செய்திகள் :

காக்கா முட்டை : வர்க்க அரசியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 30

post image

சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்றழைக்கப்படும் அண்ணன் தம்பிகளான இரண்டு சிறுவர்கள் சென்னையின் குடிசைப் பகுதியொன்றில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அந்தச் சிறுவன் அருகில் இருக்கும் ஓர் அப்பார்ட்மெண்ட்வாசி. அவன் அவர்களது அப்பார்ட்மெண்ட் முற்றத்தில் இருக்கும் ஒரு சிறிய பார்க்கில் மாலை நேரத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம். அவன் ஒரு தடவை தனது ரிமோட் ஹெலிகாப்டரை அங்கே வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் போது, இந்த இரண்டு பேரும் காம்பவுண்டுக்கு வெளியில் இருந்து அதை வேடிக்கை பார்க்கிறார்கள். அதன் மூலமாக அவர்களுக்கிடையே ஓர் அறிமுகமும், நட்பும் உருவாகிறது. எப்போதும் அவன் உட்புறமாகவும், இவர்கள் வெளிப்புறமாகவும் இருந்தபடியேதான் பேசிக்கொள்கிறார்கள்.

புதிதாகத் திறக்கப்பட்ட பீட்சா கடையின் நோட்டீசைப் படித்து அவன்தான், ’போன் செய்து ஆர்டர் செய்தால் பீட்சாவை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பார்கள்’ என்று சொல்கிறான். ’ரயில்வே டிராக்கில் கிடக்கும் கரித்துண்டுகளைப் பொறுக்கிக் கொண்டு போய்க் கொடுத்து ஒரு நாளைக்கு 10 ரூபாய் சம்பாதிக்கிறோம்’ என்று சின்ன காக்கா முட்டை சொல்லும் போது, ’அப்படியானால் 30 நாட்களில் நீங்கள் 300 ரூபாய் சேர்த்து பீட்சா சாப்பிட முடியும்’ என்று கணக்கிட்டுச் சொல்கிறான். அவன் அணிந்திருக்கும் புதிய உடைகள் மைலாப்பூர் சிட்டி செண்டரில் கிடைக்கும் எனும் தகவலையும் கொடுக்கிறான். இவர்களின் பீட்சா சாப்பிட வேண்டும் என்ற ஆசையை அவன் அறிவான். ஒருநாள் தன் வீட்டிலிருந்து ஒரு பீட்சா துண்டை வெளியே நிற்கும் இவர்களுக்காக எடுத்துக்கொண்டு வருகிறான்.

சின்ன காக்கா முட்டை அதை எடுத்துக்கொள்ள ஆவலோடு கைகளைக் கம்பிக்குள்ளாக நீட்டுகிறான். ஆனால், அது யாரோ சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்திருக்கும் உணவு என்பது பெரிய காக்கா முட்டைக்கு உறைக்கிறது. தம்பியின் கைகளைத் தட்டிவிட்டு, ’இது எங்களுக்கு வேண்டாம். நாங்களே பீட்சா வாங்கிக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறான். தம்பிக்கு அந்த உணர்வு என்னவென்பது புரியவில்லை என்றாலும், அண்ணனின் சொல்லை மதித்து கூடவே வந்துவிடுகிறான். அந்தச் சின்னஞ்சிறுவனின் சிந்தனைக்குள்ளும் சுயமரியாதையின் விதை எப்போதோ விழுந்து முளைத்திருக்கிறது.

’பசங்க’ ஒரு சிறார் சினிமா.

