செய்திகள் :

இதனை செய்தால், ஈஸியா பணக்காரர் ஆகலாம்.! - நிதி ஆலோசகர்கள் வலியுறுத்தும் 20 ஃபைனான்ஷியல் டிப்ஸ்!

post image

பணக்காரர் ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலோரின் கனவு, லட்சியம். வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது மட்டுமே முக்கியமல்ல; சம்பாதிக்கும் பணத்தை எப்படிப் பாதுகாக்கிறோம், எப்படிப் பெருக்குகிறோம், எப்படிச் செலவழிக்கிறோம் என்பதுதான் நம்முடைய நிதி எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. நிறைய சம்பாதிப்பவர்கள் எல்லோரும் பணக்காரர் ஆகிவிடுவதில்லை. சம்பாதிப்பதில் திட்டமிட்டு நிறைய சேமிப்பவர்கள்தான் பணக்காரர் ஆகிறார்கள். அத்துடன் நிதி சார்ந்த சில விஷயங்களில் கவனமாக இருப்பவர்களே பணக்காரர் ஆகிறார்கள். வாழ்க்கையில் பணக்காரர் ஆக நினைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் வலியுறுத்தும் 20 முக்கியமான ஃபைனான்ஷியல் டிப்ஸ் இதோ...

1. வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்யுங்கள்!

மாதம் ரூ.50,000 சம்பாதித்தாலும், ரூ.55,000 செலவு செய்தால் நிதி நெருக்கடிதான் ஏற்படும். வருமானம் எவ்வளவு உயர்ந்தாலும் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே செல்வம் சேர்ப்பதற்கான முதல் படி.

2. முதலில் சேமியுங்கள்; பிறகு செலவு செய்யுங்கள்!

சம்பளம் வந்த பிறகு செலவு செய்தது போக மீதம் பணம் இருந்தால் சேமிக்கலாம் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் நிச்சயமாக மீதம் பணம் இருக்காது. சம்பளம் வந்தவுடன் குறைந்தது 20 சதவிகிதத்தைச் சேமிக்கவும் முதலீட்டுக்காகவும் ஒதுக்குங்கள். மீதம் இருக்கும் பணத்தில் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தப் பழகுங்கள்.

மாடல் படம்

3. எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குங்கள்!

வேலை இழப்பு, மருத்துவச் செலவு என எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத செலவுகள் வரலாம். அத்தகைய சூழல்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான அத்தியாவசியச் செலவுகளைத் தனியாக வைத்திருங்கள். நிலையான வருமானம் இல்லாதவர்கள் 9 முதல் 12 மாதங்களுக்கான தொகையை வைத்திருப்பது நல்லது.

4. மருத்துவக் காப்பீடு அவசியம்!

ஒரு பெரிய மருத்துவச் செலவு வந்தால், பல ஆண்டுகளாகச் சேமித்த பணத்தையே அது காலி செய்துவிடலாம். குடும்ப உறுப்பினர்களின் வயது, உடல்நிலையைப் பொறுத்து போதுமான ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

5. டேர்ம் இன்ஷூரன்ஸ் அவசியம்!

குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு ஆதாரமாக இருப்பவருக்கு எதிர்பாராதவிதமாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குடும்பத்தின் இலக்குகளுக்குப் பணம் இல்லாத நிலை வரக்கூடாது. குடும்பப் பொறுப்புகளுக்கும் கடன்களுக்கும் ஏற்ற அளவில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது முக்கியம்.

6. அதிக வட்டி கடன்கள் வேண்டாம்!

கிரெடிட் கார்டு கடன், பர்சனல் லோன் போன்ற அதிக வட்டிக் கடன்கள் உங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை விழுங்கிவிடும். அவசியமற்ற செலவுகளுக்குக் கடன் வாங்கிவிட்டு, அவசியமான இலக்குகளுக்கு முதலீடு செய்ய பணம் இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம். அதிக வட்டிக் கடன்களை வாங்காமல் இருப்பதே பணம் சேர்க்க சிறந்த வழி. அப்படியே வாங்கினாலும் உடனே அடைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்!

