`எடப்பாடிதான் எங்கள் தலைவர்; மாற்றுக் கருத்து இல்லை’ - வேலுமணி அணியில் இருந்து த...
`உலகப் பொருளாதாரம் சரிவின் விளிம்பில்... 1970களை மிஞ்சும் பேரழிவு?' - சிங்கப்பூர் பிரதமர் எச்சரிக்கை
உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பெருவழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியை விட மிக மோசமான 'ஸ்டாக்ஃபிளேஷன்' (Stagflation) எனப்படும் பேரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் விடுத்துள்ள எச்சரிக்கை, சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்த அச்சங்கள் வலுத்துவரும் சூழலில், சிங்கப்பூர் பிரதமரின் இந்தக் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"ஹார்முஸ் ஜலசந்தியின் முடக்கம் என்பது வெறும் தொடக்கம் மட்டுமே. இதன் சங்கிலித் தொடர் விளைவுகள் இனிமேல்தான் வெளிப்படப் போகின்றன," என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, எரிசக்தி இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருக்கும் ஆசிய நாடுகளுக்கு இது ஒரு சமிக்ஞை. ஏற்கனவே பல நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதும், தொழிற்சாலைகளில் உற்பத்தி தாமதமடைவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. ஆனால், இவை பனிமலையின் நுனி மட்டுமே என்கிறார் வோங்.
``அடுத்தடுத்து வரவிருக்கும் பேராபத்துகளாக உணவு மற்றும் உரத் தட்டுப்பாடுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிசக்தி விநியோகம் தடைபடும்போது, அது விவசாய உற்பத்தியில் தொடங்கி உணவு விநியோகச் சங்கிலி வரை அனைத்தையும் முடக்கிப் போடும். இது உலகளாவிய உணவுப் பற்றாக்குறைக்கும், அதன் விளைவாக சமூக அமைதியின்மைக்கும் வழிவகுக்கும் என்ற கவலைகள் வலுக்கின்றன.
ஒருவேளை, அரசியல் தீர்வுகள் எட்டப்பட்டு ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால்கூட, நிலைமை உடனடியாகச் சீரடையாது என்பதே நிதர்சனம். கடற்பரப்பில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளைச் சரிசெய்வதற்கும் பல மாதங்கள் ஆகலாம்" என்கிறார் பிரதமர் வோங்.

மேலும், ``1970-களில் ஏற்பட்ட எண்ணெய் அதிர்ச்சி, உலகப் பொருளாதாரத்தை பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியது. ஆனால், தற்போதைய நெருக்கடி அதைவிடப் பன்மடங்கு மோசமானது" என்பதே லாரன்ஸ் வோங்கின் எச்சரிக்கையின் சாராம்சம். அன்று எரிசக்தி மட்டுமே மையப் பிரச்சினையாக இருந்தது; இன்றோ எரிசக்தியுடன், உணவு, உற்பத்தி, விநியோகம் எனப் பலமுனைத் தாக்குதலை உலகம் எதிர்கொள்கிறது.
இந்த இக்கட்டான சூழலில், சிங்கப்பூர் மக்கள் உயர்ந்த பணவீக்கத்தையும், மந்தமான பொருளாதார வளர்ச்சியையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார். நாட்டின் திறனில் 'அமைதியான தன்னம்பிக்கை' கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டாலும், அவரின் பேச்சு வரவிருக்கும் இருண்ட காலத்திற்கான ஒரு அபாயச் சங்கு போலவே ஒலிக்கிறது என பலரும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
