ஆனால் ’காக்கா முட்டை’ அப்படியானது மட்டுமல்ல. சிறார் உலகின் வழியே வர்க்க வேறுபாட்டு அரசியலைப் பேசும் பெரியோருக்கான சினிமா இது. 1997-ல் வெளியான ஈரானிய சினிமாவான ’சில்ட்ரன் ஆஃப் ஹெவன் (Children of heaven)’ இங்கே நம் நினைவுக்கு வருகிறது. அதில் அலி எனும் ஒரு சிறுவன், தன் தங்கை சாராவின் பழைய ஷூக்களைத் தொலைத்துவிடுகிறான். ஷூக்களில்லாமல் சாராவால் பள்ளிக்குச் செல்லமுடியாது. ஏழ்மையில் தவிக்கும் அந்தக் குடும்பத்தின் நிலையையும், அப்பாவின் மனப்போக்கையும் நன்கறிந்த அலி செய்வதறியாது திகைத்து நிற்கிறான். நல்லவேளையாக இருவரின் பள்ளி நேரமும் வேறாக இருக்கிறது. தன் அண்ணன் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக, அந்தத் தங்கை அண்ணனின் ஷூக்களைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போகிறாள். அவளின் பிஞ்சுக் கால்கள், தினமும் அலிக்காக தன் பள்ளி நேரம் முடிந்ததும் அரக்கப்பரக்க ஓடி வருகின்றன. அதைக்கொண்டுதான் அவன் பள்ளிக்குப் போக வேண்டும்.

அதைப்போலவே மாரத்தானில் கிடைக்கவிருக்கும் மூன்றாம் பரிசான ஷூக்களைக் குறிவைத்து, தங்கைக்காக அந்தச் சிறுவன் அலியின் கால்கள் ஓடுகின்றன. அவர்களுக்கிடையேயான அந்த உறவும், வறுமையைத் தாண்டிய செம்மையும் உலகெங்கும் கலை சார்ந்த சினிமா ரசிகர்களின் மனதை வென்றெடுத்தது. காக்கா முட்டையின் இரண்டு காக்கா முட்டைகளும், அலி மற்றும் சாராவுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை.

அந்த சிறுவர்களின் அப்பா சிறையில் இருக்கிறான். அதற்கான காரணம் படத்தில் சொல்லப்படவில்லை. இரண்டு சிறுவர்களையும், வயதான தன் மாமியாரையும் வைத்துக்கொண்டு அவர்களின் அம்மா அவ்வளவு வறுமையிலும் அந்த குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். இன்னொரு புறம் சிறையில் இருக்கும் தன் கணவனை மீட்க அவளால் முடிந்தவரை போராடிக் கொண்டிருக்கிறாள். இதற்கிடையே அந்த ஏரியாவிலிருக்கும் சிறார், கிரிக்கெட் விளையாடும் ஒரு காலியிடத்தில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்காக அங்கிருந்த ஒரு பெரிய மரம் வெட்டிச் சாய்க்கப்படுகிறது. அந்த மரத்திலிருந்த காக்காவின் கூட்டிலிருக்கும் முட்டைகளை உடைத்துக் குடிப்பதால்தான் அவர்களுக்கு சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்ற பட்டப்பெயர்களே வழங்கப்படுகின்றன. அந்தக் கேலிப் பெயர்கள் அவர்களைப் பாதிப்பதில்லை.

காக்கா முட்டை என்று தன் பிள்ளைகள் அழைக்கப்படுவதை விரும்பாத தன் அம்மாவிடமே வந்து, ’மை நேம் இஸ் சின்ன காக்கா முட்டை’ என்று வம்பிழுக்கிறான் சின்ன காக்கா முட்டை. அவனது நடையும், பேச்சும், கள்ளங் கபடமற்ற அப்பாவித்தனமான முகமும் நம்மையே வசீகரிக்கும் போது பெற்ற அம்மாவை என்னவெல்லாம் செய்யும்? மயங்கித்தான் போகிறாள்.

அந்தக் காலியிடத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய பீட்சா கடை திறக்கப்படுகிறது. அதை நடிகர் சிம்பு வந்து திறந்து வைக்கிறார். அந்தத் திறப்பு விழாவை வேடிக்கை பார்க்க வரும் இருவரும் சிம்புவைப் பார்த்த மகிழ்ச்சியைக் கத்திக் கூப்பாடு போட்டு வெளிப்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கே உரிய அறியாமை. சிம்பு ரசித்துச் சாப்பிடும் பீட்சா அவர்களையும் கவர்கிறது. விளம்பரங்கள் அவர்களை ஈர்க்கின்றன. இரண்டு பேரும் ஒரு பீட்சா சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அவர்களால் அதற்குரிய 300 ரூபாயைச் சேமிக்க முடிந்ததா? அதற்கு என்னவெல்லாம் போராட்டங்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது என்பது படத்தின் கதை!