7. கிரெடிட் கார்டு செலவுப் பழக்கம் வேண்டாமே!

கிரெடிட் கார்டு என்பது கடன் பெறுவதற்கான ஒரு வசதி மட்டுமே. உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாதபோது, கார்டு இருக்கிறது என்பதற்காகப் பொருள்களை வாங்காதீர்கள். கடன் சுமை அதிகரித்துவிட்டால், முதலீடு செய்ய பணம் இருக்காது!

மாடல் படம்

8. ஓய்வுக்கால முதலீட்டை இளமையிலேயே தொடங்குங்கள்!

பலரும் வீடு வாங்க, கார் வாங்க எனத் திட்டமிடுகிறார்கள். ஓய்வுக்காலத்துக்குப் பணம் சேர்க்க நினைப்பதில்லை. அப்புறம் பார்க்கலாம் என நினைத்து 50 வயதைத் தாண்டியும் ஒன்றுமே சேர்க்காதவர்கள் ஏராளம். 25 அல்லது 30 வயதிலேயே ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பிப்பதே நல்லது. அப்போதுதான் ஓய்வுபெறும் வயதில் உங்களால் பணக்காரராக ஓய்வு பெற முடியும்.

9. ஒரே முதலீட்டில் மொத்தப் பணத்தையும் போடாதீர்கள்!

பலர் செய்யும் தவறு ஒரே ஒரு முதலீட்டுப் பிரிவில் மொத்த முதலீட்டையும் செய்வதுதான். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட் எனப் பல்வேறு முதலீடுகளில் உங்கள் இலக்கு, கால அளவு, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப பணத்தைப் பிரித்து முதலீடு செய்யுங்கள். ஒன்று வீழ்ந்தாலும் இன்னொன்று தாங்கிப் பிடித்து உங்கள் முதலீட்டைக் காப்பாற்றும்.

10. பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தரும் முதலீட்டைத் தேடுங்கள்!

பலரும் வங்கிதான் பாதுகாப்பு என மொத்தப் பணத்தையும் வங்கியிலேயே வைத்திருக்கிறார்கள். வங்கியில் பணத்தைச் சேமிப்பது பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாவிட்டால், உங்கள் சேமிப்பால் முழுப்பயன் இல்லாமல் போகும். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடுகளில் கவனம் செலுத்துவதே விரைவாக உங்களைப் பணக்காரர் ஆக்கும்.

11. உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்!

வருமானத்தை அதிகரிக்கும்போதுதான் சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். வருமானத்தை அதிகரிப்பதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன. புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது, கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்வது, பகுதி நேர வருமான வாய்ப்புகளை உருவாக்குவது என முயற்சி செய்வதன் மூலம், கூடுதல் முதலீட்டைச் செய்ய முடியும்.

12. சொந்த வீட்டுக்காக எல்லாப் பணத்தையும் செலவழிக்காதீர்கள்!

சொந்த வீடு என்பது முக்கியமான இலக்குதான். ஆனால், அதற்காக அவசரகால நிதி, ஓய்வுக்கால முதலீடு, குழந்தைகளின் எதிர்கால சேமிப்பு ஆகியவற்றை முற்றிலும் காலி செய்து வீடு வாங்குவது சரியான முறை அல்ல. வீடு இருக்கும், முக்கிய செலவுகளுக்குப் பணம் இருக்காது. எல்லாப் பணத்தையும் போட்டு வீடு வாங்கிய பலரும் மாடி வீட்டு ஏழைகளாகத்தான் வாழ்கிறார்கள்.

13. மற்றவர்களைப் பார்த்து முதலீடு செய்யாதீர்கள்!

