விண்மீன்களின் துடிப்பைக் கண்டறிந்த சாதனைப் பெண்! - அங்கீகாரம் மறுக்கப்பட்ட கதை
விண்மீன்களின் துடிப்பைக் கண்டறிந்த சாதனைப் பெண்! - அங்கீகாரம் மறுக்கப்பட்ட கதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
டேம் சூசன் ஜோஸ்லின் பெல் பர்னெல் நவீன வானியற்பியலின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அவர் கண்டுபிடித்த துடிப்பு விண்மீன்கள் (Pulsars), விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய கண்டுபிடிப்பாக இன்றளவும் கருதப்படுகின்றன..
1943-ஆம் ஆண்டு சூசன் ஜாய்ஸ் பெல் என்ற பெயரில் பிறந்த அவர், வடக்கு அயர்லாந்தின் அர்மா கவுன்டியில் உள்ள லர்கன் என்ற இடத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சிறு வயதிலிருந்தே தனது தந்தையின் வானியல் புத்தகங்களைப் படிப்பதையும், கட்டிடக் கலைஞரான அவரது தந்தை வடிவமைக்க உதவிய அர்மா கோளரங்கத்திற்குச் செல்வதையும் விரும்பினார்.

20-ஆம் நூற்றாண்டின் மத்தியில், சிறுவர்கள் தொழில்நுட்பப் பாடங்களைப் படிக்க அனுமதிக்கப்பட்டபோது, சிறுமிகள் சமையல், தையல் போன்ற பாடங்களைப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெல் பர்னெல்லின் குடும்பம் இந்த நெறிமுறைகளை எதிர்த்தது. இந்த நிலைப்பாடு தான், கல்வி பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்ற உறுதியான நம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட பெல் பர்னெல், அறிவியலைப் படிக்க வழிவகுத்தது. ஆயினும், 1940-களில் வடக்கு அயர்லாந்தில், இந்த நம்பிக்கை மற்ற எந்த உணர்வையும் விட கடுமையான பகைமையைச் சந்தித்தது.
தனது பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, பெல் பர்னெல், தான் ஒரு வானியலாளராக வேண்டுமென விரும்பினார். இந்த லட்சியம் அவரை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றது, அங்கு ஐம்பது பேர் கொண்ட வகுப்பில் அவர் ஒரே பெண் மாணவியாக இருந்தார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்ற பெல் பர்னெல், உயர் கல்விக்காக உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

தனது ஆராய்ச்சி பட்ட மேற்பார்வையாளர் ஆண்டனி ஹியூவிஷுடன் இணைந்து அவர் மேற்கொண்ட முதல் ஆய்வு, அக்காலகட்டத்தில் செய்திகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 'குவாசர்கள்' (Quasars) எனப்படும் அடர்த்தியான வான்பொருட்களைக் கண்டறிவது தொடர்பானதாகும். ரேடியோ அலைநீளங்களைப் பயன்படுத்தி தொலைவில் உள்ள வான்பொருட்களை அடையாளம் காணக்கூடிய ஒரு ரேடியோ தொலைநோக்கியை உருவாக்குவது இந்த ஆய்வின் முதற்கட்டப் பணியாக அமைந்தது. 1960-களில் ஜோஸ்லின் பெல் உட்பட்ட ஆறு பேர் கொண்ட குழு இணைந்து இத்தொலைநோக்கியை உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. இத்தொலைநோக்கி முல்லார்ட் வானொலி வானியல் ஆய்வகத்தில் நிறுவப்பட்டது.
இரவும் பகலும் இடைவிடாமல் வானத்தை ஆராய, பூமியின் சுழற்சிக்கு இணையாகச் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இத்தொலைநோக்கியை இயக்குவதற்காக நியமிக்கப்பட்டவர் ஜோஸ்லின் பெல். அந்தோனி ஹியூவிஷ் மற்றும் ஜாஸ்லின் பெல் பர்னல் ஆகியோரால் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட பெல் பர்னெலினின் முனைவர் பட்ட ஆய்வில் ஜாஸ்லின் பெல் பர்னெல் ஆயிரக்கணக்கான மீட்டர் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த தொலைநோக்கியை இயக்கியதுடன் அதன் மூலம் பெறப்பட்ட தரவுகளையும் பகுப்பாய்வு செய்தார்.
ஒரு நாள் தரவுகளை வகுப்பாய்வு செய்து கொண்டிருந்த போது தன்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சமிக்ஞையை பெல் பர்னெல் உணர்ந்தார். அந்த சமிக்ஞை குவாசரோ, தேவையற்ற குறிக்கீடோ அல்ல என்பதை உறுதிப்படுத்திய பெல் பர்னெல், அந்த சமிக்ஞை குறித்து புரிந்து கொள்ள ஹெவிஷிடம் வினவினார். தொலைநோக்கியைத் தவறாக இணைத்திருந்ததால் உருவான தேவையற்ற குறுக்கீடு அந்த சமிக்ஞை என ஹெவிஷ் கூறினார்.
இந்த பதிலில் தெளிவடையாத பெல் பர்னெல் சமிக்ஞையைத் தெளிவாகப் பிரித்தறிய பிரித்தறிய வானாய்வகத்திற்குச் சென்று, வரைபடப் பதிவி மூலம் தனது பதிவை அதிவேகமாக இயக்கி ஆய்வு செய்யத் தொடங்கினார். இதன் விளைவாக, துடிப்புடைய அதிர்வெண் கொண்ட சமிக்ஞை வெளிப்பட்டதை பெல் பர்னெல் கண்டறிந்தார். அந்த சமிக்ஞை தேவையற்ற குறுக்கீடு அல்ல என்பதை உறுதி செய்து கொண்டார்.

