நீட் நுழைவுத்தேர்வு: 'அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படுமா?'- அமைச்சர் தர்ம...
ஒத்த சொல்ல சொல்லு: "ஒரு கவிதைக்குள் கதை வாழ்வது ரொம்பவே முக்கியம்.!" - ஏகாதசி | வரித்துணையே 20
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

இன்றைய பகுதிக்கு, 'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்தில் வரும், 'நீ ஒத்த சொல்ல சொல்லு' பாடல் பற்றி பாடலாசிரியர் ஏகாதசியிடம் பேசினோம். காதலை முதன்மையை வைத்து, இப்பாடலை கோத்திருப்பார் பாடலாசிரியர் ஏகாதசி. ஆனால், அதைமட்டுமே முழுவதுமாக நிரப்பிடாமல், அதனுடன் தாய் பாசம் உள்ளிட்ட உணர்வுகளையும் சேர்த்திருப்பார். இந்தப் பாடல் பற்றி அவர் நம்மிடையே பல்வேறு சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
"என்னை ஒரு கவிஞனாக அடையாளப்படுத்தி, இவனுக்கும் பாடலும் எழுத வரும் என்பதை ஊரறிய செய்த படம் இந்த 'அவள் பெயர் தமிழரசி' திரைப்படம். இதில் ஐந்து பாடல்களை நான் எழுதியிருப்பேன். முதலில், ஒரேயொரு பாடல் எழுதுவதற்காகதான் நான் சென்றேன். ஆனால், முதலில் எனக்குக் கொடுக்கப்பட்ட பாடலுக்கு நான் எழுதிய வரிகள் படக்குழுவினருக்கு பிடித்துப் போக, அனைத்து பாடல்களையும் என்னையே எழுத வைத்தார்கள். அதில் இந்த 'ஒத்த சொல்ல சொல்லு' பாடல் இப்போதுவரை ஒரு எவர்கிரீன் பாடலாக. பலரின் விருப்பப்பட்டியலில் இருக்கிறது.

நான் இந்த 'ஒத்த சொல்லு' என்கிற வரியை வைத்தே மூன்று பாடல்கள் எழுதியிருக்கேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'ஆடுகளம்' படத்தில் 'ஒத்த சொல்லால' என்கிற பாடலை எழுதினேன். இன்னொரு படத்தின் பாடலிலும் இதே வரியைக் கொண்டுதான் பாடலைத் தொடங்கியிருப்பேன். இங்கு 'ஒத்த' என்கிற வார்த்தை முக்கியமானதாக எனக்கு இருக்கிறது. ஒரு சொல்லுக்காக ஏங்குவது, காத்திருப்பது, அலைவதுதான் காதல்! அதுபோல, எனக்கும் இந்த வார்த்தை முக்கியமானதாக அமைந்தது. அதன் தாக்கம்தான், அடுத்தடுத்து வரிகளுக்குள் இதனைக் கொண்டு வருவதற்கும் உதவியது.
ஒரு பாடலை ஒரு மணி நேரத்தில்கூட எழுதிவிடலாம். ஆனால், அதனை வெறும் கடமையாக கருதி எழுதும் வழக்கத்தை நான் வெறுப்பேன். எப்போதுமே ஒரு பாடலுக்கு வெவ்வேறு வெர்ஷன்களை நான் எழுதுவேன். அதில் சிறந்ததைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். ஓவ்வொரு பாடலுக்கு, பத்து சரணம், பத்து பல்லவி எழுதி, அதிலிருந்து பாடலுக்கு தேவையானதை தேர்வு செய்வேன். சில நேரங்களில் நான் எழுதின முதல் பல்லவியே சிறந்ததாகதான் இருந்திருக்கும். ஆனால், அதனை சிறந்தது என முன்னிலைப்படுத்த மேலும் சிலவற்றை எழுதுவேன்.

அப்படி இந்தப் பாடலுக்கு நிறைய வெர்ஷன்களை ஒரு நாள் முழுக்க அமர்ந்து எழுதினேன்." என்றவர், "இந்த பாடலை திருநெல்வேலி வட்டார வழக்கு மொழியில் எழுதியிருப்பேன். நான் மதுரை அருகிலிருக்கிற ஒரு கிரமத்திலிருந்து வந்தவன். அதுமட்டுமல்லாமல், நிறைய நாட்டுப்புறவியல் நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். இந்தப் படமும் அந்த பேக்டிராப்-ல் இயக்குநர் அமைத்திருப்பார். மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் பேச்சளவில் மொழியாக பெரிய வித்தியாசம் இருக்காது. இயக்குநர் கொடுத்த ஸ்கிரிப்டும் எனக்கு பெரியளவில் உதவ, இந்தப் பாடலை முழுமையாக எழுதிவிட்டேன்.
இதனை வெறும் காதல் பாடலாகவே எழுதினால், ஒரு தட்டையான ஆல்பம் சாங் போல இருந்திருக்கும். அதனால், கதைக்கேற்ப அம்மா செண்டிமெண்ட் விஷயங்களையும் இந்தப் பாடலில் இணைத்துக் கொண்டேன். இந்த இந்தப் படத்தின் பாடல் என நம்ப வைப்பதும் அந்த படத்தினுடைய கதைதான். ஒரு கவிதைக்குள் கதை வாழ்வது ரொம்பவே முக்கியம். தாய் பாசம் தொடர்பான வரிகள் அந்தப் படத்தின் சூழலுக்கும் மிகப் பொருத்தமாக இருந்தது. ஒருவனுக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அதற்கு அடுத்தப்படியாக அவனுடைய இதயத்திற்குள் இருப்பவள் அவனுடைய காதலி. அந்த பொருளில்தான் இந்த வரியைக் கோத்திருப்பேன்.

இப்போது வரை, நான் எங்கு சென்றாலும் என்னிடம் பேசுவோர், "நீ ஒத்த சொல்லு சொல்லு' வந்து ரொம்ப அழகா எழுதியிருப்பீங்க" என்பார்கள். நம்முடைய ஆடியன்ஸை என்றைக்கும் குறைத்து மதிப்பிடக் கூடாது. நாம் எழுதுவதை கேட்பார்கள். பிறகு வாழ்க்கையின் தீவிர ஓட்டத்தில் இதனை எங்கு நினைவில் வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், சில நேரங்களில் நம்முடைய அபிப்பிராயங்கள் தவறாகும் என்பதை இந்தப் பாடல் எனக்கு உணர்த்தியது." என்றார் லேசான சிரிப்புடன்.




















