ஜந்தர் மந்தர்: பெண் செய்தியாளர்களுக்கு பாலியல் தொல்லை? டெல்லி காவல்துறைக்கு வலுக...
'எடுக்க எடுக்கக் குறையாத அன்னம்... எல்லா உயிர்க்கும் அன்பு' - வள்ளலார் அவதார தின சிறப்புப் பதிவு!
வடலூர் ராமலிங்க அடிகள் தமிழகத்தில் அவதரித்த மகான். வாழும்போதே ஜோதிவடிவமாக இறைவனை தரிசித்து அந்த வழியை மற்றவரும் அடைய வழிகாட்டியவர். அதேவேளையில் உயிர்களுக்குச் செய்யும் தொண்டே அந்த ஈசனுக்குச் செய்யும் தொண்டு என்பதை விளக்கி பயிர் வாடினால், தன் உயிர் வாடுவதாக உணர்ந்த உத்தமர். இன்றுவரை வடலூரில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும், அவர் ஏற்றிய அடுப்பு நெருப்பால், வறியவர்களின் பசி எனும் பெரும் நெருப்பை அணைத்தவர். `எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்’ என்கிற திருவள்ளுவரின் வாக்கைத் தன் `வாழ்க்கை ‘என்று ஆக்கிக் காட்டிய ஆன்மநேயர் வள்ளலார்.
ஒரு முறை அவரைக் காண்பதற்கு கோவிந்தசாமி என்பவர் கடலூரிலிருந்து வந்தார். மாடு பூட்டிய வண்டியில், ஏறத்தாழ 50 கி.மீ. தூரம் பயணம் செய்து வந்தவர், நேராக அடிகளின் அடிகளில் விழுந்து எழுந்தார். எடுத்து வந்த பழங்கள் எல்லாவற்றையும் வைத்து வணக்கம் சொன்னார்.

வள்ளலார் அவரிடம் ``நலமா? எப்படி இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார்.
“சாமி! அதை ஏன் கேக்கறீங்க... வண்டி கட்டிக்கிட்டு வந்தேன். நல்ல மழை. வழியெல்லாம் சேறு-சகதி, காலை மடக்கி உட்கார்ந்தே வந்ததால் முதுகு வலி...” என்று, தான் சிரமப்பட்டு வந்ததைத் தெரிவித்தார் கோவிந்தசாமி. உடனே வள்ளலார், சட்டென்று எழுந்து வெளியே சென்று “எங்கே உங்கள் வண்டி மாடுகள்?” என்று விசாரித்தார்.
“ஏன் சாமி மாட்டைப் பற்றி விசாரிக்கறீங்க?” என்று கேட்டுக் கொண்டே கூட வந்தார் கோவிந்தசாமி முதலியார்.
“உங்களுக்கே இவ்ளோ சிரமமாக இருக்கிறதே... உங்களையும் உட்காரவைத்து, இந்த மழையில் வண்டியையும் இழுத்து வந்த அந்த மாடுகளுக்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தீர்களா?” என்று கேட்டபடியே மாடுகள் அருகில் சென்று, அவற்றின் வலி போகக் கழுத்தையும், திமிலையும் தன் திருக்கரங்களால் இதமாகப் பிடித்துவிட்டார்.
அவரைப் பொறுத்தமட்டில் மண்ணில் இருக்கும் எல்லா உயிர்களும் இறைவனின் சொரூபம்தான். இதை உணர்ந் கோவிந்தசாமி, 'இப்படியும் ஒரு மகானா' மனம் நெகிழ்ந்தார்.
பசி குறித்து `நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை என்கிற மூன்று வேதனைகளும்கூடி முடிந்த வேதனையே பசி வேதனை’ என்பார் வள்ளலார்.
தருமசாலையில் தினமும் மூன்று வேளைகள் அன்னதானம் செய்யப்பட்டது. அதில் எந்தக் குறையும் நேர்ந்துவிடக்கூடாது என்று வள்ளலார் கவனமாக இருந்தார்.
ஒருநாள் இரவு தருமசாலையில் உணவு கொஞ்சமாக இருந்தது. ஆனால், வந்தவர்களோ பலர். அன்று சமையல் பொறுப்பில் இருந்தவர் மிகுந்த தயக்கத்தோடு வள்ளலாரை அணுகி, விஷயத்தைச் சொன்னார்.
பெருமானார் உடனே எழுந்து வந்து, ‘‘எல்லோருக்கும் இலை போடும்!’’ என்று உத்தரவிட்டு, தம் திருக்கரத்தால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். என்ன ஆச்சர்யம்... அன்னப் பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாமல் உணவு வந்து கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்ட பிறகுகூட உணவு எஞ்சியிருந்தது.
மற்றொரு நாள் இரவு அன்னதானம் முடிந்தபிறகு, தருமசாலையில் இருந்த அன்பர்கள், வள்ளலாரிடம் வந்தனர்.
மறுநாள் சமைப்பதற்குக் கைப்பிடி அரிசிகூட இல்லை, என்ன செய்வது என்று கண்ணீரோடு நின்றனர் சபையின் ஊழியர்கள். வள்ளலார் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு அவர்களை அழைத்து, ‘‘வேண்டிய அரிசியும் மற்றவையும் நாளைக்கு வரும். போய் நிம்மதியாகத் தூங்குங்கள்’’ என்று கட்டளையிட்டார்.
மறுநாள் காலையில் மூன்று வண்டிகளில் அரிசி, பருப்பு என சமையலுக்கு வேண்டிய அனைத்தும் வந்து சேர்ந்தன. அவற்றை எடுத்து வந்தவர், திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓர் அன்பர். ‘‘நேற்றிரவு கனவில் வந்து வள்ளலார் உத்தரவு போட்டார். அப்போதே மூட்டை கட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து விட்டேன்...’’ என்றார் அவர்.

வள்ளல் பெருமானின் ஸித்திகளை அறிந்திருந்த தர்மசாலை உறுப்பினர்கள், அவரைக் கைகூப்பித் தொழுது தம் சேவையைத் தொடர்ந்தனர்.
'பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று!’ என்று தன் வாழ்நாள் முழுவதும் உபதேசம் செய்த வள்ளல் பெருமானின் அவதார தினம் இன்று (அக்டோபர் 5.) இந்த நாளில் நம்மால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்து ஜோதிவடிவான அந்த வள்ளல்பெருமானின் நினைவைப் போற்றுவோம்.



