நண்பர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதித்தார், உறவினர் ரியல் எஸ்டேட்டில் பணத்தை அள்ளினார் என்பதற்காக நீங்களும் அதே போன்ற முதலீட்டைத் தேர்வு செய்யாதீர்கள். நண்பர், உறவினரின் இலக்கு, தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன், அவர்கள் முதலீடு செய்த காலகட்டம், சூழல் வேறாக இருக்கலாம். அவர்களுக்கு அந்த முதலீடுகள் கைகொடுத்திருக்கலாம். உங்கள் நிதி இலக்கு, வயது, வருமானம், ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற முதலீட்டைத் தேர்ந்தெடுங்கள்.

14. சீக்கிரமாகப் பணக்காரராகிவிடலாம் என்ற ஆசை வேண்டாம்!

குறுகியகாலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறும் திட்டங்கள், போலியான முதலீட்டு நிறுவனங்கள், அதிக லாபம் தருவதாகக் கூறும் மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கி பணத்தை இழந்துவிடாமல் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்குப் புரியாத முதலீட்டில் ஒருபோதும் பணத்தைப் போடாதீர்கள்.

மாடல் படம்

15. உங்கள் நிதி இலக்குகளுக்கு காலக்கெடு முக்கியம்!

வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம் என ஒவ்வொரு இலக்குக்கும் எவ்வளவு பணம் தேவை, எத்தனை ஆண்டுகளில் தேவை என்பதைக் கணக்கிடுங்கள். அதற்கேற்ப முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்.

16. நாமினி விவரங்களைச் சரியாகப் பதிவு செய்யுங்கள்!

நிறைய பேர் செய்யும் தவறு நாமினி விவரங்களை சரியாக பதிவு செய்யாமல் அலட்சியமாக இருப்பதுதான். வங்கிக் கணக்கு, பி.எஃப், மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு என எல்லாவற்றிலும் நாமினி விவரங்களைச் சரியாகப் பதிவு செய்யுங்கள். திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற நேரங்களில் அவற்றைப் புதுப்பிக்கவும்.

17. ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யுங்கள்!

உங்கள் சொத்துகள் எவ்வளவு, கடன்கள் எவ்வளவு, முதலீடுகள் எந்த நிலையில் உள்ளன, காப்பீடு போதுமானதாக இருக்கிறதா என்பதையெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யுங்கள். தேவைக்கேற்ப முதலீடுகளை மறுசீரமைப்பு செய்யுங்கள்.

18. வருமான வரியை முறையாகத் திட்டமிடுங்கள்!

பலரும் வரியைச் சேமிக்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத முதலீடுகளைச் செய்கிறார்கள். உங்கள் வருமானத்துக்கு ஏற்ற வரி முறையைத் தேர்ந்தெடுத்து, அவசியமான வகையில் லாபகரமான வகையில் வரிச் சலுகைகளைப் பயன்படுத்துங்கள்.

19. குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பைக் கற்றுக்கொடுங்கள்!

பணத்தை சம்பாதிப்பதும், சேர்ப்பதும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் அதைக் காப்பாற்றுவதும். உங்கள் பிள்ளைகளுக்கு சரியான நிதி அறிவு இல்லை எனில், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கரைத்துவிடுவார்கள். சம்பாதிப்பது, சேமிப்பது, செலவழிப்பது, முதலீடு செய்வது ஆகியவற்றின் அடிப்படைகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான் உங்கள் செல்வத்தைப் பாதுகாப்பார்கள், மேலும் பெருக்குவார்கள்.

20. உங்கள் நிதி ஆவணங்களை ஒழுங்காகப் பராமரியுங்கள்!

