``ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!” - அடித்து...
`எதற்கும் அம்மா பேச்சையே கேட்கும் மனைவி; இந்த திருமண உறவில் நான் என்ன செய்ய?' - `பேசும் மனசு' 02
கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும். சில நேரங்களில் அந்த பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறோம். அப்படிப்பட்ட வாசகர்கள் அனுப்பும் வாழ்க்கைச் சிக்கல்களை இந்த தொடரில் பதிவு செய்து, அவற்றுக்கு நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை உங்களிடம் கொண்டு வருகிறோம்.
திருமணம் என்பது கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுத்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் உறவு. ஆனால் சில நேரங்களில் குடும்பத்தினரின் தலையீடு அந்த உறவில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக மனைவி எதற்கும் தனது அம்மா பேச்சையே கேட்டு முடிவெடுத்தால், தம்பதிகளுக்குள் தூரம் உருவாகும் நிலையும் வரும். இப்படியான ஒரு உறவுச் சிக்கலை பகிர்ந்து ஆலோசனை கேட்டிருக்கிறார் விகடன் வாசகர் ஒருவர்.
இனி அவர் சொல்வதை கேட்போம்...
“எங்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை நன்றாகத்தான் சென்றது. ஆனால் கடந்த சில வருடங்களாக எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. என் மனைவி வேலைக்குச் செல்பவர். எங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள என் மாமியார் எங்களுடன் இருக்கிறார். என் மனைவி அவர்களின் அம்மா சொல்வதை சிறிய விஷயங்களில்கூட கவனமாகக் கேட்கிறார். ஆரம்பத்தில் அது சில விஷயங்களில் நல்லதாக இருந்ததால் நானும் அதை ஏற்றுக்கொண்டு நடந்தேன்.

ஆனால், இப்போது பால் வாங்குவது போன்ற சிறிய விஷயங்களில் தொடங்கி, முக்கியமான முடிவுகள் எடுப்பது வரை எல்லாவற்றிலும் என் மாமியாரின் தாக்கம் இருக்கிறது.
உதாரணமாக, நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்று சொன்னால், இரவு ‘சரி’ என்று ஒப்புக்கொள்வார். ஆனால் மறுநாள் காலை அவரின் அம்மா பேச்சைக் கேட்ட பிறகு ‘நிலத்தில் முதலீடு செய்வது நல்லது’ என்று கருத்தை மாற்றிவிடுவார்.
அதேபோல், எங்கள் குழந்தையின் பிறந்தநாளை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் அவரின் அம்மா உறவினர்களை அழைத்து விமர்சையாக நடத்த வேண்டும் என்று கூறியதால், அதை அப்படியே செய்ய வேண்டிய நிலை வந்தது.
இப்படி பல விஷயங்களில் நான் சொல்வதை விட அவர்களின் அம்மா சொல்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ என்ற உணர்வு எனக்கு வருகிறது. இதனால் என் கருத்துக்கு மதிப்பு இல்லாமல் போகிறது போல தோன்றுகிறது.
மேலும், நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு எடுக்கும் நல்ல பழக்கமும் இல்லாமல் போகிறது. இந்த சூழ்நிலை காரணமாக எங்கள் உறவில் மெதுவாக தூரம் உருவாகும் போல இருக்கிறது. இந்த நிலையில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இந்த உறவுச் சிக்கலை எப்படி சமாளிப்பது?"
இந்த சிக்கல் சார்ந்து உளவியல் ஆலோசகர் ப்ரீனுவிடம் பேசினோம்.

