பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதி...
கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!
கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் வாளையார், கசபா, கொல்லங்கோடு, பட்டாம்பி, ஸ்ரீகிருஷ்ணாபுரம், கோங்காடு
ஒற்றப்பாலம், சோலையூர், அகளி
சிற்றூர், கல்லடிக்கோடு, ஹேமாம்பிகா நகர், கோட்டாயி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்தான் 23 குழந்தைகள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் என்றும், அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதில் கொல்லங்கோடு சிறுமி மரண வழக்கை 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரைம் பிராஞ்ச் விசாரித்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் 'துப்பறிய முடியாத வழக்கு' என அறிக்கை தாக்கல் செய்து முடிக்கப்பட்டுள்ளது. 2010 ஜனவரி 18 அன்று மதியம் 2:30 மணியளவில், 11 வயது சிறுமி பல்லசனா பகுதியில் உள்ள தனது தாயாரின் வீட்டில் புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள். உள்ளூர் போலீஸ், சி.பி.சி.ஐ.டி மற்றும் கிரைம் பிராஞ்ச் எனப் பல கட்ட விசாரணை நடந்தது. சிறுமி இறப்பதற்கு சற்று முன்பு கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்களும், விந்தணுக்களின் தடயங்களும் கண்டறியப்பட்டன. இந்த கொடூர சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, மனமுடைந்த சிறுமியின் தாய் தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு தந்தையும் இறந்துபோனார். இந்த வழக்கில் மொத்தம் 370 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, சந்தேகிக்கப்பட்ட நபர்களுக்கு அறிவியல் பூர்வ சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், சிறுமியின் மரணத்திற்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கிரைம் பிராஞ்ச் போலீஸாரால் இயலவில்லை. இதுகுறித்து வாளையார் நீதி போராட்டக் குழு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி சௌமென் சென் மற்றும் நீதிபதி வி.எம். ஷியாம்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில், கடந்த 2010-ம் ஆண்டு கொல்லங்கோட்டில் 11 வயது சிறுமி தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மற்ற 22 குழந்தைகளின் மர்ம மரண வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த தனது தயார்நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக கிரைம் பிராஞ்ச் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்தே, 11 வயது சிறுமியின் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்குகளின் முழு விவரங்களையும் பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து சி.பி.ஐ பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர அறிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தாலுகா சட்டப்பணிகள் குழுவும் இணைந்து, கேரள மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாது குழந்தைகள் மர்ம மரணங்களை தடுக்கும் வகையில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. பள்ளிகள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் பிற பின்தங்கிய பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த முகாம்களை நடத்த வேண்டும். குழந்தைகள் நலக்குழு, காவல்துறை, கல்வித்துறை, சமூக நீதித்துறை மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும். இதற்காக பாரா லீகல் வாலண்டியர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், குடும்பஸ்ரீ (மகளிர் சுய உதவிகுழு) மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து உள்ளூர் மட்டத்தில் 'குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களை' உருவாக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் வழிகாட்டியுள்ளது.