சின்னக் காக்கா முட்டையாக ரமேஷ், பெரிய காக்கா முட்டையாக விக்னேஷ் நடித்திருந்தனர். இருவருக்கும் இது முதல் படம். ஆனால், தங்களுக்கு ஏன் சரியான முகவரி இல்லை என்று ஏற்படும் குழப்பம், தங்களின் ஆயாவுக்கு பீட்சா சுடத்தெரியும் என்று நினைக்கும் அந்த அப்பாவித்தனம், அது தோசை என்று தெரிந்தபிறகு அவர்களிடம் ஏற்படும் அந்தக் கோபம் என அந்தக் குடிசைப்பகுதியில் வாழும் சிறுவர்களாக நமக்குள் செம்மையாகப் பதிந்துபோனார்கள்.

அதற்காக இருவருமே சிறார் பிரிவில் நடிப்புக்கான தேசிய விருதுகளைப் பெற்றார்கள். அவர்களின் அம்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் அற்புதமான நடிப்பைக் கொடுத்திருந்தார். அந்த சமயத்தில் அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும் என்று வளர்ந்து வந்துகொண்டிருந்த இளம் ஹீரோயினான ஐஸ்வர்யா, இப்படி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக ஒரு குடிசைவாசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தனை இறுக்கமான வாழ்க்கைச் சூழலிலும் பிள்ளையை அழைத்துக் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சுகையில் அப்படி ஒரு பரிவு. குழந்தைகளின் ஆயாவாக சாந்தி நடித்திருந்தார். இன்னும் ஜோ மல்லூரி, பாபு ஆண்டணி, யோகி பாபு, ரமேஷ் திலக் போன்ற பலரும் நடித்திருந்தார்கள்.

தன்னுடைய இமேஜைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, வர்க்க பேதம் எப்படி ஏழைகளைப் பாதிக்கிறது என்பதைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசனாகவே தோன்றி நடித்தார் சிலம்பரசன். விண்ணைத்தாண்டி வருவாயா, காக்கா முட்டை போன்ற படங்கள்தான் சிம்புவை ஒரு திரைக்கலைஞன் என்று நிரூபிக்கின்றன.

படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் அத்தனையையும் எழுதியவர் நா.முத்துக்குமார். ’மாஞ்சாவே’ பாடலை ஸ்ரீஹரி, கானா பாலா பாடியிருந்ருந்தனர். ’கருப்பு கருப்பு’ பாடலையும், படத்தின் இறுதியில் வரும் ’எதை நினைத்தோம்’ பாடலையும் ஜிவிபி பாடியிருந்தார். இயக்குநரான மணிகண்டனே படத்தின் ஒளிப்பதிவையும் செய்திருந்தார்.

யதார்த்தமான (Realistic) பாணியில் ஒளிப்பதிவு கையாளப்பட்டிருந்தது. எல்லாப் பாடல்களுமே மாண்டாஜ் காட்சிகளாக படமாக்கப்பட்டிருந்தன. அதன் ஒவ்வொரு காட்சித்துண்டுமே அந்தக் குடிசை வாழ்க்கையில், காக்கா முட்டைகளின் இன்ப, துன்பங்களில் இருக்கும் இயல்பான அழகை பதிந்துவைத்திருந்தன. அந்த வாழ்விலிருக்கும் ஏழ்மையை, வறுமையை அவர் சித்தரித்திருந்த விதத்தில் மணிகண்டன் பரிதாபத்தைத் தூண்ட முயலவில்லை. அதே நேரம், அதை அவர் ரொமாண்டிசைஸ் பண்ணவுமில்லை.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ்க்காக தனுஷ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம்ஸ்க்காக வெற்றிமாறன் இருவரும் இணைந்து இந்த காக்கா முட்டையைத் தயாரித்திருந்தார்கள். படத்தின் கதை, திரைக்கதையை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருந்தவர் எம். மணிகண்டன். இது இவருக்கு முதல் படம். இதன் பிறகு இவர் இயக்கிய குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களும் பெரிதான விமர்சன வரவேற்பைப் பெற்ற படங்கள்தான். காக்கா முட்டைக்காகவும், கடைசி விவசாயிக்காகவும் இரண்டு முறை தேசிய விருதுகளைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் மணிகண்டன். காக்கா முட்டை இந்தியாவின் முக்கியமான விருதுகள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள சினிமா விழாக்களிலும் கலந்துகொண்டு பல விருதுகளைக் குவித்தது.