பொதுவான பிரச்னையே
"இது பல குடும்பங்களில் நடக்கும் பொதுவான பிரச்னையே. ஒரு உறவில் மூன்றாம் நபர் யார் வந்தாலும் அது சிக்கல் தான். ஆதிக்கம் செலுத்துவது மனைவியின் குடும்பமா, கணவனின் குடும்பமோ என்பதெல்லாம் இரண்டாம் விஷயம் தான். உங்கள் குடும்பம் உங்கள் முடிவில் ஆதிக்கம் செலுத்துவது உங்களுக்குள் சண்டை வர வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையில் இருக்க வாய்ப்பு குறைவே. பல நேரங்களில் அது பழக்கத்தினால் இருக்கலாம்.
'என் மகள், மகன் நல்லா இருக்க வேண்டும்' என்ற உணர்ச்சிப் பிணைப்பாலும் ஏற்படலாம். ஆனால் உங்களுடன் இருக்கும் இணையரை இது எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.
உளவியலில் இதை ‘Enmeshment’ என்று கூறுவார்கள். அதாவது, ஒருவரின் வாழ்க்கை முடிவுகளில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மிகவும் அதிகமாக கலந்துகொள்வது. திருமணத்திற்குப் பிறகு ஒரு தம்பதியர் தங்கள் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை முதன்மையாக இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் முடிவுகளை பெற்றோரின் கருத்துகள் அந்த முடிவுகளை முழுவதுமாக பாதிக்க ஆரம்பித்தால், கணவன்–மனைவி உறவில் சமநிலை குலைவது இயல்பு.

இந்த வாசகர் பிரச்னையைப் பொறுத்தவரை, கணவனுக்கு, தன் மனைவி தன் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லையோ என்று தோன்றலாம். மனைவிக்கோ அம்மா சொல்வதைக் கேட்டு நடந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று தோன்றலாம். பெரியவர்களின் அனுபவம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கலாம். இருவர் தரப்பையும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், பேலன்ஸ் இல்லாமல் ஒருவர் தரப்பில் பிரச்னை நாளுக்கு நாள் வளர்வதே சிக்கல்.
இது இப்படியே நீண்டால், வாழ்க்கையில் இருவரின் முடிவுகளுக்கு பதிலாக பழைய தலைமுறையின் எண்ணங்களே அதிகம் செயல்படும் நிலை உருவாகலாம். அதாவது அப்டேட் இல்லாமல் பழைய மனப்பான்மை பிரதிபலிக்கலாம். மேலும் இது தொடரும் போது பாதிக்கப்படும் இணையருக்கு முதலில் கோபம் வரும், பிறகு முடிவுகளில் வேற்றுமை வரும். சண்டை, சச்சரவுகள் அதிகமாகும் போது, இணையரில் ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்கள். பிறகு உறவில் விரிசல் வரும்.

இதற்கு தீர்வு என்று பார்த்தால், அந்தக் கணவர் தன் மாமியார் பற்றி தன் மனைவியிடம் விமர்சிக்காமல், நாம் இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தலாம். நாம் இருவரும் சேர்ந்து முடிவு எடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தை மனைவியிடம் தெரிவிக்கலாம். வாரம் ஒரு முறை 20 நிமிடங்கள் குடும்பங்கள் பற்றிப் பேசவேண்டும். அதில் இந்த வாரம் நடந்த பிரச்னைகள், சிக்கல்கள், தவிர்த்திருக்க வேண்டியவை, இருவர் தரப்பிலும் செய்திருக்க வேண்டியவை இவற்றையெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசலாம். சில வீடுகளில் இப்படி பேசும் போதும் சண்டைகள் வர வாய்ப்புண்டு என்வே இருவரும் பொறுமை, நிதானம் காப்பது அவசியம்.
திருமண வாழ்க்கையில் ‘Healthy Boundaries’ மிகவும் முக்கியம். அதாவது, குடும்பத்தாரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தாலும், தம்பதியரின் தனிப்பட்ட முடிவுகளே இறுதி தீர்மானமாக இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன், “நாம் இருவரும் முதலில் பேசிக் கொண்டு முடிவு எடுப்போம்” என்ற ஒரு எளிய ஒப்பந்தத்தை தம்பதியர் உருவாக்கிக்கொள்ளலாம்.
அதற்குப் பிறகு தேவையெனில் குடும்பத்தாரின் கருத்தையும் கேட்கலாம். இது உறவில் சமநிலையை காக்க உதவும். திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் சேர்வது மட்டுமல்ல, இரண்டு மனிதர்கள் சேர்ந்து உருவாக்கும் புதிய ஆரம்பம் ஆகும். அந்த உறவில் இருவருக்கும் சமமான உரிமை, இருக்கும்போது தான் உறவு ஆரோக்கியமாக நீடிக்கும்."
தொடர்ந்து பேசுவோம்!
வாசகர்களே இந்த பிரசனைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே...

வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். digital@vikatan.com என்ற மின்னஞ்சளுக்கு ' பேசும் மனது' என Subject - ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!















