'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூ...
திருச்சி: சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகன்; ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை
திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது: 52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014-ல் உடல்நலக் குறைவால் பணியை ராஜினாமா செய்தார்.
தற்போது, தனது மனைவி இளஞ்சியத்துடன் (வயது: 48) சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு பார்த்திபன் (வயது: 32) என்ற மகனும், பிரியா (வயது: 28) என்ற மகளும் இருந்தனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் பார்த்திபன் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார்.
இவருக்குத் தீவிரமான மதுப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மது அருந்தும் போதெல்லாம் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது பெற்றோர் மற்றும் தங்கையை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும், தனது வருமானம் குடிப்பதற்கே போதாததால், ஆன்லைனிலும், வெளிநபர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தனது தந்தை நடராஜனிடம் சொத்துகளை விற்றுப் பணம் தருமாறு போதையில் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், ஈரோட்டில் வேலை பார்த்து வந்த பார்த்திபன், மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது தாய் இளஞ்சியத்திடம் நிலத்தை விற்றுப் பணம் தருமாறு மிரட்டி, அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட நடராஜன், மகனைத் தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
ஆனால், மீண்டும் இன்று மாலை கடும் மதுபோதையில் வந்த பார்த்திபன், தந்தை நடராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நடராஜன், அருகில் இருந்த இரும்புக் குழாயை எடுத்துப் பார்த்திபனை அடிக்கத் துரத்தியுள்ளார். பயந்துபோய் தோட்டத்திற்குள் ஓடிய பார்த்திபனைத் துரத்திச் சென்ற நடராஜன், அவரது தலையில் பலமாகத் தாக்கினார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த நடராஜன், உடனடியாக சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சமயபுரம் போலீஸார், தந்தை நடராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதைக்கு அடிமையான மகன் தொல்லை தாங்க முடியாமல் தந்தையே மகனை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















