இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
ஆனால் காங்கிரஸ் – தி.மு.க-வுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் இருபது தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது.
அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ்.
அதை ஏற்க மறுத்த தி.மு.க, வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து 18 தொகுதிகளைக் கேட்டது. அதன்பிறகு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை தொடங்கியது. கடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

அதில் முதலில் இருப்பது முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி. ஆனால் அது தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றிபெற்ற தொகுதி என்பதுடன், கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி என்பதால் அதைக் கொடுக்க மறுத்தது தி.மு.க.
அதேபோல ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது காங்கிரஸ். இதுகுறித்து இறுதி செய்வதற்காக புதுச்சேரி தி.மு.க மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, எதிர்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா உள்ளிட்டவர்கள் கடந்த 21-ம் தேதி தனியார் விடுதியில் காத்திருந்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அதனால் அன்றைய தினம் இரவே தி.மு.க தேர்தல் குழுவினர் சென்னை அறிவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ப.சிதம்பரம், கனிமொழி உள்ளிட்டவர்கள், புதுச்சேரி தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்தனர். அதன்பிறகு காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், தி.மு.க-வுக்கு 12 தொகுதிகள், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்று என உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அதன் தொடர்ச்சியாக அஜந்தா சிக்னல் அருகேயிருக்கும் தனியார் விடுதியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்களை, நேற்று இரவு 11.30 மணிக்கு தி.மு.க-வின் தேர்தல் குழுவினர் சந்தித்து ஆலோசனை செய்தனர். இரவு ஒரு மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வெளியேறினார்கள்.

இதற்கிடையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஒருவரான சங்கர், `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது' என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதையடுத்து தொகுதி உடன்பாடு குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல், இறுதி நாளான இன்று காங்கிரஸும் தி.மு.க-வும் தனித்தனியாக வேட்பு மனுவை தாக்கல் செய்தன.
இந்த நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், தி.மு.க மேலிடப் பார்வையாளர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்கள் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெகத்ரட்சகன், ``புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணி 30 ஆண்டுகளாக தொடர்கிறது. காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 14 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்போம்” என்றார்.

