இந்தச் சமிக்ஞை தொடர்பாக பெல் பர்னெல் ஒரு புதிய ஆய்வைத் தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, முதலில் கண்டறியப்பட்டதைப் போன்ற மற்றொரு சமிக்ஞையை அவர் கண்டறிந்தார். இந்த இரண்டு சமிக்ஞைகளுமே துடிப்பு விண்மீன்கள் என்று அவர் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னதாக, இந்த விண்வெளிப் பொருட்கள் வேடிக்கையாக "சிறு பச்சை மனிதர்கள்" (Little Green Men - LGM) என்று அழைக்கப்பட்டன.
துடிப்பு விண்மீன்களைக் கண்டுபிடித்தவர் பெல் பர்னெல் என்றபோதிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவற்றைக் குறித்துச் சொற்பொழிவாற்றியவர் ஆண்டனி ஹியூவிஷ். துடிப்பு விண்மீன்கள் கண்டுபிடிப்பு குறித்த கேள்விகள் ஆண்டனி ஹெவிஷிடம் கேட்கப்பட்ட நிலையில், பெல் பர்னெலிடம் பெரும்பாலும் அவரைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டன. ஆண்டனியை விடத் தன்னால் இன்னும் விரிவாகவும், அதிக மேற்கோள்களைச் சுட்டிக்காட்டியும் பேசியிருக்க முடியும் என்றும் ஆனால் தான் ஒரு ஆராய்ச்சி மாணவியாக இருந்ததால் அதைத் தவிர்த்ததாகவும் பின்னொரு நாளில் பெல் பர்னெலின் குறிப்பிட்டிருந்தார்.
துடிப்பு விண்மீன் என்பது மிக அதிவேகமாகச் சுழலும் ஒரு நியூட்ரான் நட்சத்திரம். தனது காந்த அச்சு வழியே ரேடியோ அலைகளை உமிழும் இந்த துடிப்பு விண்மீன் அலைகள் பூமியை நோக்கித் திரும்பும்போதெல்லாம் கலங்கரை விளக்கத்தின் ஒளிக்கற்றையைப் போல நமக்குத் துடிப்பலைகளாக காட்சியளிக்கிறது. இதே காரணத்தினால்தான் இதற்கு துடிப்பு விண்மீன்" என்ற பெயர் கிடைத்தது.
பல்வேறு துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள துடிப்பு விண்மீன்களின் கண்டுபிடிப்பு, நியூட்ரான் விண்மீன்களின் இயல்பு குறித்த புதிய நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டைச் சோதிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்பட்ட துடிப்பு விண்மீன்கள், தற்போது அண்டவியல் காலக்கணிப்புத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவது தொடர்பான தனது ஆய்வை பெல் பர்னல் நிறைவு செய்த பிறகு, துடிப்பு விண்மீன்களைக் கண்டறிந்தமைக்காகப் 1974-ஆம் ஆண்டில் பேராசிரியர் ஆண்டனி ஹியூவிஷிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பெல் பர்னலின் பங்களிப்புகளை அங்கீகரிக்கத் தவறிய நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் நடவடிக்கைக்கு சர் ஃப்ரெட் ஹாயில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

1977-ஆம் ஆண்டில் ஓர் நேர்காணலில், துடிப்பு விண்மீன்கள் கண்டறியப்பட்ட சமயத்தில் தான் ஒரு மாணவியாகவே இருந்ததால், தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாத முடிவு பொருத்தமானதாக கருதுவதாக பெல் பர்னல் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பெல் பர்னெல்லுக்கு நோபல் பரிசு வழங்கப்படாவிட்டாலும், அவர் பல வழிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு முதல், அவர் 'ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்' (Order of the British Empire) அமைப்பின் 'டேம் கமாண்டர்' (Dame Commander) பதவியை வகித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டில், 'ராயல் சொசைட்டி ஆஃப் எடின்பர்க்' அமைப்பின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018-ஆம் ஆண்டு, துடிப்பு விண்மீன்கள்களைக் கண்டுபிடித்ததற்காக, “அறிவியலின் ஆஸ்கார்” என்று அழைக்கப்படும் 'பிரேக்த்ரூ' (Breakthrough Prize) பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அப்பரிசின் மூலம் தனக்குக் கிடைத்த மூன்று மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை, சிறுபான்மை, அகதி மாணவர்கள் மற்றும் பெண்களை இயற்பியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க உதவிடும் வகையில், 'இயற்பியல் நிறுவனத்திற்கு' (Institute of Physics) அவர் நன்கொடையாக அளித்தார்.
2021 ஆம் ஆண்டில், லண்டன் 'ராயல் சொசைட்டி' அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இங்கிலாந்தின் மிக உயர்ந்த அறிவியல் கௌரவமான 'காப்லி பதக்கத்தை' (Copley Medal) அவர் பெற்றார். இளம் பெண்களுக்கு நேர்மறையான முன்மாதிரியாகத் திகழ்வதன் முக்கியத்துவத்தை ஆழமாக நம்பும் அவர், தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையின் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.















