானது. 1938-ல் ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டபோது, ஒரு ஆஸ்திரியக் குடிமகளாக அவர் அனுபவித்து வந்த சொற்பப் பாதுகாப்புகளும் முற்றிலுமாக மறைந்தன. கடின உழைப்பால் தான் கட்டமைத்த பணி, நண்பர்கள், செல்வாக்கு மிக்க பதவி அனைத்தையும் விட்டு மைட்னர் கடவுச்சீட்டு ஏதுமின்றி, ஒரு சிறிய பயணப் பையைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் ஜெர்மனியை விட்டு வெளியேறினார்.
அகதி விஞ்ஞானிகளின் வருகையினால் வேலைவாய்ப்புகள் மிகவும் அரிதாகிவிட்ட நிலையில், ஸ்டாக்ஹோமில் உள்ள மேன் சீக்பான் நிறுவனத்தில் (Manne Siegbahn Institute) இணைந்த மெய்ட்னர், பெர்லினில் தான் பழகியிருந்த பணிச்சூழல் இல்லை என்பதை உணர்ந்தார். ஸ்டாக்ஹோமில் பணியாற்றியபோது தன் சகோதரருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், தான் உணர்ந்த தனிமையையும், ஆய்வு உபகரணங்களைப் பெறுவதில் தான் எதிர்கொண்ட சிரமங்களையும் அவர் கூறியிருந்தார்.
பெர்லினில் மெயிட்னர் தொடங்கிய பணியை ஹானும் ஃபிரிட்ஸ் ஸ்ட்ராஸ்மேனும் தொடர்ந்தனர். டிசம்பர் 1938-ல், யுரேனியம் நியூட்ரான்களால் தாக்கப்படும்போது பேரியம் உருவாவதை கண்டறிந்த அவர்கள் எதிர்பாராத, தங்களால் விளக்க முடியாத அந்த நிகழ்வு குறித்து உடனடியாக மெய்ட்னருக்கு கடிதம் எழுதினர்.

ஸ்வீடனில் தனது தனது ஆய்வினை தொடர முடியாத மெயிட்னர் தனது மருமகனான ஓட்டோ ஃபிரிஷுடன் இணைந்து ஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மேனின் குழப்பமான கண்டுபிடிப்புகளுக்கு ஒரு அதிகாரப்பூர்வமான விளக்கத்தை ஒரு ஆய்வு கட்டுரையாக 1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டனர்.
"நியூட்ரான் தாக்குதலின் கீழ் யுரேனியம் மற்றும் தோரியத்தின் சிதைவுப் பொருட்கள்" என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரை யுரேனியம் அணுக்கரு எவ்வாறு இரண்டாகப் பிளவுபட்டது என்பதை விளக்கும் ஒரு கட்டமைப்பு கோட்பாட்டை விளக்கியது. இந்தக் கட்டுரை அணு இயற்பியலை மாற்றி அமைக்க போகும் "பிளவு" (fission) என்ற சொல்லை உருவாக்கியது.
தொடர்ந்து பெர்லினில் நடைபெற்ற இது சம்பந்தப்பட்ட ஆய்வுகளிலும், இந்த ஆய்வுகளுக்கான விமர்சனங்களிலும் மெயிட்னரின் பங்கு அங்கீகரிக்கப்படாமலேயே போனது. ஸ்ட்ராஸ்மேன் மெயிட்னரை "எங்கள் குழுவின் அறிவுசார் தலைவர்" என்று குறிப்பிட்டபோதிலும், 1944-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு ஹானுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. பலமுறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும், மெயிட்னரின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்தன.
ஓட்டோ ஃபிரிஷ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து அணுகுண்டு தயாரிக்கும் திட்டமான "மன்ஹாட்டனில்" சேர லீஸ் மெயிட்னர் 1943-ஆம் ஆண்டு அழைக்கப்பட்டார். ஸ்வீடனை விட்டு வெளியேறி நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அவரது பங்களிப்பை மதிக்கும் அறிவியல் சமூகத்துடன் ஒன்றிணையும் வாய்ப்பை லீஸ் மெயிட்னர் உறுதியாக நிராகரித்தார்.
முதலாம் உலகப் போரின்போது செவிலியராகப் பணியாற்றிய மெய்ட்னர், தன்னையும், தனது இயற்பியல் அறிவையும் போர் இயந்திரங்களின் சேவைக்காக அர்ப்பணிக்க இயலாது என்றும் "குண்டுகளை உருவாக்கும் பணியில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை!" என்றும் உறுதியாக கூறினார்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.




