நிறைய பேர் சொத்து சேர்ப்பதில் காட்டும் ஆர்வத்தையும், அக்கறையையும் சொத்து ஆவணங்களை நிர்வகிப்பதில் காட்டத் தவறுகிறார்கள். முதலீட்டு ஆவணங்களைப் பராமரிப்பதில் சரியான வழிமுறையைப் பின்பற்றுகிறவர்கள் குறைவு. வங்கிக் கணக்கு விவரங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், முதலீட்டு ஆவணங்கள், கடன் விவரங்கள், சொத்துப் பத்திரங்கள், நாமினி தகவல்கள் என அனைத்தையும் பாதுகாப்பாகப் பராமரிப்பது அவசியம். குடும்பத்தில் நம்பிக்கைக்குரியவர்களிடம் அந்த விவரங்களைத் தெரியப்படுத்துவது மிக அவசியம்.

இந்த நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பதுடன், சம்பள உயர்வு கிடைத்தால் அதற்கேற்ப வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தாமல் முதலீட்டை அதிகரியுங்கள்; முதலீடு செய்யும் முன் அதன் ரிஸ்க்கைப் புரிந்துகொள்ளுங்கள்; கடன் வாங்கி ஆடம்பரப் பொருள்களை வாங்குவதைத் தவிருங்கள். நிதி நிர்வாகத்தில் நாம் காட்டும் அக்கறைதான் நம்மை விரைவில் பணக்காரர் ஆக்கும்!

இந்த `10' விஷயங்களை ஃபாலோ செய்தால், வேலை போனாலும் பணத்துக்குப் பஞ்சமிருக்காது!

சுதீஷ் பிரபலமான டெக்னாலஜி நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருந்தார். பல நாடுகளில் இயங்கிவரும் அந்த நிறுவனம், ஏஐ ஆதிக்கம் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. சில மாதங... மேலும் பார்க்க

சம்பாதிப்பது மட்டுமே போதாது இளைஞர்களே!

ஹலோ வாசகர்களே..!இளைய தலைமுறையினர் மீது எப்போதுமே ஒரு புகார் உண்டு. ‘சம்பாதிப்பதைவிட செலவழிப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள், நிதித் திட்டமிடலே அவர்களிடம் இல்லை’ என்பதே அந்தப் புகார். ஆனால், ... மேலும் பார்க்க

பெற்றோர்களே... உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய 10 பண ரகசியங்கள் இவைதான்!

‘‘என் மகனை நல்லா படிக்க வச்சேன். படிச்சுட்டு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சு கைநிறைய சம்பளமும் வாங்குறான். ஆனா என்ன பிரயோசனம்? இன்னைக்கு 20 லட்சம் ரூபாய் கடனாளியா நிக்கிறான்!’’ என மனம் கலங்கிச் சொன்... மேலும் பார்க்க

எகிறும் விலைவாசி... 10,000 ரூபாயில் தீபாவளி பட்ஜெட்! கடனில் சிக்காமல் கொண்டாடலாமே..!

அரிசி முதல் பருப்பு வரை அத்தனை அத்தியாவசிய பொருள்களின் விலையும் எகிறிவிட்டது. புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுதான் தீபாவளியின் ஸ்பெஷலே. ஆனால், அவற்றின் விலையும் நடுத்தர, ஏழை மக்கள் அச்சப்படும் அளவுக்கு உ... மேலும் பார்க்க

Binance-க்கு விழுந்த அடி! கிரிப்டோ வரலாற்றின் மிகப்பெரிய கொள்ளையில் $6.3 பில்லியன் மாயம் - பின்னணி!

கிரிப்டோகரன்சி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு பிரம்மாண்டமான சைபர் தாக்குதலில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்சான Binance-இலிருந்து சுமார் $6.3 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 52,000 கோடி ர... மேலும் பார்க்க

ஃபின்ஃபுளூயன்சர்கள்: விழிப்புணர்வோடு பொறுப்புணர்வும் தேவை!

ஹலோ வாசகர்களே..!இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஃபின்ஃபுளூயன்சர்கள் (Finfluencers) முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால், அனுபவமின்மையும் பக்குவமின்மையும் சில ந... மேலும் பார்க்க