பெரிய காக்கா முட்டைக்கு ஒரு செல்போன் வேண்டும். சின்னக் காக்கா முட்டைக்கு அவர்களுடைய வீட்டில் ஒரு டிவி இருக்க வேண்டும். இருவருக்கும் ஒருமுறை பீட்சா சாப்பிட வேண்டும். அவ்வளவுதான் அவர்களுடைய கனவுகள். ஆனால், அந்தப் பீட்சாவின் விலையான 300 ரூபாய் என்பது அந்தச் சிறுவர்களின் ஒரு மாத உழைப்பு. இந்த நிலையில் புதிய ஆசைகள் எப்படி அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்பதும், அதை அடையவிடாமல் ஏற்றத்தாழ்வுகள் அவர்களை எப்படித் தடுக்கிறது என்பதும்தான் படம் பேசவரும் அரசியலாக அமைகிறது.

காக்கா முட்டை எந்த இடத்திலும் அதை ஒரு டாக்குமெண்டரியின் தொனியில் உரக்கப் பேசுவதில்லை. திறக்கப்படும் ஒரு பீட்சா கடையின் முகமாக ஒரு பெரிய நடிகர் இருக்கிறார். டிவியில் வண்ணமயமான பீட்சா விளம்பரங்கள் வருகின்றன. குழந்தைகள் அதைப் பார்க்கிறார்கள். சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது. நுகர்வோர் கலாச்சாரம், இலவசமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரை பேக்கேஜிங் எனும் தந்திரத்தின் மூலமாக வியாபாரமாக்கியதைப் போலவே, விற்க வேண்டிய பொருட்கள் எதுவானாலும், அதன் மீது உணர்வுகள் சார்ந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிடுகிறது. வைரம் என்றால் காதல், செல்போன் என்றால் பெருமை, குளிர்பானம் என்றால் மகிழ்ச்சி- இப்படி உணர்வுகளோடு பிணைக்கிறது. ஆனால், இது எதுவுமே உண்மையில்லை. உலகமயமாக்கலின் விளைவான இந்த நுகர்வோர் கலாச்சாரம் சகல உத்திகளையும் பயன்படுத்தி நம் மீது திணிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

ஒரே ஒரு பீட்சாவுக்காக பல நாட்களாக கஷ்டப்பட்டு அதற்காகப் பணம் சேர்த்த பிறகும் காக்கா முட்டைகளால் அதை அடைய முடியவில்லை. அடையாள அரசியலும், ஏற்றத்தாழ்வுகளும், முன்முடிவுகளும் அவர்களைத் தடுக்கின்றன, அவமானப்படுத்துகின்றன. இறுதியில் அவர்களது அவமானத்தைத் துடைக்கிறோம் எனும் போர்வையில், அதே பீட்சாவுக்கான விளம்பரத்துக்குள் காக்கா முட்டைகளும் பயன்படுத்திக் கொள்ளப்படுவதுதான் இன்னும் கசப்பான முரண்பாடு.!

Baththa: "சாய் அபயங்கர் நெப்போ கிட் கிடையாது; அவன் கடவுளின் குழந்தை!" - அட்லீ

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இ... மேலும் பார்க்க

Baththa: "இவர் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கணும்!" - 'பத்தா' சக்சஸ் மீட்டில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இன்... மேலும் பார்க்க

Baththa: "அந்த சீன்ல உண்மையாவே அழுதுட்டேன்!" - 'பத்தா' சபரியாக நடித்த சாய் ப்ரித்விராஜ்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்... மேலும் பார்க்க

Jailer 2: "இன்னைக்கு என்னென்னைக்கும் ஒரு தலைவன்தான்!" - 'ஜெயிலர் 2' டிரெய்லர் ஹைலைட்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவானது 'ஜெயிலர... மேலும் பார்க்க

மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​... மேலும் பார்க்க

`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்

குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்ந... மேலும் பார்க்க