எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். இதற்காக கோபிசெட்டிபாளையம் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கொண்டயம்பாளையம் இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43) என்பவரும் கலந்துகொண்டார். அர்ஜுனன், எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பு கூட்ட திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

அர்ஜுனன் மயங்கி விழுந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அர்ஜுனன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அர்ஜுனன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளது ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.














