தேமுதிக: ``2026 தேர்தலுக்குத் தயார், 234 தொகுதியும் எங்கள் இலக்கு" - பிரேமலதா கொ...
கேரள உள்ளாட்சித் தேர்தல்: ``மதவாத சக்திகளின் தீய திட்டங்களில் சிக்கிவிடக் கூடாது" - பினராயி விஜயன்
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள், 152 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 941 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுவதற்கான தேர்தல் இது.
மொத்தமுள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளில் 23,576 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் கருத்து தெரிவித்த கேரளாவை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், "இந்த உள்ளாட்சி தேர்தலில் சரித்திர முன்னேற்றம் ஏற்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் உள்ளாட்சிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சுமார் 30 ஆண்டுகளாக சி.பி.எம் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி உள்ளது. 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
அதில் 50 வார்டுகளை கைப்பற்றியது பா.ஜ.க கூட்டணி. கேரள மாநில சரித்திரத்தில் முதன் முறையாக பா.ஜ.க ஒரு மாநகராட்சியில் பெரும்பான்மை பெற்றுள்ளது. 2020 உள்ளாட்சி தேர்தலில் 53 சீட்டுகளை பெற்ற சி.பி.எம் கூட்டணி இப்போது 29 சீட்டுகளை பிடித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 19 வார்டுகளை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த தேர்தல் முடிவு குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திருவனந்தபுரம் மாநகராட்சியில் என்.டி.ஏ கூட்டணியின் வெற்றி, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயம்.
எதிர்பார்த்தபடி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரிய முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. அதற்கான காரணங்கள் ஆராயப்படும், தேவையான திருத்தங்களைச் செய்த பிறகு இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னேறிச் செல்லும்.
மதவாத சக்திகளின் தீய திட்டங்களில் மக்கள் சிக்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இந்தத் தேர்தல் முடிவு உள்ளது. இது மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." எனத் தெரிவித்திருக்கிறார்.











