ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப...
ரணபலி: ``நான் விஜய் தேவரகொண்டாவுக்கு நேரெதிரானவள்" - நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து ரணபலி திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் தோழன்’ ஆகிய வெற்றிகரமான படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரலாற்று பின்னணியை கதைகளமாக கொண்டிருக்கிறது. 16-ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அதில், `` விஜய் தேவரகொண்டாவுக்கு பெரும் வெற்றி, கொண்டாட்டம் என்பதிலெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் நான் அவருக்கு நேர் எதிரானவள். வாழ்க்கையின் சிறிய தருணங்களைக் கூட கொண்டாட வேண்டும் என்று நினைப்பவள். நமக்கு வயதாகிக்கொண்டே இருக்கிறது, இந்த உலகில் இன்னும் எவ்வளவு காலம் இருக்கப் போகிறோம் என்று யாருக்கும் தெரியாது. அதனால் ஒவ்வொரு பிறந்தநாளும், தருணமும் முக்கியம்" என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய் தேவரகொண்டா, `` ரஷ்மிகாதான் என் வாழ்க்கையில் கொண்டாட்டங்களைக் கொண்டுவந்தார். அதற்கு முன் நான் வாழ்க்கையை ஒரு போராட்டம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான போராகவே பார்த்தேன். தினமும் காலையில் எழும்போது ஏதோ போருக்குச் செல்வது போல் உணர்வேன். சாதிக்க வேண்டியது நிறைய இருப்பதால் எதையுமே என்னால் கொண்டாட முடிவதில்லை. ஆனால், இவ்வளவு கடினமாக உழைத்துவிட்டு வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்றால் என்ன பயன் என்ற கேள்வி எழுந்தது." என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ரஷ்மிகா மந்தனா, ``சவால்களும் போராட்டங்களும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஆனால் அதே நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்கவும் நினைவுகளைச் சேகரிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். நாம் எப்போதும் இளமையாகவும், இதே ஆரோக்கியத்துடனும் இருக்கப் போவதில்லை. படப்பிடிப்புத் தளத்தில் தீவிரமாக உழைப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அந்த உழைப்புக்கான தருணங்களைக் கொண்டாடுவதும் ஆகும்" என்றார்.


















