60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் ...
உமர் காலித்: ``விசாரணைக்கு முந்தைய சிறை என்பது தண்டனையல்ல" - மீண்டும் ஜாமீன் மறுத்த நீதிமன்றம்
கடந்த ஐந்து வருடங்களாக சிறையில் உள்ள பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாமுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம், வன்முறையாக வெடித்தது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில் 700-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து ஜே.என்.யு முன்னாள் மாணவர்களான உமர் காலித், சர்ஜில் இமாம் உள்ளிட்ட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உமர் காலித் உள்ளிட்டோர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளனர். இதற்கிடையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உமர் காலித் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி நீதிமன்றமும், அக்டோபர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தன.
அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் ஆண்டுக் கணக்கில் விசாரிக்கப்படாமலேயே இருந்து வந்தன. கடந்த மாதம் (டிசம்பர் 2025), இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்வி அஞ்சாரிய ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது
வழக்கு விசாரணை நடைபெற்றபோது, "டெல்லி கலவரம் என்பது தற்செயலானது அன்று. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது" என டெல்லி காவல்துறை தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அதே நேரத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறையில் இருப்பதைக் கவனத்தில் கொண்டு தங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என உமர் காலித் உள்ளிட்டோர் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ``இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அரசியல் சாசன சட்டப்பிரிவு 21 என்பது மையப் புள்ளியாக இருக்கின்றது.
விசாரணைக்கு முந்தைய சிறை என்பது ஒருவருக்கு வழங்கக்கூடிய தண்டனையாகக் கருத முடியாது. மேலும் அதைச் சுதந்திரத்தைப் பறிக்கும் தன்னிச்சையான முடிவாகவும் கருத முடியாது.
காரணம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது மிகவும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அதன்படி இந்தச் சட்டத்தின் பிரிவு 43D உட்பிரிவு 5-ன் படி ஜாமீன் வழங்குவதற்கான மற்ற பொதுவான விதிகளிலிருந்து இதற்கு விதிவிலக்கு வழங்கப்படுகின்றது.
மேலும், ஒரு குற்றத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டவரின் பங்கு எந்த அளவிற்குத் தொடர்பு இருக்கிறது, விசாரணையின் முதல் கட்டத்தில் முதன்மையான குற்றங்களை அவர் செய்திருப்பதற்கான நியாயமான காரணங்களை வெளிப்படுத்துகிறதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
மேலும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மரணம் மற்றும் அழிவைத் தரும் நடவடிக்கைகளை மட்டுமல்லாமல், பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கும் அது பொருந்தும்.
இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் ஒரே மாதிரி வைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இதில் உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோருடைய செயல்பாடுகள் மற்ற நபர்களின் செயல்பாடுகளில் இருந்து சற்று வேறுபட்டதாக இருக்கிறது.
மேலும் இந்த இருவருக்கு எதிரான முதன்மையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு வழங்கியிருக்கக்கூடிய ஆவணங்கள் திருப்தியளிக்க கூடியதாக இருக்கின்றன. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது என்பது நியாயமானதாக இருக்காது என நாங்கள் கருதுகிறோம். எனவே இருவருக்கும் நாங்கள் ஜாமினை மறுக்கிறோம்.

அவர்களது மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். இந்த வழக்கில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணை முடிந்த உடனோ அல்லது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருடம் நிறைவடைந்த உடனையோ இருவரும் ஜாமீன் கேட்டு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
இவர்களைத் தவிர குல்பிஸ்ஸா பாத்திமா, மீரான் ஹைதர், சைஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், சாதாப் அஹமத் ஒரு லிட்டர் மற்றவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

















